Saturday, November 30, 2013

மோனாலிசாவின் மீசை!


பாரதியின் மீசைக்கு
கால்கள் முளைத்தன
ஓர் இரவில்

இரவினிடையில்
அவை 
மெல்ல நடந்து 
உறங்கிக் கொண்டிருந்த
மோனாலிசாவின் 
விழிகளுக்கு மேல்
பள்ளி கொண்டன

புருவமற்ற்
ஏக்கத்தில் 
புன்னகையைத் தொலைத்த
அந்தப் பேரழகியின்
உதடுகளில் 
ஒட்டிக்கொண்டது
பேராண்மையும்

பெண்ணுக்குள் 
வீரத்தை வைத்த
ஆனந்தத்தில்
ஒளிர்கின்றது
மீசையற்ற 
அந்த 
அசகாய சூரனின் முகம்

இன்னும் 
கம்பீரமாக!

Friday, November 15, 2013

கல்வி சாதனையாளர் விருது


காமராஜன் கிராமிய நல அறக்கட்டளை கல்வி சாதனையாளர் என்னும் விருதினை வழங்கியுள்ளது. இதனை என் வலைத்தள உறவுகளுடன் பகிர்ந்து கொள்வதை விட வேறு என்ன மகிழ்வு? என் முன்னேற்றத்தில் மகிழும் உறவுகளுக்காக இதனை இங்கு பகிர்கிறேன்.

Wednesday, September 25, 2013

அலமாரி பொம்மைகள்



விழிகளில்
ஏக்கப் பூக்களை ஏந்தி
முதியோர் இல்லங்களில்
காத்திருக்கும்
பெற்றோர்களைப் போல…

ஏக்கத்துடன்
வெறித்துப்
பார்த்துக் கொண்டே
இருக்கின்றன..

வளர்ந்த குழந்தைகளின்
ஸ்பரிசத்திற்காக

அலமாரியில்
ஒதுக்கப் பட்ட
அவர்கள் விளையாடிய
பொம்மைகள்

Saturday, September 21, 2013

குழந்தைகளின் உலகில்

தன்னைத் தானே
கோபித்துக் கொண்டன

கொஞ்சலும் கோபமும்

காமமில்லாத 
தழுவல்களும்
மோகமில்லாத 
முத்தங்களும்
நிறைந்த

குழந்தைகளின் உலகில்

பொம்மையாகாது

கயவர்களின் 

உலகில்
கடவுளாகிப் போனதை
எண்ணிய

சிலைகள்

Sunday, September 15, 2013

முத்தச் சந்தம்




வானம்
இதழ் குவித்து
மழைத் துளியால்
மண் காதலியை
முத்தமிடும்
சந்தத்தில்...

உயிர்ப்பது...


மரங்களின்

சந்ததிகள் மட்டுமல்ல
மக்களின் சந்ததிகளும்

Tuesday, August 27, 2013

ராஜா. சர். முத்தையா செட்டியார் அவர்களின் 109 வது பிறந்தநாள் விழா

டாக்டர். ராஜா. சர். முத்தையா செட்டியார் அவர்களின் 109 வது பிறந்தநாள் விழா - சென்னை, மாநிலக்கல்லூரியில்l



Friday, August 23, 2013

மெல்லிசை மன்னருடன் இனிய சந்திப்பு...

18/08/13 ஞாயிற்றுக்கிழமை மாலை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள ஸ்டூடன்ஸ் விஷன் அகதமி நடத்திய ஆண்டு விழாவில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்,  ஸ்டூடன்ஸ் விஷன் அகதமியின் தலைவர் ஆர். ராஜராஜன், கல்வித் தலைவர் வசந்தி ராஜராஜன்,  நல்லாசிரியர் விருதுபெற்ற ஜி.பெரியண்ணன், எட்வர்டு சாலமன் ராஜா, அரிமா தட்சினாமூர்த்தி ஆகியோருடன்











Monday, August 19, 2013

நீதியரசர் வள்ளிநாயகம் அவர்களுடன்...

சென்னை அண்ணாநகரில் எஸ்.எல்.டி. கல்வி அறக்கட்டளை நடத்திய முப்பெரும் விழாவில் நீதியரசர் மாண்புமிகு வள்ளிநாயகம், மாநில மனித உரிமை ஆணையத்தின் முன்னைச் செயலாளர் திரு. E. தசரதன் I.A.S,  நல்லாசிரியர் விருது பெற்ற திரு. எம். திருநாவுக்கரசு ஆகியோருடன்.

19.08.13 தினமலர் நாளிதழில்









Friday, July 26, 2013

இரங்கல் கூட்டம்



பால் , எறும்பு
இரண்டுக்குமான பாதுகாப்பாய்
லஷ்மண்ரேகா, மஞ்சள்தூள்
எல்லாவற்றாலும்
எவ்வளவுதான்
பாதுகாப்பு வளையம்
போட்டு வைத்தாலும்

வியூகங்களையெல்லாம்
தகர்த்து எரிந்து விட்டு
வேலி தாண்டி
பால்(ழ்) கிணற்றில்
பாய்ந்து
தற்கொலை செய்து கொள்கின்ற
எறும்புகளுக்காக
தினமும் நடத்துகிறேன்
இரங்கல் கூட்டத்தை...

உழைப்பை,
விடா முயற்சியை,
சுறுசுறுப்பை
போதித்த
எறும்புகளிலும்
கோழைகள் உண்டென..!


Wednesday, July 24, 2013

அம்மா



கோலம் போட
புள்ளி 
வைத்த போதெல்லாம்
முந்தானையைப்
பிடித்துக் கொண்டு
நின்றிருந்த
என் உள்ளத்தில்
குறிக்கோள்களை
அள்ளி
வைத்தவள் 

அம்மா



Saturday, July 6, 2013

பச்சை விளக்கு


சாயம் போன
கறுப்பு வெள்ளைக் கனவுகளைக்
கண்டுகொண்டிருக்கின்றன
அவள் 
சிவப்பு விழிகள்

கடிகாரத்தின்
அப்போது முடுக்கிய
பெண்டுலமாய்
அங்குமிங்கும் அலைகிறது
ஒவ்வொரு
வாகனத்தின் மீதும்
பஞ்சு படர்ந்த
அவள் பார்வை

குழந்தையின்
அணைப்பில் இருக்கும்
மரப்பாச்சியைப் போல
அவள் கையில்
உயிர் நிரப்பிய
குழந்தை

இலையுதிர்க் காலத்து
சருகளைப் போல்
பட்டுப்போன
அம்மா, அய்யா, அக்காக்களை
உதிர்க்கிறது
அந்த மனித மரத்தின்
உலர்ந்த இதழ்கள்

அருவருப்புப் பார்வைகளைத்
தாண்டி
‘சில்லைறை இல்லம்மா
போ போ’என்னும்
விரட்டியடிப்புகளைக்
கடந்து

தட்டின் சில்லறை ஓசை
காதில் விழுவதற்குள்
விழுந்து விடுகிறது
பச்சை விளக்கு
சிக்னலில்


Saturday, June 29, 2013

பல்கலைக் கழக மானியக் குழுவின் துணைத்தலைர் டாக்டர். தேவராஜன் அவர்களுக்குப் பாராட்டு விழா

இன்று மனத்திற்கு நிறைவான நாள். சென்னைப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர். டாக்டர். தேவராஜன் அவர்கள் பல்கலைக் கழக மானியக்குழுவின் துணைத்தலைவராக பொறுப்பேற்றுள்ளார். தென்னகத்தில் இருந்து பல்கலைக் கழக மானியக் குழுவில் உயரிய பொறுப்பேற்றிருப்பது ஒரு சிறப்பு. தமிழகத்தில் இருந்து பொறுப்பேற்று இருக்கும் முதல் பேராசிரியர் என்னும் பெருமையும் இவர்க்கே.

சென்னை விருந்தினர் கழகத்தின் சார்பில் அவருக்குப் பாராட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தார் அதன் தலைவர் திரு. ரூஸ்வெல்ட் அவர்கள். அவ்விழாவில் பேரா. தேவராஜ்சன் அவர்களைப் பாராட்டிப் பேச சென்னைப் பல்கலையின் முன்னைத் தமிழ்ப்பேராசிரியர் மா. சே. வருகை புரிந்திருந்தார். நானும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேராசிரியரை வாழ்த்தும் பேறு பெற்றேன் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. 

தமிழகக் கல்லூரிகளுக்கும் முக்கியமாகச் சென்னைப் பல்கலைக் கழகத்திற்கும் என்னால் முடிந்த உதவியைச் செய்வேன் டாக்டர் தேவராஜன்  என்று ஏற்புரையில் கூறியது மகிழ்ச்சியாக இருந்தது.





Monday, June 24, 2013

உண்டாக்கி இருப்பாளா?



அவள் 
உண்டாகி இருக்கிறேன் 
என்று 
சொல்லும் போதெல்லாம்
மண்டாகி இருக்கிறேன்
என்று சொல்வது போலவே
காதில் விழுந்தது

அது உண்மைதான்
இல்லாவிட்டால்
அவளை
ஆதரவு அற்றவளாக
விடுவான்
என்று 
தெரிந்திருந்தும்
அவனை
உண்டாக்கி இருப்பாளா?




Wednesday, June 19, 2013

அடிக்கரும்பாய் இனித்தவரே!



வீறுகொண்ட எழில்யானை! மொழிப்ப கையை
       வெற்றிகொண்ட தமிழ்ச்சேனை! அகம்பு றத்தைக்
கூறுபோட்டு விளைவித்த மருதம்! எங்கும்
       குனியாதத் தன்மானக் குறிஞ்சி! நாட்டில்
யாருடனும் பகைகொள்ளா நிலவு! யாப்பில்
       எதுகைபோல் இணைந்திட்டப் பண்பாட் டுள்ளம்!
தேரினைப்போல் வலம்வந்தீர் உலகை! ஐயா
       தேடுகின்றோம்! வாடுகின்றோம்! எங்கே சென்றீர்?

வெடித்துவிழும் விதையைப்போல் தமிழை அள்ளி
       வீதியெல்லாம் பயிர்ச்செய்தீர்! உம்மி டத்தில்
படித்துவந்த உள்ளங்களில் தமிழ்உ ணர்வைப்
       பதியமிட்டு, பாத்திகட்டித் தினம்வ ளர்த்தீர்!
அடித்துவரும் புயலாக நடைந டந்து
       அருந்தமிழை நாடெல்லாம் பாய்ச்சி விட்டீர்!
படிப்பதற்கா நூல்யாத்தீர்? படிப்போர் நெஞ்சில்
       படிவதற்கே பைந்தமிழில் நூல்கள் யாத்தீர்!

சீற்றமில்லாத் தென்றலய்யா உமது நெஞ்சம்,
       செந்தமிழ்த்தாய் குடியிருக்கும் தமிழின் கூடல்
மாற்றமில்லாத் திசையைப்போல் கொண்ட கொள்கை
       மாணிக்கச் சுடரொளியின் வெளிச்சக் காடு
ஏற்றமெல்லாம் பெண்ணினத்தார் பெறுவ தற்கே
       எழச்செய்தீர் வள்ளியம்மாள் நிறுவ னத்தை
ஊற்றினைப்போல் எழுகிறதே உம்நி னைவு
       உள்ளூறும் நன்றியினால் வணங்கு கின்றோம்

வெள்ளிவிழா கொண்டாடும் போது உங்கள்
       விசைப்பணியை எண்ணுகின்றோம்! பெண்கள் வாழ்வில்
நள்ளிரவை ஒளிரவைத்த விடியல் நீங்கள்!
       நலத்தமிழால் வெளிச்சமிட்ட பரிதி நீங்கள்
தெள்ளுதமிழ் சிலம்பொலியின் ஏற்றம் போல
       திசையெட்டும் பெண்ணினத்தை ஒளிரச் செய்தீர்
தெள்ளியநீர் ஓட்டம்போல் எங்கள் நெஞ்சம்
       தினம் இருக்கச் செய்தவரே வணங்கு கின்றோம்!

தேதிஓட்டும் நாட்காட்டி! அ.மு.ப. நீரோ
       தண்டமிழ்த்தாய்த் தேரோட்டி! தூய அன்பில்
போதிமரப் புத்தனுக்கே தம்பி நீர்தான்
       புகழ்விரிக்கும் குறள்வழியே நடைந டந்தீர்!
ஆதிமுதல் தமிழ்த்தாய்க்கு அடிக்க ரும்பாய்
       அன்றாடம் இனித்தவரே! கீழ்க்க ணக்கு
நீதிநூலின் மறுபதிப்பே! ஐயா! நாங்கள்
       நினைக்கின்றோம் மீண்டுமிங்கே வருவீ ரோநீர்!



இக்கவிதை வெள்ளி விழா கண்ட வள்ளியம்மாள் மகளிர் கல்லூரியின் நிறுவனர் பேரா. முனைவர். அ.மு.பரமசிவானந்தம் அவர்களைப் போற்றி எழுதியது. 2012 - 13 ஆம் கல்வியாண்டின் கல்லூரி மலரில் இடம்பெற்றது. 

     
     


Saturday, June 15, 2013

இயக்குநர் மணிவண்ணன் கருப்புச் சட்டைக்குள் ஆர்ப்பரித்த வெள்ளை உள்ளம் அமைதி அடையட்டும்.






இயக்குநர் மணிவண்ணன் இயற்கை எய்தியதினார் என்னும் செய்தி இதயத்துள் கனக்கிறது. ஒரு சில மணி நேரங்கள் அவருடன் பேசி, சிரித்து மகிழ்ந்ததை மனம் அசை போடுகிறது. அவர் என்னிடம் வைத்த வேண்டுகோளை நிறைவேற்ற முடியவில்லை. வருந்துகிறேன். குழந்தை மனத்துடன் பேசியதை, அவரது கைப்பேசியில் புகைப்படம் எடுத்த்க்கொண்டதை, “நான் படிக்காதவன்ம்மா, எனக்கு இலக்கியத்தில் இருக்கும் வைதீக முறைத் திருமணங்கள் எப்படி நடந்தன? முக்கியமாகக் கண்ணகி, சீதை, பாஞ்சாலி போன்றோரின் திருமணம் குறித்த செய்திகளை எழுதித் தாருங்கள். நான் நடத்தி வைக்கும் சுயமரியாதைத் திருமணங்களில் அதைப் பற்றி பேச வேண்டும்” என்று கேட்டுக்கொண்டதை எப்படி மறக்க? இரு திங்களுக்கு முன்னர் அழைத்து அடுத்த மாதம் தருகிறேன் என்று கூறினேன். மிகவும் வருந்துகிறேன். அந்தக் கருப்புச் சட்டைக்குள் ஆர்ப்பரித்த வெள்ளை உள்ளம் அமைதி அடையட்டும். அவருக்கு என் வீர வணக்கம்


இயக்குனர் மணிவண்ணைப் பற்றி..அந்த விழாவில் வாசித்த கவிதை.. இன்று கண்களின் நீர்த்தாரைகளுடன்....

கருஞ்சிறுத்தைக் கூட்டம் 
இவன் 
கன்னத் தாடி
கண்ணிரண்டும்???? 
கன்னி வெடி
என்ன முரண்? 
மணிவண்ணன் கருத்த மெய்யில் 
கலங்கமில்லா 
வெள்ளை உள்ளம்
வெள்ளித்திரை சிரிப்புக்கு..... 
பல்லே இவன் தான்!
நாவில்
சொல்லணையைக் க்ட்டி வைத்து 
நல்ல தமிழ் சிந்தனையை 
இயக்குகின்றான்.


Thursday, April 4, 2013

நத்தைக் கூடு




நத்தையாய் நான் 
சுருங்கும் போதெல்லாம்
எனக்கான கூடாய்
உன் நட்பைக் 
கட்டிக் கொள்கிறேன்

கழுகுகள் நடுவில்

இருக்கும் போதெல்லாம்
எனக்கான சிறகாய்
உன் வார்த்தைகளைப்
போர்த்திக் கொள்கிறேன்!

Tuesday, April 2, 2013

காதல் சிலிர்க்கிறது…





உன் மீசையின் அடர்த்தியில்

ஒளித்து வைத்திருந்தேன்

காதலை

நீ முறுக்கும் போதெல்லாம்

உன் விரல் ஸ்பரிசத்தில்

அது மெய் சிலிர்க்கிறது 

என்னுள்

Saturday, March 30, 2013

மொத்த இரவும்



பல்லாயிரம் பட்டாம்பூச்சிகள்

மூடிய விழிகளில்

கண்களைத் தழுவாத உறக்கத்தின் முனகல்

வெய்யில் கால மண்புழுவாய் நெளியும் மேனி

காலையில் கட்ட சேலை, கரண்ட் பில்

மேலாளருக்குச் சொல்லப் பொய்,

காபிக்குச் சர்க்கரை, கவிதைக்குக் கரு

தொடர் வண்டியாய்...

ஈரத்துணியாய் கனத்த இமைகள்

சுமைகள் தாண்டி உறங்கும் நேரம்

முடிந்து விட்டது

மொத்த இரவும்!

Wednesday, March 27, 2013

மரணப்பால் ஆகட்டும்



மனிதத்தை மாய்த்தவனைக் 

மாய்க்கக் கொடுக்கும் 
மறத்தமிழச்சியின் 
மடிப்பால் இது. 

இவன் அமுத வாயூறும் 

கடைசி தாய்ப்பாலே
அந்தக் கயவனது 
மரணப்பால் ஆகட்டும்


Wednesday, March 20, 2013

அந்தச் சந்திப்பு


ஒற்றை வருகையில்
என் உள்ளத்தைப் போலவே
நிரம்பி வழிகிறது
என் இல்லமும்
உன் பதிவுகளால்

உன் மெல்லிதழ் சிந்திய
சொல் மகரந்தத்தைக்
அள்ளி எடுத்து
என் மனப்பைக்குள்
நிரப்பி இருக்கிறேன்
சற்றேனும்
சேதம் இல்லாமல்

நாசியை உயிர்த்து
மூச்சை இழுத்து
உன் வாசனையால்
நிரப்புகிறேன்
என் நுறையீரலை

நீ விட்டுச் சென்ற
சுவடுகள்
ஒவ்வொன்றிலும்
இடைவிடாமல்
இட்டு நிரப்புகிறேன்
உயிர்த்தீண்டல்களை!


சேமித்தச் சில்லரைகளை
எவருமறியாமல்
அவ்வப்போது
எண்ணிப்பார்த்துப்
பத்திரப் படுத்தும்
குழந்தையின்
கவனத்துடன
பத்திரப் படுத்தியிருக்கிறேன்
இதயக் கருவூலத்தில்
அந்தச் சந்திப்பை!







Wednesday, March 13, 2013

பொசுக்கிடும் உறுதி யாக!




சாய்ந்ததோ தளிரின் வாழை
            சரிந்ததோ இளைய ஈழம்
ஓய்ந்ததோ உயிரின் ஓசை
            ஒடிந்ததோ ஆலின் விழுது
ஆய்ந்ததோ தந்தை வீரம்
            அகத்தினில் உளதோ என்று
பாய்ந்ததோ குண்டு மாரி
            பாலச் சந்திரன் மார்பில்

பூயிலை துளிர்க்கும் போதே
            பூகம்பம் கண்ட தம்மா
வாயினில் ரொட்டி தந்து
            வன்கொலை கொண்ட தம்மா
சேயினைச் சுட்டுக் கொன்ற
            செறுப்பினன் சிங்க ளத்து
நாயிடம் நட்பு கொண்ட
            நரியினம் நசிந்து போக!

மாண்டிடப் பிறந்தா யாநீ
            மன்னவன் தமிழீ ளத்தை
ஆண்டிடப் பிறந்தா யப்பா!
            ஆண்மகன் இல்லான், வீரம்
மாண்டிட்ட பேடி யைப்போல்
            மாய்த்தனன் மலரும் மொட்டை
தோண்டிய குழியில் இட்டு
            தொலைத்தனன் ஈழ வேரை

நீதியும் இல்லான் போரின்
            நியதியும் அறியான் பொல்லாச்
சாதியின் தலைவன் நீசன்
            சிங்கள ராஜ பட்சே
நாதியில் நாயாய், நட்ட
            நடுநிசிப் பேயாய், வெய்யோன்
வீதியில் நெளியும் புழுவாய்
            விதித்திட சாப மிட்டேன்

சொற்குற்றம் இழைத்த போது
            சொல்லினால் ஊரைச் சுட்ட
கற்பினள் வாழ்ந்த மண்ணின்
            கண்ணின்நீர் விடுக்கும் சாபம்
ர்குற்ற மற்ற பாலன்
            ஒருவனைச் சுட்ட உன்னை
போர்க்குற்ற வாளி ஆக்கி
            பொசுக்கிடும் உறுதி யாக!


(இந்தக் கவிதை 17/03/13 நாளிட்ட மாலை முரசு நாளிதழில் வெளியானது. நன்றி மாலை முரசு.)
  




Monday, March 11, 2013

இலக்கணப் புத்தகம்



நீ நான் அவள் அவன்
என்ற
தன்மை முன்னிலை படர்க்கை
எல்லாம்
தம் சுயம் இழந்து
நாம்
என்னும் பொதுச்சொல்லாகிய
இலக்கணப் புத்தகம்
நட்பு



Monday, February 18, 2013

யுகங்களைக் கடப்போம்!




நினைத்த போது
அடைமழையாய்க்
கொட்டுவதும்
நினைக்காத போது
அழுத்தமாக
அமைதி காப்பதும்
வானத்திற்கும
உனக்கும்
வழக்கம்

கொட்டும்போது

அணுக்கள் தோறும்
குழைவதும்
உன் அமைதியில்
அணுத்துகள்களாய்ச்
சிதறுவதும்
பூமியைப் போன்றே
எனக்கும்
வழக்கம்

இப்படியே

வானமும் பூமியுமாய்

நானும் நீயும்

யுகங்களைக் கடப்போம்!




Sunday, February 17, 2013

ஸ்டிக்கர் பொட்டு



தமிழ்த்தாயே

நாங்கள்

அவசரம் அவசரமாக

அலுவலகம்

கிளம்பும்

வேளையிலும்

பளபளக்கும்

ஸ்டிக்கர் பொட்டை

ஒட்ட மறப்பதில்லை

உன் பட்டு முகத்தில்

ஹைக்கூ கவிதைகளாக!


Saturday, February 9, 2013

நெகிழ்ச்சியான தருணம்




(03/02/13) கலைஞர் நகர் இலக்கிய வட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றதற்காக  திரு. ‘அமுதா’ பாலகிருஷ்ணன் அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்திய போது....

அருகில் வாழ்த்திப் பேசிய இலக்கிய வட்டத்தின் பொதுச் செயலாளர் பேரா.முனைவர். ப.கி.பிரபாகரன் அவர்கள்



நெகிழ்வோடு நன்றி கூறிய போது...



வந்திருந்த சான்றோர்கள்

நன்றி இலக்கிய வட்டம்.

Friday, January 25, 2013

மு.இளங்கண்ணனார் - இரங்கற்பா


திருக்குறளாய் வாழ்ந்திட்டார் வீதி யெங்கும்
            திறமான அறிவியலைத் தெளித்து விட்டார்
செறுக்கில்லா தன்னடக்கம் கொண்ட தாலே
            செம்மாந்து நிற்கின்றார் சிகர மாக
மறக்கின்ற பணியாசெய்தா? மக்க ளெல்லாம்
            மதிக்கின்ற கீதைக்குக் காதை செய்தார்
விரிக்கின்ற சூரியனாய் இலக்கி யத்தை
            விலாசமிட்டு வையமெங்கும் பரப்பி விட்டார்

தெள்ளுதமிழ் படித்துவந்தார் தேடித் தேடித்
            தேன்மலராய்க் கவிமலர்கள் பூத்து வந்தார்
சொல்லையிலே புரியாத புள்ளி யியலுக்
            ககராதி புதுத்தமிழில் ஆக்கித் தந்தார்
துள்ளலிடும் அருவிகளின் ஓட்டம் போல
            தூயகுறள் குழந்தைகளின் நெஞ்சில் வார்த்தார்
அல்லிமலர் சிரிப்பெடுத்து இதழில் வைத்தார்
            அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும்

பனைவெல்லத் தமிழுக்குப் பாகாய் மேலும்
            பாங்கான அறிவியலை இனிக்கத் தந்தார்
நனைந்தால்தான் உடல்நடுங்கும் ஐயா நாங்கள்
            நனையாமல் நடுங்குகின்றோம் கையற் றேங்கி
சுனைவற்றிப் போனபின்பு துடிக்கும் மீனாய்
            சுருண்டபடி கிடக்கின்றோம் நெஞ்சம் இற்று
மனைமக்கள் தவிக்கின்றோம் ஐயா நீங்கள்
            மறுபடியும் வருவீரோ தமிழுக் காக!



(இக்கவிதை 19.01.13 அன்று பன்ருட்டி ச. இராமச்சந்திரன். மாவீரர். பழ. நெடுமாறன் 
தலைமையில் நடந்த அறிவியல் தமிழறிஞர்.திருக்குறள் செல்வர். முனைவர். 
மு. இளங்கண்ணனார் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் பாடிய இரங்கற்பா)