Tuesday, October 27, 2015

வ.வே.சு அவர்களுக்குப் ‘படைப்புலகச் சிற்பி’ விருதுஇன்று மயிலை, பாரதிய வித்யாபவனில் உறவுச் சுரங்கம், பாரதிய வித்யாபவன், கிருஷ்ணா இனிப்பகம் மூன்றும் இணைந்து நடத்திய ‘சிகரத்தைத் தொட்ட சிவசங்கரி’ நிகழ்வில் விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேரா. முனைவர். வ.வே.சு அவர்களுக்குப் ‘படைப்புலகச் சிற்பி’ விருது வழங்கப் பட்டது. (மனம் நிறைந்த வாழ்த்துகள் ஐயா)
இந்நிகழ்வில் மருத்துவ மாமணி திரு. சொக்கலிங்கம் அவர்கள் ‘காக்க காக்க இதயம் காக்க’ என்னும் தலைப்பில் சிற்றுரை ஆற்றினார். சிற்றுரையா அது? ஊசியின் காதில் ஒட்டகத்தை நுழைத்தாற் போல பெரிய பயன் தரும் சிறிய உரை.
வாழும் பாரதி இல. கணேசன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். இந்திய நிலவறையில் காசுமீரம் பாகிஸ்தான் இரண்டும் எப்படி இடம்பிடித்துள்ளது என்ற நாற்பதுகளின் வரலாற்றை, ஏசுபிரான் சிலுவையில் மறிக்கவில்லை காசுமீரத்திற்கு வந்து காயத்திற்குப் பச்சிலைகளை எல்லாம் பயன்படுத்தி மருத்துவம் செய்து பிழைக்க வைத்து விட்டனர் என்று தாம் படித்த செய்தியைப் பகிர்ந்து கொண்டார்.
இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்ற வந்த வ.வே.சு. அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் சிறப்புரையும் சிரிப்புரையுமாகத் தந்து அரங்கத்தைத் தம் கட்டுப்பாட்டில் இருந்து இம்மியும் அசையாமல் இருக்கச் செய்தார். பேரா. வ.வே.சு. அவர்களின் உரையை ஒலிப்பதிவு செய்தேன். எப்போதும் முதல் வரிசையில் அமரும் வழக்கம் இல்லாததால் ஒளிப்பதிவு செய்ய இயலவில்லை. அந்த வருத்தத்துடன்,,,,,,,,,,
சில நிகழ்வுகளில் ஒருவரது உரை நன்றாக இருக்கும். அல்லது இருவரது உரை நன்றாக இருக்கும். ஆனால் இன்றைய நிகழ்வில் எல்லோருடைய உரையும் சிறப்புரைதான் தொகுத்து வழங்கிய பேரா.முனை. உலகநாயகி பழநி அவர்களின் உரை உட்பட........ இது ஒரு வரலாற்று மாலை

Saturday, October 24, 2015

பேக்கரும்பு பெற்றபேறு

                         ஏவுகணை எழுந்ததுஇரா மேசுவ ரத்தில் 
                                   எக்காள மிட்டவரின் இடுப்பொ டிக்க 
                        சாவுகணை வந்ததென்று எதிரி எல்லாம்
                                   சரணடைந்தார் ஆயுதத்தை மூடி வைத்தார் 
                         நோவுகளே தீண்டியவர் இளமை எல்லாம்
                                    நோகாமல் நோற்பதல்ல வெற்றி என்னும்
                          பாவுகளை நீர்நூற்றீர்; படகு ஓட்டும்
                                     பரதவரே! பாரதத்தின் தலைவ ரானீர்!


                           சுக்கலாகச் சிதறவிட்டீர்; பொக்ரான் சக்தி
                                     சோதனையில் வல்லரசு நாட்டை யெல்லாம்
                            கக்கனைத்தான் எளிமை என்பார்; அப்துல்
                                     கலாம்நீர் அவருக்கே அப்பன் ஆனீர்
                            நிக்காவே செய்யாமல் பிள்ளை பெற்று
                                       நேசமுடன் வளர்த்திட்ட கணியன் நீரே
                            விக்கலெல்லாம் உம்நினைவைச் சுமந்தே விக்கும்
                                        வீறுகொண்ட இளைஞர்க்கவை விசையாய் நிற்கும்

                             நாளிதழை நீர்சுமந்தீர் நாங்கள் நெஞ்சில்
                                         நாள்தோறும் சுமக்கின்றோம் உம்நி னைவை
                             பாழிதழா உம்இதழ்கள்? தமிழ்ப்பா தம்மை
                                        பாரெல்லாம் பாடிவந்த நெய்தல் பண்ணின்
                             யாழிதலே உம்மிதழ்கள்; புறநா னூறு,
                                         அறநூலாய் நீர்வாழ்ந்தீர்; கொல்லும் நச்சு
                             வேலிதழை ஏந்துகின்ற கால னுக்கு
                                          விருந்தானீர் கதறுகின்றோம் காலா சா!சா!

                            விழலுக்கு நீர்இறைத்தார் பலரும்; நீரோ
                                        விழுதுகளின் விளைச்சலுக்கே நிதம்உ ழைத்தீர்
                            கழலையல்ல உம்சுரப்பு கருணை மாரி
                                        கணைமாரி அணுமாரி பெய்த போதும்.
                            மழலையெல்லாம் மாலையா கிஉம்மைச் சூடும்
                                        மனமாண்பு விதையிட்ட உழவா; எங்கள்
                            சலவையே செய்யாத அழுக்கை எல்லாம்
                                       சஞ்சலமே இல்லாமல் வெளுத்து விட்டீர்

                            நாகரும்பு மனிதர்நீர்: நவின்ற தெல்லாம்
                                        நற்றமிழன் வாழ்முறைக்கு வாக்கு கள்தாம்
                            கைகரும்பு எழுத்தாகப் பதித்த தெல்லாம்
                                        காலத்தை வெற்றிகொள்ளும் புதிய கீதை
                             தேக்(கு)கரும்பு தேகம்கொண்ட தியாகி! தேவ
                                        குழந்தைகளும் காண்பதற்கோ வானம் சென்றீர்?
                             பேக்கரும்பு மணிவயிறு பெற்றபேறு மீண்டும்
                                         பெருமைமிகு கருவானீர் புனித மண்ணில்

- ஆதிரா முல்லை
பாரத ரத்னா டாக்டர் அப்துல் கலாம் மறைந்த போது எழுதிய அஞ்சலி கவிதை. வேறு இதழ்களில் வந்து விட்டது என்று கூறிய பின்னும் 4 இதழ்களில் இடம் பிடித்தது இந்தக் கவிதை.
நன்றி...
கவிதை உறவு,
புதுகைத் தென்றல்
உரத்த சிந்தனை
முரசு சங்கமம்

கவிதைகளால்தான் முடியும்உறக்கத் தேவதையால்
ஆசிர்வதிக்கப் படாதது
பலரின் இரவுகள்
அவளின் சாபங்களோடு
வாழ்வது அவ்வளவு எளிதல்ல
எப்படியேனும் கடந்தாக வேண்டும்
ஆசிர்வாதம் பெறாத அந்த இரவுகளை
கவிதைகளால்தான் அது முடியும்
விழித்தெழுக எழுத்துகளே
கவிதைகளுக்கென
ஆசிர்வதிக்கப் பெற்றவர்கள் நீங்கள்

Thursday, October 15, 2015

உங்கள் ஆதிராவுக்கு டாக்டர் அப்துல் கலாம் தங்கப் பதக்க விருது


குலோபல் எகனாமிக் ஃப்ராகரஸ் ரிசர்ச் அசோசியேஷன், புது தில்லி (CLOBAL ECONOMIC PROGRESS & RESEARCH ASSOCIATION, NEW DELHI) பல்வேறு துறைய்யில் சாதனை புரிந்தவர்களுக்கு டாக்டர் அப்துல் கலாம் கோல்டு மெடல் விருதினை (DR. ABDUL KALAM GOLD MEDAL AWARD)  வழங்கியது.

அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டது மகிழ்வு. உச்சநீதி மன்ற நீதியரசர் ச. மோகன், அண்ணா பல்கலையின் முன்னைத் துணைவேந்தர் டாக்டர் மன்னர் ஜவஹர் மற்றும் அரிமா சங்க மாவட்ட ஆளுநர் நித்யா குமார், ஜிப்ராவின் பொதுச்செயலாளர் டாக்டர் சாகித் பாஷா ஆகியோருடன்......

அடியேனும் தனி சாதனையாளருக்கான தங்கப் பதக்க விருதினைப் பெற்றேன் என்பது கூடுதல் மகிழ்வு.


Monday, October 12, 2015

சாகசக் கலைசாகசக் கலை
***************

புலன்களைப் பூட்டி விடுவதும்
புத்துயிர்த்து மலர்த்துவதுமான
சாகசக் கலையைக்
கற்றுள்ளது
உன் விரல்கள் உதிர்க்கும்
வார்த்தைகள்