Saturday, March 30, 2013

மொத்த இரவும்பல்லாயிரம் பட்டாம்பூச்சிகள்

மூடிய விழிகளில்

கண்களைத் தழுவாத உறக்கத்தின் முனகல்

வெய்யில் கால மண்புழுவாய் நெளியும் மேனி

காலையில் கட்ட சேலை, கரண்ட் பில்

மேலாளருக்குச் சொல்லப் பொய்,

காபிக்குச் சர்க்கரை, கவிதைக்குக் கரு

தொடர் வண்டியாய்...

ஈரத்துணியாய் கனத்த இமைகள்

சுமைகள் தாண்டி உறங்கும் நேரம்

முடிந்து விட்டது

மொத்த இரவும்!

Wednesday, March 27, 2013

மரணப்பால் ஆகட்டும்மனிதத்தை மாய்த்தவனைக் 

மாய்க்கக் கொடுக்கும் 
மறத்தமிழச்சியின் 
மடிப்பால் இது. 

இவன் அமுத வாயூறும் 

கடைசி தாய்ப்பாலே
அந்தக் கயவனது 
மரணப்பால் ஆகட்டும்


Wednesday, March 20, 2013

அந்தச் சந்திப்பு


ஒற்றை வருகையில்
என் உள்ளத்தைப் போலவே
நிரம்பி வழிகிறது
என் இல்லமும்
உன் பதிவுகளால்

உன் மெல்லிதழ் சிந்திய
சொல் மகரந்தத்தைக்
அள்ளி எடுத்து
என் மனப்பைக்குள்
நிரப்பி இருக்கிறேன்
சற்றேனும்
சேதம் இல்லாமல்

நாசியை உயிர்த்து
மூச்சை இழுத்து
உன் வாசனையால்
நிரப்புகிறேன்
என் நுறையீரலை

நீ விட்டுச் சென்ற
சுவடுகள்
ஒவ்வொன்றிலும்
இடைவிடாமல்
இட்டு நிரப்புகிறேன்
உயிர்த்தீண்டல்களை!


சேமித்தச் சில்லரைகளை
எவருமறியாமல்
அவ்வப்போது
எண்ணிப்பார்த்துப்
பத்திரப் படுத்தும்
குழந்தையின்
கவனத்துடன
பத்திரப் படுத்தியிருக்கிறேன்
இதயக் கருவூலத்தில்
அந்தச் சந்திப்பை!Wednesday, March 13, 2013

பொசுக்கிடும் உறுதி யாக!
சாய்ந்ததோ தளிரின் வாழை
            சரிந்ததோ இளைய ஈழம்
ஓய்ந்ததோ உயிரின் ஓசை
            ஒடிந்ததோ ஆலின் விழுது
ஆய்ந்ததோ தந்தை வீரம்
            அகத்தினில் உளதோ என்று
பாய்ந்ததோ குண்டு மாரி
            பாலச் சந்திரன் மார்பில்

பூயிலை துளிர்க்கும் போதே
            பூகம்பம் கண்ட தம்மா
வாயினில் ரொட்டி தந்து
            வன்கொலை கொண்ட தம்மா
சேயினைச் சுட்டுக் கொன்ற
            செறுப்பினன் சிங்க ளத்து
நாயிடம் நட்பு கொண்ட
            நரியினம் நசிந்து போக!

மாண்டிடப் பிறந்தா யாநீ
            மன்னவன் தமிழீ ளத்தை
ஆண்டிடப் பிறந்தா யப்பா!
            ஆண்மகன் இல்லான், வீரம்
மாண்டிட்ட பேடி யைப்போல்
            மாய்த்தனன் மலரும் மொட்டை
தோண்டிய குழியில் இட்டு
            தொலைத்தனன் ஈழ வேரை

நீதியும் இல்லான் போரின்
            நியதியும் அறியான் பொல்லாச்
சாதியின் தலைவன் நீசன்
            சிங்கள ராஜ பட்சே
நாதியில் நாயாய், நட்ட
            நடுநிசிப் பேயாய், வெய்யோன்
வீதியில் நெளியும் புழுவாய்
            விதித்திட சாப மிட்டேன்

சொற்குற்றம் இழைத்த போது
            சொல்லினால் ஊரைச் சுட்ட
கற்பினள் வாழ்ந்த மண்ணின்
            கண்ணின்நீர் விடுக்கும் சாபம்
ர்குற்ற மற்ற பாலன்
            ஒருவனைச் சுட்ட உன்னை
போர்க்குற்ற வாளி ஆக்கி
            பொசுக்கிடும் உறுதி யாக!


(இந்தக் கவிதை 17/03/13 நாளிட்ட மாலை முரசு நாளிதழில் வெளியானது. நன்றி மாலை முரசு.)
  
Monday, March 11, 2013

இலக்கணப் புத்தகம்நீ நான் அவள் அவன்
என்ற
தன்மை முன்னிலை படர்க்கை
எல்லாம்
தம் சுயம் இழந்து
நாம்
என்னும் பொதுச்சொல்லாகிய
இலக்கணப் புத்தகம்
நட்பு