Monday, November 26, 2012

கற்களையே எறிந்து கொண்டுஒவ்வொரு பெண்ணின் மீதும்
கற்களையே
எறிந்து கொண்டிருக்கின்றன
அன்றைய
“வதனமே சந்தர பிம்பமோ”
தொடங்கி
இன்றைய
“வேணாம் மச்சான் வேணாம்
இந்தப் பொண்ணுங்க காதலு”
வரையில்

Sunday, November 25, 2012

வாரிசுவாரிசு

பொன்னை உருக்கித்
தாலி தந்த
கணவனுக்குத்
தன்னை உருக்கி
தாரம் தருவது

Wednesday, November 21, 2012

பிரிகள்
வரவுக்கும் 
செலவுக்கும்
இடையேயான
இழுவைப் பந்தயத்தில்
இழுகயிறாய் 
மாட்டி நைந்து போகிறது
பாசம் பந்தம்
என்னும்
உறவுப் 
பிரிகளெல்லாம் 

Tuesday, November 13, 2012

நினைவுகளைச் சாப்பிட்டுக் கொண்டு!


சாப்பிட்டாயா 
என்று கேட்க ஆள் இல்லாத போது 
நன்றாகச் சாப்பிட்டேன்
மூன்று வேளையும்!

சாப்பிட்டாயா 
என்று நீ கேட்கும்போதெல்லாம்
சாப்பிட்டேன்
என்று 
பொய் சொல்கிறேன்!

உலர்ந்த வயிற்றோடு
மூன்று வேளையும்
உன் நினைவுகளைச்
சாப்பிட்டுக் கொண்டு!

Friday, November 9, 2012

கோடு....

மெல்ல முகம் பார்க்கும் 
சின்னக் குழந்தைகளின் 
பிஞ்சு விரல்களிடும் 
கோலம் எனும்
தண்ணீர்க் கோடு!!

கரையில்லாத அன்பைக்
காணாது கண்டுவிட்டால் 
விழியோரம் போட்டுவிடும் 
நெஞ்சத்தின் 
கண்ணீர்க் கோடு!!

பொங்கிவரும் காதலை 
பொய்முகம் காட்டி
மறைத்துவிடும் கன்னிக்கு 
நாணமெனும் 
பெருமைக் கோடு!! 

ஓயாது உழைத்தபின்னும் 
ஒட்டிய வயிறுகொண்ட
பாட்டாளி பரம்பரைக்கு 
பற்றாக் குறையென்னும்
வறுமைக் கோடு!!

சோர்வில்லா வீரனுக்கு 
சொந்தமண்ணாம் 
நாடுகாக்கும் சொப்பனமே 
வீரமென்னும் 
எல்லைக் கோடு!!

பொங்குதமிழ் கவிதைககு 
தொடைஎன்ற தளைஎன்ற
எதுகைமோணை இலக்கணமே 
முரண்என்னும் 
தொல்லைக் கோடு!! 

கட்டழகுப் பெட்டகத்தை
கட்டிலிலே முத்தமிட
மொட்டுவிடும்
முகையதுதான்
மழலைஎன்னும் 
மஞ்சக் கோடு !!

கட்டிலறை முத்துகளுள் 
ஒருமுத்து வரமென்றும் 
மறுமுத்து புறமென்றும் 
எறிவதுதான் 
பேதமென்னும்
வஞ்சக் கோடு!!

Wednesday, November 7, 2012

ஏற்றங்களை மாற்றம் செய்!உழைப்புச் சாவியால் பூட்டிக் கிடக்கும்
புலன்களை விடுதலை செய்

தேம்பும் குழந்தை மனத்தை
தேக்கு மரத்தால் இழைத்து விடு

உதட்டு முற்றத்தில் மகரந்தப்
பூக்களின் புன்னகை தேக்கு

பருந்தின் கூரிய பார்வையை
கீழ்மையகற்றி மேல்நோக்கி வீசு

விரல் நுனிகளால்
உலக விசையை முடுக்கு

சீமைக் குதிரையின் சீரும் குழம்படியை
குதிகாலில் பூட்டிக்கொள்

இதய இருட்டை
தண்ணொளியால் நிரப்பு

கிழிபடாத ஓசோனாய்
அறிவு வெளிச்சத்தைப் பாய்ச்சு

வெற்றி திராவகத்தைத்
தேகமெங்கும் தெளித்துக் கொள்

எட்டியும் அருகியும் இருக்கும்
ஏற்றங்களை உனதாக மாற்றம் செய்!

Tuesday, November 6, 2012

சிவகாசியின் குட்டி தேவதைகள்சுவர்க்கத்திற்குச் செல்லும்
வழியறியாது
பையூரில் பயணித்த
குட்டித் தேவதைகள்
வந்திறங்கின
அந்த சிவகாசியில்

சூரியக் குழம்புடன்
வெண்மேகத்துக்குள் ஒளிந்திருந்த
இடிகளை பொடித்து
இட்டும் தொட்டும்
கனவில் பூத்த
வண்ணம் சேர்த்தும்

நமக்கான
விருந்தினைத் தயாரிக்கின்றன
தேவதைகளின்
சின்னஞ்சிறு விரல்கள்
வெடிகளாக

நிலவை
எட்டி உடைத்து
தெறித்து விடுகிறது
அந்தத் திருநாள் கொண்டாட்டம்

வெடித்துச் சிதறிய 
வெண்ணிலவின் சில்லுகள்தோறும்
விபத்தில் சிதறிய
அந்தப் மோனாலிசாக்களின்
ஏக்க முகங்கள்!!Monday, November 5, 2012

கணமும் யுகமும்
வருகிறேன் என்றாய்
அச்சொல் உதிர்த்த 
உன் உதடுகள் மூடும்முன்
வாழ்ந்துவிட்டேன்
ஓரு 
யுகம்

செல்கிறேன் என்றாய்
அச்சொல் உயிர்க்க
உதடுகள் விரியும் முன்
செத்துவிட்டேன்
அக்
கணம்

பாவ ஆத்மாவாய்...கவனிப்பதும்
கவனிக்காததும்
கவனித்தும்
கவனிக்காதது போல்
கடப்பதும்
உனக்கான 
வாடிக்கையாகிப் போனது

நீ

கவனிக்கும்போது
பரிசுத்த ஆத்மாவாய்
உணர்வதும்
கவனிக்காத போது
பாவ ஆத்மாவாய்
கரைந்து
காணாமல் போவதும்
எனக்கான
வாடிக்கையாகிப் போனது!

Saturday, November 3, 2012

நாட்காட்டி.
காலம் கரைவதை
ஞாலத்துக்குக்
காட்டியபடி
நாளும் மெலிகிறது

நாட்காட்டி.

பிரதீபா காவேரிகர்நாடகத்தில் இருந்து
வராத தலைவியை
கடல் நாடகத்திலிருந்து
கடத்தி வந்தது
நீலம்

கப்பலாக


பிரபஞ்ச கருநாக்கில்
குத்திய வேலாக
குத்தி நிற்கிறது

அந்தக் காவிரியும்
எண்ணெய் வழிய!Thursday, November 1, 2012

நாம் தீபாவளி கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்
ஆய்ந்தாய்ந்து
அறிவுப்போதை தலைக்கேறி
அக்கினி முட்டைகளை
வார்த்தைகளாய் 
பொறிக்கின்றன
அறிஞ அசுரங்கள்

இருட்டில் சமைத்த
சட்டங்களால்
வயிற்றுப் 
பள்ளத்தாக்குகளில்
நெருப்புகளை
இட்டு நிரப்புகின்றன
அதிகார அசுரங்கள்

மேகத்தால் மூடி மறைத்தாலும்
நீண்டு கொண்டே போகும்
வானமாய்
கைநீட்டும்
கையூட்டு அசுரங்கள்

தன் குட்டிகளை விழுங்கி
தன்னுயிர் வளர்க்கும்
பாம்புக் குவியல்களாய்
பிணம் அவித்து
தனம் குவிக்கும்
இனவெறி அசுரங்கள்

என்று எங்கும்
நர அசுரங்கள்
வளர்ந்து கொண்டிருக்கின்றன
வாமனங்களாக
தீர்க்க ஆயுளுடன்

நாம் தீபாவளி
கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்
நரகாசூரனை அழித்ததாக
நினைத்து(இந்தக் கவிதை நவம்பர் 2012 தமிழ் நானூறு இதழில் வெளியானது. நன்றி தமிழ் நானூறு)