Tuesday, June 26, 2012

எனக்கான சவப்பெட்டி


எனக்கான
சவப்பெட்டியைத்
தினம் தினம்
வெவ்வேறு
வடிவில்
உருவாக்குகின்றன
உன்
நினைவுகள்

நீ - நான்


நீருக்குள் 

வீசிய 


வெடி குண்டாக


இதயத்தின் 


ஆழத்தில்


நீ வெடித்துச் 

சிதறியதோ

நான்!
Monday, June 25, 2012மீனாகப் பன்றியாக மிதக்கின்ற ஆமையாக
மேலான அவதாரங்கள் - பத்தும்
தேனாக இனிக்கிறதாம் தேடுகின்றேன் அவற்றுள்ளே 
தெய்வப்பெண் ஒன்றில்லையே
வீணான ஆதிக்க எண்ணத்தால் பெண்ணினத்தின் 
வேரறுத்துப் போட்டனரே 
ஆனாலும் தாய்தெய்வம் அன்புதனை சுமந்திங்கு 
ஆறாகப் பாய்கின்றதே

Saturday, June 23, 2012

தாய்


காரை மண் சிமெண்ட் அடிக்கல் இன்றி
கால்கள் இரண்டில்
கருவறை சுமந்து
காதல் குழந்தையை
கடவுளாக்கி
ஒன்பது மாதம்
உதிர நெய்யும்
உயிர்மலர்ப்பூவும்
உணர்வுடன் பெய்து
வேள்வி நடத்தும்
ஒப்புயர்வில்லா
ஒருதனி பக்தை

தாய் 

Tuesday, June 19, 2012

தொலைதூர நண்பன்!
உடைந்து
நொறுங்கும் போதெல்லாம்
அள்ளியெடுக்க
உன்
கரம் வேண்டும்
என்னருகில்!

இமைக்கரை
உடையும் போதெல்லாம்
அணை போட
உன்
சுட்டுவிரல்
வேண்டும்
என்னருகில்!

துவளும் போதெல்லாம்
சுகமாகச்
சாய்ந்து கொள்ள
உன்
உன் தோள் வேண்டும்
என்னருகில்!

என்றாலும்
என்றென்றும்
என்
தொலைதூர
நண்பனாக
நீ வேண்டும்!
 

Friday, June 15, 2012

மரணித்தும்


கண்டவர் விண்டதில்லை
விண்டவர் கண்டதில்லை
என்று
கூறுவதெல்லாம்
சுத்தப் பொய்
உன்
வார்த்தைகளின்
மெளனத்தால்
மரணித்தும்
உயிர்த்திருக்கிறேனே!

அவனுக்கு அவள்

அகோரப் பற்களுடன்
நீண்ட நாவுடன்
கைகளில்
சூல்மும்
கத்தியும்
ஈட்டியும்
உடுக்கையும்
இல்லாத
அழகான
காளியாகக்
காட்சியளிக்கிறாள்
அவனுக்கு
அலுவலகத்தில்
மேலாளர் 
இருக்கையில்
அமர்ந்திருக்கும்
அவள்


Saturday, June 9, 2012

சவங்கள்!
என்றோ
மாய்ந்து போன
காதலின்
சுவடுகளை
சவக்குழியில்
புதைக்க நினைக்கிறேன்.


அறிவுப் பாடையில்
அரங்கேறிய
ஆயிரமாயிரம்
அணுக்களில் இருந்தும்
பிடுங்கி எடுத்த
நினைவின்
நீண்ட நெடிய
கடைசி
 ஊர்வலத்திற்கு


இதயம்
அடிக்கிறது
தாரை தப்பட்டை
கண்கள்
கன்னத் தெருவெங்கும்.
மத்தாப்புப்
பூக்களை
உதிர்க்கிறது


நாவின்
புலம்பல்
நர்த்தனத்துடன்
இறுதிச்சடங்கு
நடக்கிறது


என்னுள்ளிருந்து
இடம்பெயர்ந்தது
அந்த நாட்கள்
என்றிருக்கும்போது


பிரேதப்
பரிசோதனைக்காகத்
தோண்டி எடுக்கப்படும்
பிணங்களாய்
மீண்டும்
மெல்ல மெல்ல
மேலெழுகின்றன
நினைவுச் சவங்கள்!

ஆசை முகம் மறந்து போச்சே.... மகா கவியின் அழகான காதல் பாடல்

Thursday, June 7, 2012

ஆங்கில மோகம்


அரிச்சுவடியில்
அழகாய்
சிரிக்கும்
அம்மா
நேரில்
அடிக்க வருகிறாள்
அம்மா என்றதால்!

Sunday, June 3, 2012

தமிழின் தலைமகனுக்கு ஒரு வாழ்த்து


கல்லணை தந்தான் சோழன்
கனித்தமிழ் செழிக்க மேடை
சொல்லணை தந்தாய் நீதான்
சுவையணை வரியில் வைத்தாய்
பல்லணை பயிர்க்குத் தந்தாய்
பழந்தமிழ் நீயே காத்தாய்
நெல்லணை தஞ்சை வளத்தை
நிதம்நிதம் நாட்டில் வார்த்தாய்

அஞ்சுகத் தாயின் மைந்தா
ஐம்முறை ஆட்சி கண்டாய்
நஞ்சிடும் வைதீ கத்தின்
நரம்பினை அறுத்துச் சாய்த்தாய்
கொஞ்சிடும் ச்ங்கப் பாட்டைக்
குப்பனும் கேட்க வைத்தாய்
அஞ்சிடும் பெரியார் தொண்டின்
அனலென பகையைத் தீய்த்தாய்

அண்ணனின் கொள்கை காத்தாய்
அவர்புகழ் உலகு சேர்த்தாய்
தென்னவர் பண்பாட் டுக்குக்
திருக்குறள் கோட்டம் கண்டாய்
கண்ணகி சிலம்பைக் காட்டும்
கடற்கரை சிலையை வைத்தாய்
தண்டமிழ் தலைவா நீயும்
தரைகடல் காலம் வாழ்க!


Friday, June 1, 2012

மின்னல் வெட்டி இதயம் கிழிகிறதே!!!மேகத்துக்குள்
ஒளிந்திருக்கும்
மின்னல் வெட்டி
வானம்
கிழிவதில்லை

உன்
இமைகளுக்குள்
ஒளிந்திருக்கும்
மின்னல் வெட்டி
இதயம்
கிழிகிறதே
எப்படி?