Friday, April 24, 2020

அக விடுதலையே பெண் விடுதலை - நூல் விமர்சனம்



பெரும் புயல் அடித்து ஓய்ந்தது போல


     அக விடுதலையே பெண் விடுதலை என்னும் பேராசிரியர் முனைவர் நளினிதேவியின் நூல் வெளியீட்டு விழாவில் வாழ்த்துரைக்க அழைக்கப் பெற்றேன். வாழ்த்தும் பேறு பெற்றேன். நூலும் பெற்றேன். படிப்பதற்குக் காலம் கொடுக்காத வாய்ப்பை இந்த ஊரடங்கு தந்தது. முழுவதும் வாசித்த பின் அதைப் பற்றி எழுதாமல் இருப்பது எப்படி? எழுதி விட்டேன். அந்த முதுமைக்குள் இவ்வளவு இளமையா? இவ்வளவு கட்டுடைப்பா? இவ்வளவு புரட்சி சிந்தனையா? உள்ளத்தில் பெரும் புயல் அடித்து ஓய்ந்தது போல இருந்தது நூலைப் படித்து முடித்த அந்த பொழுது.

உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகுமாம் செவியில் ஒலி இல்லை. இதழ்களிலும் ஒலி இல்லை. ஆனால் உள்ளத்து ஒளியால் பெண்களின் இருண்ட வாழ்வுக்கு எழுத்தால் வெளிச்சம் பாய்ச்சி இருக்கின்றார் முனைவர் நளினிதேவி அவர்கள். தந்தை பெரியாரின் வழி வந்தவர் என்பதும் உள்ளும் புறமும் பெரியாரின் கொள்கைகளைச் சுமந்தவர் என்பதையும் நாடறியும். சமுதாயம் பயனடைய நற்கருத்துகளைக் கூறும் எவரும் பெரியாரே. அவ்வகையில் பெண் சமுதாயம் போற்றி வணங்கக் கூடிய இன்னொரு பெரியார் பேராசிரியர் நளினிதேவி அவர்கள் என்பேன் சத்தமாக.

. புற விடுதலையான கல்வி உரிமை, சொத்துரிமை, பொருளாதார விடுதலை, திருமண விடுதலை, பாலியல் விடுதலை ஆகியவற்றைப் பெறுவதே பெண் சமத்துவத்திற்கு முதல் படியாக இருக்கும் என்று அவற்றுக்காகப் போராடினார் பெரியார். நளினிதேவி அவர்கள் புற விடுதலைகள் அனைத்தையும் பெற்றாலும் பெண் தன் அகத்திலிருந்து தான் விடுதலை பெற்றால் ஒழிய அவள் முழுமையான விடுதலைப் பெற்ற பெண்ணாக இருக்க முடியாது. ஆகவே பெண் முதலில் தன்னிடமிருந்து விடுதலை பெற வேண்டும். அப்படி அவள் விடுதலைப் பெற வேண்டுமானால் அவள் அடிமைப்பட அடிப்படை காரணங்களான கற்பு மற்றும் பாலியல்  கருத்தாக்கங்கள் பற்றிய தெளிவான சிந்தனை அவளுக்கு வேண்டும் என்பதால் எழுத்து மூலமாகப் போராடிவருபவர் பேராசிரியர் நளினிதேவி. 

பெண் தன் சுய தரிசனத்தைத் தெளிவாகப் பார்க்கும் ஓர் கண்ணாடியாக அக விடுதலையே பெண் விடுதலை என்னும் இந்நூலைப் பேராசிரியர் நளினிதேவி படைத்துள்ளார். மிகத் துல்லியமாகக் கூறுவதென்றால் இந்நூல் ஒரு கணிப்பான்(calculator).. இந்நூலின் ஒவ்வொரு பகுதியையும் படித்து முடித்தவுடன் ஒவ்வொரு பெண்ணும் தான் எந்த இடத்தில் இருக்கிறாள் அல்லது தான் எந்த அளவு விடுதலை பெற்ற பெண்ணாக இருக்கிறாள் என்று துல்லியமாகக் கணக்கிட்டுப் பார்க்க உதவும் நூல் இந்நூல்.

 அக விடுதலை என்பது என்ன? ஆணின் உடைமை பெண். அவன் மனம் கோணாமல் நடப்பதே பெண்ணின் கற்பு வாழ்க்கை என்பது போன்றதான, காலம் காலமாகப் பெண் பார்த்தும் கேட்டும் கற்றும் கொண்ட கற்பு விழுமியங்கள் அவளை அடிமைப் படுத்தி உள்ளன. கல்வி, வேலை, பொருளாதாரம் போன்றவற்றில் விடுதலை பெற்ற பெண்களும் நளாயினி, சாவித்திரி, பாஞ்சாலி, சீதை, கண்ணகி என்னும் கற்பிதங்களால் தானும் கற்புக் கரசியாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். அதில் பெருமிதமும் கொள்கின்றனர். இன்றும் பெண் கற்பு என்னும் போதைக்கு ஆழ் மனத்தில் அடிமைப் பட்டே இருக்கிறாள். அப்போதையில் இருந்து அவள் விடுதலை பெறுவதே அக விடுதலை என்பது.

2010 ஆண்டு குமுதம் ஹெல்த் இதழில் ‘இலக்கியத்தில் மருத்துவம்’ என்னும் தலைப்பின் என் தொடர் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதில் காம நோய்க்குக் கண்கண்ட மருந்து என்று ஒரு கட்டுரை எழுதினேன். அப்போது எனக்கு வந்த கருத்துரைகளில் மருத்துவர் ஷாலினிக்கு அப்புறம் ஒரு பெண்மணியிடம் இப்படிக் கட்டுரை வருவது இதுதான் முதல் முறை என நினைக்கிறேன்” (http://tamilnimidangal.blogspot.com/2010/12/blog-post_13.html என் வலைப்பூவில் இடம்பெற்ற கருத்துரை) என்று ஏதோ எழுதக் கூடாத விஷயத்தைத் தைரியமாக எழுதி விட்டதைப் போல வியந்து பாராட்டியவர்கள் அதிகம். பேராசிரியர் அவர்கள் காமம், பாலியல் போன்ற பேசாப் பொருளைப் பேசத் துணிந்திருப்பதும் பெண்கள் தைரியமாகப் பேச வேண்டும் என்று கூறுவதும் பெண்கள் அக விடுதலை பெறுவதற்கு பேராசிரியர் நளினிதேவி அவர்கள் அமைத்துத் தந்துள்ள ராஜ பாட்டை எனலாம். பேசாப் பொருள் என்பது இதுநாள்வரை பெண்கள் வெளிப்படையாகப் பேசாது உள்ளத்தில் வைத்துக் குமுறிக்கொண்டிருக்கும் மேற்சொன்ன பொருள்களே.

கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலன்களின் இன்பம் பெண்ணிடத்தே உள்ளது. ஆனால் அந்த இன்பங்களைப் பற்றி பெண் பேசக் கூடாது என்பது ஆண்கள் பெண்ணுக்குச் செய்த சதி. காம உணர்வு, பாலியல்  விடுதலை பற்றி பெண்கள் பேசுவது அவர்களின் அக விடுதலை பயணத்தின் முதல் அடி வைத்தல். பெண்கள் அக விடுதலைப் பெற தடைக்கற்களாக இருப்பவை, அவர்களிடம் ஊறிப்போய்விட்ட ‘அடக்கும் இயல்பு ஆணுடையது அடங்கும் இயல்பு பெண்ணுடையது’ என்னும் மரபும் ‘வினை ஆடவர்க்கு உயிர். ஆடவர் பெண்களுக்கு உயிர்’ என்னும் பழம் பஞ்சாங்கமும் என்னும் கருத்தை நூல் முழுவதும் அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்துள்ள பேராசிரியரைப் புரட்சிப் பெண் என்று போற்றத்தான் வேண்டும்.

ஆணின் ஐம்புலன் இன்பங்களுக்காப் படைக்கப் பட்டவள் பெண் என்று வள்ளுவர் காலம் தொட்டு பயிற்றி வந்த சிந்தனை தூக்கி எறிய வேண்டிய குப்பைசிந்தனை அல்லவா? காதலும் காமமும் ஆண்களுக்கானவை  என்பதை எப்படி ஏற்பது? கல்லறை போகும் வரை பெண் தன் காதலையும் காமத்தையும் தனக்குள் புதைத்துக் கொண்டு நடமாடும் கல்லறையாக வாழ வேண்டுமா? என்று அடுக்கடுக்காகக் கேள்விகள் கேட்டு மரபு என்று பேணப்படும் யாவற்றையும் கட்டுடைக்கிறார்?

அச்சம், மடம், நாணம் பயிர்ப்பு, பாவம், புண்ணியம், சொர்க்கம் நரகம், மேலுலகு, கீழுலகு, பிறவி, வழிபாடு, உண்ணாநிலை என்று ஆண்களின் வசதிக்காக சட்டங்கள் வகுக்கப் பட்டு பெண்ணின் துணிவு, பெருமிதம் அறிவு முதலானவை முடக்கப் பட்டிருப்பதை, ஆண்களால் வடிக்கப் பட்ட கற்புக் கரசிகளின் கதைகள் பேசும் புராணங்கள் பெண்களை மேலும் அடிமை ஆக்கின என்று குமுறும் நளினிதேவி, அதன் எதிரொலியாக, எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே என்று மன்னன் முன்பு துணிவாகப் பேசிய ஒளவையார் வரலாறு மறைக்கப் பட்டதும் பெண்கள் காதல் வேட்கையை வெளிப்படுத்தக் கூடாது என்னும் கொள்கையை மீறி காதல் வேட்கையை வெளிப்படுத்திய ஆண்டாள் பாடிய காதல் பாடல்களை ஆண்டாள் பெயரில் பெரியாழ்வார் பாடியவை என்று இருட்டடைப்பு செய்ததும் தன்னை விட அழகும் திறமையும் அறமும் நிறைந்த பெண்ணான புனிதவதியாரோடு (காரைக்காலம்மையா) வாழ விரும்பாது அவளைப் பேய் என்றதும் திட்டமிட்டதே. இத்திடமிடல் எல்லாம் ஆண்களின் அச்ச உணர்வால் எழுந்ததே என்பதை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.

கற்பை பொதுவில் வைக்க வேண்டும் என்று கூறும் பாரதியிடம் இல்லாத கற்பை எப்படி பொதுவில் வைப்பது என்று கேள்விக்குள்ளாக்கி சிந்திக்க வைக்கிறார். விதவைத் துயர் களையப் பாடியவர் பாரதிதாசன் என்று ஒரு முகமாக எல்லோரும் புரட்சிக் கவிஞரின் பெருமை பேசிக்கொண்டிருக்க பெண் தனியாக வாழக்கூடாது என்ற ஆணியச் சிந்தனையின் வெளிப்பாடே கோரிக்கையற்று கிடக்குது வேரில் பழுத்த பலா என்னும் கவிதை என்று புதிய கோணத்தில் சிந்திக்கச் செய்துள்ளார் பேராசிரியர்.

பெண்கள் சுமந்தலையும் பொருந்தாத மரபுகளும் தேவையற்ற கட்டுப்பாடுகளும் காலக்கெடு முடிந்தவை. அவற்றைப் பின்பற்றுவதால் பெண்ணடிமை நோய் அதிகமாகுமே தவிர நோயைப் போக்காது. எனவே கற்பு என்னும் கயமை நிறைந்த கட்டுக்கதையை, மரபு என்னும் மாயத்தை முழுமூச்சுடன் அகற்ற வேண்டும் என்று கூறுகின்றார். 

பேராசிரியர் முனைவர் நளினிதேவியின் சிந்தனைகள் பெண்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும். ஒளியேற்றும். “கூண்டுக்குள் முடக்கப் பட்ட பறவையாய் பெண், இன்று கல்விக் கண் திறக்கப் பட்டுச் சிறகு முளைக்கிறாள். நீண்ட பல காலமாக முடக்கப் பட்ட சிறகுகள் என்பதால் வெகு தொலைவு பறக்க இயலவில்லை! முடங்கியிருந்த காலத்திலேயே பாதி சிறகுகள் உதிர்ந்து விட்டன. உதிர்க்கப் பெற்ற சிறகுகள் முழுமையாய் முளைக்க இன்னும் சில நாட்கள் ஆகவே செய்யும்., அதுவும் இன்னும் சிறிது காலமே….. என்று நம்பிக்கை ஊட்டும் எழுத்துகளால் பெண்களை அணைத்துக் கொள்கின்றார். அகவிடுதலைக்கான சூடேற்றுகின்றார். பெண்கள் அக விடுதலை பெறுவார் என்னும் நம்பிக்கையோடு…… தலை தாழ்த்தி வணங்குகிறேன்………


பேராசிரியர் முனைவர் ஆதிரா முல்லை
எழுத்தாளர், கவிஞர்