Sunday, June 25, 2017

ஆண்மையில் பெண்மை


தான் சுகித்த
மலர்களின்
மழலைகளைக்
கால்களில்
சுமந்து சென்று
வளர்க்கும்
பேரன்பு
தும்பிகள்
ஆண்மையின் அடையாளம் அல்ல
தாய்மையின் நிரூபணம்

Thursday, June 22, 2017

குழந்தைகளற்ற வெறுமையில் தட்டான்கள்


துரத்திப் பிடிக்கவும்
வால் பிடித்து சீண்டவும்
சிறகுகளைப் பிடித்து
உள்ளங்கையில்
சிறைப்படுத்தவும்
குழந்தைகளற்ற
வெறுமையில்
பறந்து கொண்டிருக்கின்றன
மழை காலத்துத்
தட்டான்கள்!

Saturday, June 3, 2017

‘ஆதிராவின் கவிதை உலகம்’ - பேராசிரியர். முனைவர். இரா.மோகன் - மதுரைஎன் கவிதை உலகினைத் தம் பொற்கரங்களால் வரைந்துள்ளார் - மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் தமிழியற்துறை முன்னைப் பேராசிரியர் இரா. மோகன் அவர்கள்
***************************************************************************************
என் கவிதை நூலுக்கு மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் முன்னைத் தகைசால் பேராசிரியர் முனைவர். இரா.மோகன் அவர்களின் அழகான கருத்துரை.
18/01/2017 அன்று உலகத்தமிழ்ச்சங்கம் நடத்திய திருக்குறள் மாநாட்டில் கலந்து கொண்டு நானும் கட்டுரை வாசித்தேன். அப்போது என் கவிதை நூலினை, பேராசிரியர் இரா.மோகன் அவர்களிடம் கொடுத்தேன். அந்த விழாவினை
உலகத்தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து வடிவமைத்தவர் அவர்தான்.
பெரும்பான்மையினர் நூல் கொடுத்தால் வாங்கி பிறருக்கு அன்பளிப்பாகக் கொடுப்பர். இல்லாவிட்டால் வீட்டு நூல் அடுக்கில் அதுவும நூல்களோடு நூலாக ஒளிந்து கொள்ளும். ஆனால் பேராசிரியர் மோகன் ஐயா அவர்கள் உடனடியாகப் படித்து அந்நூல் குறித்து தம் பார்வையை ‘ஆதிராவின் கவிதை உலகம்’ என்று தலைப்பிட்டு எழுதி எனக்கும் ஒரு சிற்றிதழ்களுக்கும் அனுப்பி உள்ளார். அக்கட்டுரை தமிழ் ஆர்த்தர்ஸ்.காம் என்னும் வலைத்தளத்திற்கும் அனுப்பி உள்ளார். அலைபேசியில் அழைத்து மகிழ்ச்சி பொங்கும் குரலில் “நூலினைத் திறந்து பார்த்தேன், உடனே எழுது என்று நான்கைந்து கவிதைகள் என்னை அழைத்தன. எழுதிவிட்டேன் என்று என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்.
நினைத்துப் பார்க்காத அளவுக்கு அழகான உலகமாக என் கவிதை உலகத்தைத் தங்கள் கரங்களால் வரைந்துள்ளீர்கள். தங்கள் பொற்கரங்களால் உச்சி முகரப் பட்ட இத்தருணம் என் வாழ்வில் மறக்க இயலாத பொன்னான தருணம். இந்தத் தருணத்தை சாத்தியப் படுத்திய, தங்கள் அன்புக்கு ஈடாக என்ன செய்ய இயலும் இந்தச் சின்னவளால் என்று தெரியவில்லை. அன்பைத் தவிர வேறு எது அன்புக்கு ஈடாக இருக்க இயலும். என் மனம் நிறைந்த அன்பையும் நன்றியையும் மலர்களாக்கி அனுப்பியுள்ளேன். மனம் நிறைந்த நன்றிகள் ஐயா

கட்டுரையைக் காண இங்கே சொடுக்கவும்.
Friday, June 2, 2017

நீதி காக்கின்ற அறத்துப் பால்! கலைஞர் வாழ்த்துகல்லணை தந்தான் சோழன்
           கனித்தமிழ் செழிக்க மேடை
சொல்லணை தந்தாய் நீதான்
          சுவையணை எழுத்தில் வைத்தாய்
பல்லணை பயிர்க்குத் தந்தாய்
          பழந்தமிழ் நீயே காத்தாய்
நெல்லணை தஞ்சை வளத்தை
           நிதம்நிதம் நாட்டில் வார்த்தாய்
அஞ்சுகத் தாயின் மைந்தா
          ஐம்முறை ஆட்சி கண்டாய்
நஞ்சிடும் வைதீ கத்தின்
          நரம்பினை அறுத்துச் சாய்த்தாய்
கொஞ்சிடும் சங்கப் பாட்டைக்
         குப்பனும் கேட்க வைத்தாய்
அஞ்சிடும் பெரியார் தொண்டின்
        அனலென பகையைத் தீய்த்தாய்
அண்ணனின் கொள்கை காத்தாய்
        அவர்புகழ் உலகு சேர்த்தாய்
தென்னவர் பண்பாட் டுக்குக்
          திருக்குறள் கோட்டம் கண்டாய்
கண்ணகி சிலம்பைக் காட்டும்
         கடற்கரை சிலையை வைத்தாய்
தண்டமிழ் தலைவா நீயும்
         தரைகடல் காலம் வாழ்க!
திரைத்தமிழ் செழித்த துன்னால்
        திருக்குறள் இனித்த துன்னால்
மறைத்தமிழ் மடிந்த துந்தன்
        முரசொலி முழக்கத் தாலே
நிறைத்தமிழ் நிலவே! உந்தன்
       ‘நெஞ்சுக்கு நீதி’ என்னும்
பறைத்தமிழ் ஒன்றே போதும்
        பைந்தமிழ்த் தாய்க்குச் சீர்நீ!
முதுத்தமிழ்க் காப்பி யத்தை
       முழுவதும் செதுக்கிப் புத்தம்
புதுத்தமிழ்ப் பூங்கா செய்தாய்
        புற்களும் புறம்அகம் என்னும்
மதுத்தமிழ் மாந்தச் செய்தாய்
        மலைத்தமிழ் படைத்து, நீதான்
இதுதமிழ் வாழ்வு என்னும்
        இருமாப்புக் கொள்ளச் செய்தாய்
இளைஞனாய் இருந்த போதே
        இந்தியை எதிர்த்தாய், மீனின்
வலைஞர்கள் மறும லர்ச்சி
         வாரியம் சமைத்தாய் காட்டுப்
புலைஞரின் கடனைத் தீர்த்து
         புத்தொளிர் வாழ்வு தந்தாய்
கலைஞரே! கருணா! நீதி
         காத்திட்ட அறத்தின் பாலே!
ஆளவே மீண்டு வந்தாய்
        அரியணை ஆறுஉ னக்கே
கோளது மாறிட் டாலும்
        கொள்கையில் மாறா வேந்தே!
ஊழது பொய்த்தி டாது
         உன்னர சாட்சியி னிமேல்!
மீளவும் நூறு ஆண்டு
        மிகைநலத் தோடு வாழ்வாய்1

இன்று பிறந்தநாள் காணும் தலைவா! முத்தமிழ் அறிஞா! வாழ்க நீ இன்னும் ஓர் நூறாண்டு