Tuesday, October 30, 2012

விற்பனைப் பெண்ணின் மழைப்பயணம்
அலைகளில் கால் நனைக்கும்
குழந்தையின் மகிழ்ச்சியாய்
மழையில் 
சாலையின் அலையில் 
கால்நனைத்துச் 
செல்லும் பேருந்தில் 
தொடர்கிறது 
அவள் பயணம்

பயணத்தை வேகமாக
முன்னோக்கி நகர்த்துகின்றன
சாலையின் இருபுறமும்
சுவரொட்டியில்
நிஜமழையில்
குளித்துக் கொண்டிருக்கும் 
நடிகையும்

இரவில் அவளை 
ஒளியூட்டிக் காட்ட வேண்டி
பகலில் விழி மூடி ஓய்வெடுக்கும்
நியான் விளக்குத் தூண்களும்

செவிச் சுவர்களை
உரசியும் உரசாமலும்
பயணித்து வெளியேறுகின்றன
நடத்துநரின்
சீழ்க்கை ஒலியும்
பக்கவாத்தியம்
ஓய்ந்தவுடன் ஒலிக்கும்
வாய்ப்பாட்டாய்
‘டிக்கட் வாங்கும்மா’ என்ற
குளிரில் நடுங்கிய
குரல் ஒலியும்

எதிலும் பயணிக்காமல்
நின்றே இருக்கிறது
அவள் மனம்
நிறுத்தத்தில் இறங்கியதும்
அடர் மழையிலும்
வீடு வீடாகத்
தொடர வேண்டிய
விற்பனை பணியை
எண்ணி


Sunday, October 28, 2012

விற்பனை முகவர்


எத்தனை முறை
கெஞ்சிக் கேட்டும்
உள்ளே விடாத
அடுக்கு மாடிக் குடியிருப்பின்
காவலாளியைப் பார்த்து
முறைக்கிறார்
விற்பனை முகவர்!

அவரது 
உடையைப் பார்த்துப்
புன்னகைக்கிறான்
அருகில் நிற்கும்
பிச்சைக்காரன்

Saturday, October 27, 2012

மரங்களும் மங்கைகளே

வேதனைகளை
வேர்களாக்கி
மண்ணுக்குள்
மறைத்து விட்டு
மகரந்த மலர்களால்
மணம் விட்டுப்
புன்னகைக்கும்
மரங்களும்
மங்கைகள்தான்

சோதனைகளை
இரத்த நாளங்களாக்கி
இதயப் பைக்குள்
மடக்கி வைத்து
மனம் மரத்து
இதழ் மட்டும்
புன்னகைக்கும்
மங்கைகளும்
மரங்கள்தான்

Thursday, October 25, 2012

அடைமழை

அன்று 
செயற்கை மழையில் 
குளித்துக் கொண்டிருந்த நடிகை 
இன்று 
இயற்கை மழையில் 
குளித்துக் கொண்டிருக்கிறாள் 

சுவரொட்டியில்


Wednesday, October 24, 2012

உலர்ந்து போகிறேன் நான்


என் சாரளத்தில் பூக்கும்
மழையின்
ஒவ்வொரு துளியும்

உன் உதடுகள் தெளித்த 
ஈர மொழிகளை
உச்சரிக்கின்றது

உலர்ந்து போகிறேன் நான்
Tuesday, October 23, 2012

அரிதாரம்முகத்துக்குப் பூசுவதுபோல்
ஒவ்வொரு நாளும்
உறங்கி விழிக்கையில்
அகத்துக்கும்
அரிதாரம் பூசுகிறோம்

என்றாவது
ஒப்பனை கலைந்துவிடுமோ
என்னும் அச்சத்தில்
அவ்வப்போது
வெளுத்து விடுகிறது 
முகம்

Monday, October 8, 2012

என்னோற்றாள் தமிழ்த்தாய்!!

அருட்தந்தை சேவியர் தனிநாயக அடிகள் உலகத்துத் தமிழர்க்கு ஆய்வரங்க அமுதை
      உணர்வோடு உண்பித்த தாயே நீதான்
பழகித்தான் பார்த்தவரும் மறக்கின் றாரே
      பண்பாட்டுத் தமிழென்று பகர்வ தற்கு
கலகத்து மாநிலத்து வணஅடிகள் நீயோ
      கனித்தமிழைப் பாய்ச்சுகின்றாய் கழனி தோறும்
கழகங்கள் கண்டவர்கள் ஆய்வரங்கின் இறுதி
      வரிசையிலே நிற்கின்றார் முதல்வன் நீயே!

பன்மொழிகள் கற்றவன்நீ பார தி(தீ)போல்
      படித்ததிலே தமிழ்ஒன்றே பண்பாடா டென்றாய்
ஒண்மொழியாம் திருக்குறளை மலாய்க்கு, சீன
      மண்மொழிக்கு மொழிபெயர்க்க மூலம் ஆனாய்
பன்னாடு படையெடுத்தாய் தமிழின் தூதாய்
      பழந்தமிழைப் பாரெல்லாம் பாய்ச்சி விட்டாய்
இந்நாடு மாநாடு காண்பதெல்லாம் சேவை
      இனியவண தனிநாயக உன்னால் தானே!

கற்பிளந்து மலைபிளந்து சிலைகள் செய்த
      கவின்கலைகள் இழப்பதா வாழ்வு என்றாய்    
சொற்பொழிந்து சுவைபொழிந்த கவிகள் எல்லாம்
      சிங்களத்தைப் படிப்பதால் மாளும் என்றாய்
தொழுகையிலே மொழியுரிமை வேண்டச் சொன்னாய்
      தொடர்ந்துபெற தமிழினத்தைச் தூண்டச் சொன்னாய்
உழுதபயன் களம்சேர்ந்த தின்று நாங்கள்
      உயிர்க்காற்றை உன்னாலே சுவாசிக் கின்றோம்.

தொண்ணூற்று ஒன்பதுபூ சொன்ன பாட்டின்
      தொல்குறிஞ்சி காண்கின்றாய் ஹவாய் மண்ணில்
பண்ஊற்றால் போற்றுகின்றாய் வான ஒலியில்
      பைந்தமிழின் தேர்ப்பாகன் பார தியை
கண்ணூற்றுப் பொழிகின்றாய் திருவாச கத்தில்
      கனித்தமிழால் கசிந்துருகும் சேக்கி ழாரால்
என்னோற்றாள் தமிழ்த்தாய்தான் யாழ்ப்பா னத்து
      எழிலார்ந்த நெடுந்தீவில் நீஉ திக்க!

     
     
       (இக்கவிதை இம்மாதம் பிரான்சில் நடைபெற்ற,
 அருட்தந்தை தனிநாயக அடிகளாரின் 
நூற்றாண்டு விழா  மலரில் இடம்பெற்றது.)