Sunday, July 29, 2012

ஒற்றை மழையில்
மலரின்
முகமெங்கும்
இதழ்ப் பதித்தது
சாரல்


மழை மணத்தால்
மதுமலரின்
மனமெங்கும்
இரசவாதம்

Wednesday, July 25, 2012

சக்கரவாகமாக ஏந்திக்கொள்அன்பை 
அடர் மழையாய்க் 
கொட்டி
தீர்க்கிறேன்
சக்கரவாகமாக
ஏந்திக்கொள்வாய்
என்று.

அள்ளிக்கொள்ள
அத்தனை பெரிய
பாத்திரம்
என்னிடம்
இல்லை என்கிறாய்!
அவ்வளவு
குறுகியா போனது
உன் மனம்?

இனிய கவிதைக்கு இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!முறைவைத்து முகம் காட்டும் நிலவல்லநீ
என் அறைக்குள்ளும் வந்துநிதம்
அட்சரங்கள் பதித்தாய்
சிறைவைத்தாய் 
முகநுலின் சிட்டுகளை
இதயத்தில்!
உன் உதயத்தால்
சிறகடித்துப் பறக்கின்றோம்!
எழுத்து ஏழை நான்!
வரம்கேட்டேன் வாழ்த்து சொல்ல
வழக்கம்போல்
வார்த்தை வரம் கிட்டவில்லை
மனமலரைப் பறித்தெடுத்து
நினைவுகளால் மணம் கூட்டி
இணையத் தென்றலிலே அனுப்புகிறேன்
ஏற்று அருளும்
இதமான இதயம் அது
என்பதனால்!


இனிய கவிதைக்கு இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!

எளிமையும் இனிமையும் ததும்பும் பாவலரே எங்களுடன் என்றும் இணைந்து இருக்கும் கருணையும் வேண்டி..... தங்களைப் பல்லாண்டு வாழ்க! என வாழ்த்துகிறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பழனி பாரதி சார்.

Saturday, July 21, 2012

நாணம்..

உன் மூச்சுச் சூட்டில்
பொறிந்து
வெளியேறியது
அதுவரை
நான்
அடைகாத்து வைத்திருந்த
நாணம்!
இன்று

உன் வாசிப்பிற்குள்..... 
கட்டுமானங்களை
உடைத்த
மரபுக் கவிதையாக
நான்!
 

Tuesday, July 10, 2012

என்ன விதி?


உன் கனவில்
நான் வருவதும்
என் கனவில் 
நீ வருவதும்
காதல் விதி!

என் கனவில் 
நீ கொஞ்சிய
நாய் கூட
வருகிறதே
இது
என்ன விதி?


Monday, July 9, 2012

பிரபஞ்சம் அறியாமல்..

அடை காப்பதில்
உனக்கும் எனக்கும்
எத்தனை வேறுபாடுகள்

ஓட்டுக்குள்
ஜணனித்த
உயிரை
உடல் சூட்டில்
உயிர்ப்பித்து
பிரபஞ்ச வெளியில்
உலவ விட
நீ
அடை காக்கிறாய்!

நானும்
அடைகாக்கிறேன்`

எந்தச் சூட்டிலும்
பொறிந்து விடாத
மரணித்துப் போன
காதலை
பிரபஞ்சம் அறியாமல்
மன மயாணத்துள்
புதைத்து
வைக்க
நான்
அடைகாக்கிறேன்!
 

Sunday, July 8, 2012

மெளனம்உன் 
இதழ்கள் மூடிய
மெளனத்தில்
திறந்து விடுகின்றன
என்
நரகத்தின்
கதவுகள்!

அடைகாத்தல்பருந்திடம்
குஞ்சைப்
பறிகொடுத்த
புறாவைப்
பார்த்தபோது
புரிந்து கொண்டேன்
அடைகாத்தல்
எத்துணை
கடினம் என்று...

பொத்திப் பொத்தி
அடைகாத்த
காதலைப்
பறிகொடுத்த போது
உணர்ந்து கொண்டேன்
பரிகொடுத்தல்
எத்துணை
துன்பமென்று....

Saturday, July 7, 2012

காதல் குருவிதாயை
கூட்டில் வைத்து
பொத்திப் பொத்தி
வளர்க்கும்
சின்னக்குருவியாக
நீ

உன்
பிஞ்சு இதழ்
கலந்து  ஊட்டும்
காதலுக்கு
தவமிருக்கும்
தாய்க்குருவியாக...
நான்

காதலில் 
முரண்பாடும்
உடன்பாடோ...Sunday, July 1, 2012

உறங்காத அந்த விடியல்


வண்ண வண்ணமாக
கண்களில் வந்து போகும
கோல
கலர்க் கனவில்
உறங்காத
அந்த விடியல்

சாணி வாசம்
சுகந்தமாய் வீசும்
குளிர்ச்சியான
மண் தரை

போட்டி போட்டு
பூசனிப் பூவை
சாணியில் நட்டு வைக்கும்
அம்மாவின் கோலம்

குளித்தவுடன்
வாஞ்சையாய்
அழுத்தி அழுத்தி
தலையைத் துவட்டிவிடும்
அப்பாவின்  வாசம்


புதுப்பாவாடை
குடை விரிக்க
நமஸ்காரம் செய்தவுடன்
தொட்டு விடாமல்
எட்ட நின்று
காசு கொடுக்கும்
பாட்டியின் ஆச்சாரம்


கருகும்
மஞ்சள் கொத்தின்
மணத்துடன்
பொங்கலோ பொங்கல்
சொன்ன உற்சாகம்


பிடிவாதமாய்
சர்க்கரை
பொங்கலை மட்டும்
தின்று
நிரம்பிய வயிறு

ஆஹா.....
எல்லாம் இனிமையாக
நினைவுகளில்!
ப்ச்
ஏக்கம் நிஜத்தில்!!