Sunday, November 15, 2015

மழைக்குழந்தை



கம்மியும்
கை கால்களை உதைத்து கர்ச்சித்தும்
ஒலி எழுப்பும்
குழந்தையின்
அழுகையாய்க் கேட்கிறது
பலஹீனமாகவும்
பலமாகவும் பெய்யும்
மழையின் குரல்

அழவும் தெரியாமல்
அழாமல் இருக்கவும் முடியாமல்
விம்மி வெதும்பிக் கொண்டிருக்கும்
குழந்தையாய்
பரிதாபமாக முகத்தை
வைத்துக் கொண்டிருக்கிறது
மழை பொழியாத
நேரத்து மேகம்

அவ்வப்போது நிறுத்தி
நம் கவனத்தை ஈர்க்கும்
குழந்தையின் அழுகையென
நாம் கவனிக்கவே
விட்டு விட்டு
பெய்கிறது
மழையும்

அடிக்க வேண்டும் போல
கோபம் வந்தாலும்
ரசிக்காமல்
இருக்க முடிவதில்லை
குழந்தைகளின்
அடத்தைப் போலவே
மழையின்
அடத்தையும்

ஆனால்
குழந்தைகள் ஒருபோதும்
கொல்வதில்லை
குழந்தைகளை
மழையைப் போல!

- ஆதிரா முல்லை

Friday, November 13, 2015

இருப்புப் பாதை



பிழை பொறு

மன்னி

இந்த இணையில்

நீளும் பழுதற்ற

இருப்புப் பாதை

நட்பைத்

தொலை தூரம்

ஓட்டிச் செல்லும்


Wednesday, November 11, 2015

ரெளத்திரம் பழகு...... பாரதி கிருஷ்ணகுமார்


ஒரு வாரமாக எழுத நினைத்து கொரியக் கருத்தரங்கம், வைகை அனிசு மரணம், மழை...... காய்ச்சல்... மகிழ்ச்சி... உளைச்சல் என்று ஏதேதோ தொடர்ந்ததால் இன்றுதான் எழுத முடிந்தது. எதைப் பற்றி என்று கேட்கிறீர்களா? விகடன் நேர்காணல் பற்றி. என்ன... என் நேர்காணலா....... அடப் போங்க......
எழுத்தாலும் பேச்சாலும் தமிழ் மக்களைக் கவர்ந்த ஒரு மாபெரும் ஆளுமையின் நேர்காணல். ஆமாம்.....
ஒரு நூல் வெளியீட்டு விழாவில் முன் தயாரிப்பு ஏதுமில்லாது பத்து நிமிட நேரமே பேசிய, அந்த ரசமான (மிளகு ரசம் போல சுரீரென்று) பேச்சைக் கேட்டு அரங்கத்தின் முன் சென்று ஒருவரிடம் அறிமுகப் படுத்திக் கொண்டது எனக்கு முதல் அனுபவம்.
அந்த ஓரிரு வார்த்தைகளோடு முகவரி அட்டையைப் பரிமாறிக்கொண்டு விடைபெற்ற போது நினைக்கவில்லை அவரது ‘அப்பத்தா’, ‘அருந்தவப் பன்றி - மகாகவி பாரதி’ என்னும் இரு நூல்கள் என் இல்லம் தேடி வரும் என்று. இரண்டு இரவுகளில் இரண்டு நூல்களையும் படித்து முடித்த போது என்னுள் எஞ்சியது பெரும் வியப்பு.
குறிப்பாக.... அருந்தவப் பன்றியா பாரதியா....... என்ற வினாவோடு நூலை விரித்த போது விரிந்து கொண்டே போனது வியப்பு. பாரதி.. பாரதி என்று கூறும் ஒருவரும் கூறாத புதிய செய்திகள் அடங்கியது அந்த ஆய்வு நூல். ஆனால் அது எந்தப் பட்டத்திற்காகவும் ஆய்வு செய்யாத நூல். அந்த எழுத்துகளைப் பதித்த விரல்களுக்கு என்ன பரிசு தருவது......... !? விமர்சனத்தைத் தவிர.......அது பற்றிய விமர்சனம் அடுத்த பதிவில்.....
இப்போது.. விகடன் நேர்காணல் பற்றி.......
நம்பிக்கையோடு பேசுவதற்கு ஒரு வாயும் நம்பிக்கையோடு கேட்பதற்கு ஒரு ஜோடிக் காதுகளும் இருக்கும் வரை உரையாடலுக்கான தேவையும் உரையாடலும் இருந்து கொண்டே இருக்கும்....... என்று சொல்லும் நம்பிக்கை....
எதிர்ப்பின் குரலுக்குத்தான் சுதந்திரம் தேவை. ஆமோதிப்பின் குரலுக்கு எதற்குச் சுதந்திரம் என்று கேட்கும் தார்மீகம்......
அப்பாக்கள் கட்டிலில் படுத்திருப்பதும், அம்மாக்கள் தரையில் படுத்திருப்பதும் இந்தியக் குடும்பங்களில் சமத்துவத்துக்கான குறியீடு.... என்ற பண்டைய மரபின் மீதான எள்ளல்.......
சாக்ரடீசின் இறுதிக் கணங்களை பிளேட்டோ ஆவணப்படுத்தியிருக்கிறார். இறந்து போகும் போது டால்ஸ்டாய் பயன்படுத்திய கைக்குட்டையைப் பத்திரப் படுத்தியிருக்கிறார்கள்.ஆனால் உலகப் பொதுமறை’ எனச் சொல்கிற திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் யார் என நமக்குத் தெரியவில்லை...... என்று குமுறும் அறச்சீற்றம்...........
இந்தியாவில் இருந்த போது ஆஷ் தம் மனைவிக்கு எழுதிய காதல் கடிதங்களைப் பத்திரப் படுத்தியுள்ளது அவரது குடும்பம். ஆனால் வாஞ்சியின் மனைவி பொன்னம்மாள் என்ன ஆனாள்? என்று கேட்கும் வாஞ்சை........
ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குக் காரணமான ஜெனரல் டயரைத் தேடிக் கொல்ல, இலண்டன் சாராயக் கடைகளிலும் பன்றித் தொழுவத்திலும் வேலை செய்து ஒரு துப்பாக்கி வாங்கி 16 வருடங்கள் காத்திருந்து படுகொலை செய்கிறானே உத்தம்சிங்........ இதுதான் ரெளத்திரம் பழகுவது... என்று பாரதியின் வாக்குக்கு ஆதாரம் கொடுக்கும் தெளிவு........
சுதந்திரம் பெற்று 68 ஆண்டுகளுக்குப் பிறகும் தன் மக்களுக்குக் கல்வி கொடுக்காத அரசு........ ஒவ்வொரு நாளும் சிறுபான்மை மக்களை அச்சத்தின் விளீம்பில் வாழ நிர்ப்பந்திக்கிற அரசு, இன்னமும் பெண்களுக்குப் பாதுகாப்பான சமுக வாழ்க்கையை உத்தரவாதப் படுத்த வக்கற்ற இந்த அரசிடமிருந்து விருது பெற்றுக் கொள்வது அவமானம் இல்லையா என்று கேட்கும் துணிவு........
இந்தக் கேடு கெட்ட அரசிடம் விருதுகள் வாங்க கைகள் கூச்சப் பட வேண்டும்........ என்று பழகிய ரெளத்திரம்......
இத்தனைக்கும் ஒட்டு மொத்தமான ஒரு பெயர்தான் பாரதி கிருஷ்ணகுமார் என்னும் ஆளுமை.

Friday, November 6, 2015

கொரிய - தமிழ் உறவுகள் பற்றிய கருத்தங்கில்..


கொரியத் தூதரகமும் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய கொரிய தமிழ் உறவுகள் குறித்தான கருத்தரங்கு இன்று (06/05/15) அடையார் ரெசிடன்சி உணவகத்தில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் “கொரியாவில் தமிழரின் நெசவுக்கலையும் பண்பாடும் மொழிக்கூறுகளும்” என்னும் தலைப்பில் கட்டுரை வாசித்தேன். முதல் முறையாகப் பவர்பாயிண்ட் பயன்படுத்தியும் ஆங்கிலத்திலும். பாவம் வந்திருந்தவர்கள்......

















நேற்று (05/11/15) கொரியத் துணைத் தூதர் ஆய்வாளர்களுக்குக் கொடுத்த இரவு விருந்தின் போது





இது விருந்துக்கு முந்தைய கலந்துரையாடலின் போது