Wednesday, April 20, 2016

காதல் என்ன குறுக்கெழுத்துப் போட்டியா


காதல் என்ன 
குறுக்கெழுத்துப் போட்டியா
விடுபட்ட கட்டங்களை
நான்கு ஐந்து ஆறு 
என்று
எழுத்துகளைக் கொண்டு நிரப்பி விட
இடமிருந்து வலம்
வலமிருந்து இடம்
கீழிருந்து மேல்
மேலிருந்து கீழ்
மட்டுமல்ல
கட்டங்களை விட்டு விட்டு
நிரப்பினாலும்
அதில்
உன் பெயரை மட்டும்தான்
எழுத முடியும்
அந்தப் பெயருக்குப்
பொருத்தமில்லாத கட்டங்கள்
காலியாகவே
இருந்து விட்டுப் போகட்டுமே!

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?
*****************************************************************************
தமிழ்த் துறையில் என்னுடன் டாக்டர் சாரதா என்பவர் பணி புரிந்து கொண்டிருக்கிறார். அவர் பணியில் சேர்ந்து சில மாதங்களே ஆனாலும் பல வருடங்கள் பழகியது போல ஒரு நெருக்கம். அத்தனை அன்பானவர். அவர் சில நாட்களாக விடுப்பில் உள்ளார்.

அவர் என்னை அழைத்துப் பேசினார். நலமாக இருக்கிறீர்களா என்று வழக்கமாகப் பேச்சைத் தொடங்கினார். நானும் நலம்தான் என்று கூறினேன். அவர் மீண்டும் மீண்டும் நலமாக உள்ளீர்கள் தானே என்று கேட்டார். நானும் ஆமாம். ஏன் கேட்கிறீர்கள் என்று கேட்டேன். அவர், இரண்டு நாட்களாகக் கனவில் வந்து என்னைத் துன்பப் படுத்துகிறீர்கள் என்றார். எப்படி? என்றேன்.
“நீங்க ஆஸ்பிடல்ல இருக்கீங்க. நானும் என் மகளும் உங்களப் பார்க்க வர்ரோம். நீங்க குழந்தையக் கூட்டிட்டு ஏன் வந்தீங்க?குழந்தையக் கூட்டிக் கொண்டு ஏன் வந்தீங்க? கிளம்புங்கன்னு திரும்பத் திரும்ப சொல்லிட்டே இருக்கீங்க. முதல் நாள் என்னமோ உங்கள் நினைவு என்று விட்டு விட்டேன். நேற்றும் திரும்ப அதே கனவு. எனக்கு மனசே சரியில்ல. என்னவோ பயமா இருந்தது” என்றார்.
கனவுகளுக்கும் பிரியங்களுக்கும் தொடர்பு உண்டு என்பதை நாம் அறிவோம். ஆனால் கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு இருக்குமான்னு யாராவது சொல்லுங்க.
ஏன் என்றால் கடந்த செவ்வாய் (12.04.16) காலை நான் இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி (எலும்பு முறிவு போன்ற) பெரிதாக ஒன்றும் இல்லை என்றாலும் உடல் முழுவதும் அடி பட்டு ஒரு வாரமாக ஓய்வில்தான் இருக்கிறேன். கல்லூரியும் செல்லவில்லை. 13 ஆம் தேதி மக்கள் கவிஞர் விருது வழங்கும் மிகப்பெரிய நிகழ்வு ஒன்று. அதற்கும் செல்லவும் சொல்லவும் முடியாத நிலையை ஒருவாறாக வீட்டில் இருந்தபடியே சமாளித்தேன் என்பது வேறு. இன்னும் தோள் பட்டை, கை வலியோடும் மருந்துகளோடும் ஓய்வோடும் வீட்டில் இருக்கிறேன்.
அந்தத் தோழி இப்போது ராஜ பாளையத்தில் இருக்கிறார். வியந்தும் பயந்தும் வந்தவுடன் என்னப் பார்க்க வேண்டும் என்று கூறியும் பேச்சை முடித்தார்.
இப்போது என் மற்றும் அவரது வியப்பெல்லாம் கனவு பற்றியது.... (நமக்கு அந்த மூட நம்பிக்கையெல்லாம் இல்லை என்றாலும்) நான் மருத்துவ மனை சென்றதற்கும் அவரது கனவுக்கும் தொடர்பு உண்டா? தெரிந்தவர்கள் கூறுங்களேன்.

Thursday, April 7, 2016

மீரா விருது வழங்கும் விழாவில்....

பல நிகழ்வுகளில் கலந்து கொள்கிறோம். ஒரு சில நம் மனத்தை விட்டு நீங்கா நினைவாகி மகிழ்வைத் தருகின்றன. மதுரையில் 03.04.16 ஞாயிறு அன்று வளரி இதழும் சூல் வாசிப்புத் தளமும் இணைந்து நடத்திய கவிப்பேராசான் மீரா விருது வழங்கும் நிகழ்வின் அதிர்வு இன்னும் மனத்தை விட்டு நீங்காமல் பசுமையாக உள்ளது. விழாவைச் சிறப்பாக நடத்திய திரு அருணா சுந்தரராசனின் அன்பும் பழகும் நேர்த்தியும் மனத்தில் அவருக்கு ஒரு அழுத்தமான இடத்தைத் தர வைத்து விட்டது.

நிகழ்வில் கவிஞர் மீராவைப் பற்றி நினைவுப் பேருரையாற்றிய பேரா. தி.சு.நடராசன் அவர்கள் விழியோரம் நீரை வர வைத்தார். தலைமையுரையாற்றிய திரு செல்லா அவர்கள் சுருக்கமான உரையாற்றினார். முத்துநிலவன் ஐயா உடபட வாழ்த்துரை வழங்கிய பலரும் உருக்கமாக உரையாற்றினர்.

விழா தொடங்கும் முன்பும் தொடங்கிய பின்பும் ஒவ்வொருவரும் தனித்தனியாக அறிமுகம் செய்து கொண்டு அளவாளாவியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது..

விருதாளர் மு. கீதா, தமிழ்வாசி ( வைரஸ் தாக்குதலில் இருந்து என் முகநூலைக் காக்க வலையில் உதவிய அன்புத் தம்பி), வைகறை, போடி சிவாஜி, அர்ஷியா, சோலைச்சி, இரா. ஜெயா, ராம்போ குமார், ரபீக் ராஜா மற்றும் பல நட்புகளைச் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக.... (பலரது பெயர்கள் நினைவில் இல்லை. நட்புகள் மன்னிக்கவும்)

அருமையானதொரு நிகழ்வை அமைத்துக் கொடுத்த (விருது வழங்கி சிறப்புரை) அருணா அவர்களுக்கு உள்ளங்கை கொள்ளாத நன்றி மலர்கள்.

எதோ நான்கு புகைப்படங்கள் அனுப்புவார் என்று என் மின்னஞ்சல் முகவரி கொடுத்தால் புகைப்படக் கருவியில் பதிவான அத்தனை ஒளிப்படங்களையும் அனுப்பி என்னை அதிர்ச்சியில் ஆழ்த்திய சாப்லின் ஸ்டுடியோ கோபாலகிருஷ்ணன் ஆழமான நேசிப்புக்குரியவர்.