Friday, November 6, 2015

கொரிய - தமிழ் உறவுகள் பற்றிய கருத்தங்கில்..


கொரியத் தூதரகமும் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய கொரிய தமிழ் உறவுகள் குறித்தான கருத்தரங்கு இன்று (06/05/15) அடையார் ரெசிடன்சி உணவகத்தில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் “கொரியாவில் தமிழரின் நெசவுக்கலையும் பண்பாடும் மொழிக்கூறுகளும்” என்னும் தலைப்பில் கட்டுரை வாசித்தேன். முதல் முறையாகப் பவர்பாயிண்ட் பயன்படுத்தியும் ஆங்கிலத்திலும். பாவம் வந்திருந்தவர்கள்......

















நேற்று (05/11/15) கொரியத் துணைத் தூதர் ஆய்வாளர்களுக்குக் கொடுத்த இரவு விருந்தின் போது





இது விருந்துக்கு முந்தைய கலந்துரையாடலின் போது





Tuesday, October 27, 2015

வ.வே.சு அவர்களுக்குப் ‘படைப்புலகச் சிற்பி’ விருது



இன்று மயிலை, பாரதிய வித்யாபவனில் உறவுச் சுரங்கம், பாரதிய வித்யாபவன், கிருஷ்ணா இனிப்பகம் மூன்றும் இணைந்து நடத்திய ‘சிகரத்தைத் தொட்ட சிவசங்கரி’ நிகழ்வில் விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேரா. முனைவர். வ.வே.சு அவர்களுக்குப் ‘படைப்புலகச் சிற்பி’ விருது வழங்கப் பட்டது. (மனம் நிறைந்த வாழ்த்துகள் ஐயா)
இந்நிகழ்வில் மருத்துவ மாமணி திரு. சொக்கலிங்கம் அவர்கள் ‘காக்க காக்க இதயம் காக்க’ என்னும் தலைப்பில் சிற்றுரை ஆற்றினார். சிற்றுரையா அது? ஊசியின் காதில் ஒட்டகத்தை நுழைத்தாற் போல பெரிய பயன் தரும் சிறிய உரை.
வாழும் பாரதி இல. கணேசன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். இந்திய நிலவறையில் காசுமீரம் பாகிஸ்தான் இரண்டும் எப்படி இடம்பிடித்துள்ளது என்ற நாற்பதுகளின் வரலாற்றை, ஏசுபிரான் சிலுவையில் மறிக்கவில்லை காசுமீரத்திற்கு வந்து காயத்திற்குப் பச்சிலைகளை எல்லாம் பயன்படுத்தி மருத்துவம் செய்து பிழைக்க வைத்து விட்டனர் என்று தாம் படித்த செய்தியைப் பகிர்ந்து கொண்டார்.
இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்ற வந்த வ.வே.சு. அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் சிறப்புரையும் சிரிப்புரையுமாகத் தந்து அரங்கத்தைத் தம் கட்டுப்பாட்டில் இருந்து இம்மியும் அசையாமல் இருக்கச் செய்தார். பேரா. வ.வே.சு. அவர்களின் உரையை ஒலிப்பதிவு செய்தேன். எப்போதும் முதல் வரிசையில் அமரும் வழக்கம் இல்லாததால் ஒளிப்பதிவு செய்ய இயலவில்லை. அந்த வருத்தத்துடன்,,,,,,,,,,
சில நிகழ்வுகளில் ஒருவரது உரை நன்றாக இருக்கும். அல்லது இருவரது உரை நன்றாக இருக்கும். ஆனால் இன்றைய நிகழ்வில் எல்லோருடைய உரையும் சிறப்புரைதான் தொகுத்து வழங்கிய பேரா.முனை. உலகநாயகி பழநி அவர்களின் உரை உட்பட........ இது ஒரு வரலாற்று மாலை

Saturday, October 24, 2015

பேக்கரும்பு பெற்றபேறு





                         ஏவுகணை எழுந்ததுஇரா மேசுவ ரத்தில் 
                                   எக்காள மிட்டவரின் இடுப்பொ டிக்க 
                        சாவுகணை வந்ததென்று எதிரி எல்லாம்
                                   சரணடைந்தார் ஆயுதத்தை மூடி வைத்தார் 
                         நோவுகளே தீண்டியவர் இளமை எல்லாம்
                                    நோகாமல் நோற்பதல்ல வெற்றி என்னும்
                          பாவுகளை நீர்நூற்றீர்; படகு ஓட்டும்
                                     பரதவரே! பாரதத்தின் தலைவ ரானீர்!


                           சுக்கலாகச் சிதறவிட்டீர்; பொக்ரான் சக்தி
                                     சோதனையில் வல்லரசு நாட்டை யெல்லாம்
                            கக்கனைத்தான் எளிமை என்பார்; அப்துல்
                                     கலாம்நீர் அவருக்கே அப்பன் ஆனீர்
                            நிக்காவே செய்யாமல் பிள்ளை பெற்று
                                       நேசமுடன் வளர்த்திட்ட கணியன் நீரே
                            விக்கலெல்லாம் உம்நினைவைச் சுமந்தே விக்கும்
                                        வீறுகொண்ட இளைஞர்க்கவை விசையாய் நிற்கும்

                             நாளிதழை நீர்சுமந்தீர் நாங்கள் நெஞ்சில்
                                         நாள்தோறும் சுமக்கின்றோம் உம்நி னைவை
                             பாழிதழா உம்இதழ்கள்? தமிழ்ப்பா தம்மை
                                        பாரெல்லாம் பாடிவந்த நெய்தல் பண்ணின்
                             யாழிதலே உம்மிதழ்கள்; புறநா னூறு,
                                         அறநூலாய் நீர்வாழ்ந்தீர்; கொல்லும் நச்சு
                             வேலிதழை ஏந்துகின்ற கால னுக்கு
                                          விருந்தானீர் கதறுகின்றோம் காலா சா!சா!

                            விழலுக்கு நீர்இறைத்தார் பலரும்; நீரோ
                                        விழுதுகளின் விளைச்சலுக்கே நிதம்உ ழைத்தீர்
                            கழலையல்ல உம்சுரப்பு கருணை மாரி
                                        கணைமாரி அணுமாரி பெய்த போதும்.
                            மழலையெல்லாம் மாலையா கிஉம்மைச் சூடும்
                                        மனமாண்பு விதையிட்ட உழவா; எங்கள்
                            சலவையே செய்யாத அழுக்கை எல்லாம்
                                       சஞ்சலமே இல்லாமல் வெளுத்து விட்டீர்

                            நாகரும்பு மனிதர்நீர்: நவின்ற தெல்லாம்
                                        நற்றமிழன் வாழ்முறைக்கு வாக்கு கள்தாம்
                            கைகரும்பு எழுத்தாகப் பதித்த தெல்லாம்
                                        காலத்தை வெற்றிகொள்ளும் புதிய கீதை
                             தேக்(கு)கரும்பு தேகம்கொண்ட தியாகி! தேவ
                                        குழந்தைகளும் காண்பதற்கோ வானம் சென்றீர்?
                             பேக்கரும்பு மணிவயிறு பெற்றபேறு மீண்டும்
                                         பெருமைமிகு கருவானீர் புனித மண்ணில்

- ஆதிரா முல்லை
பாரத ரத்னா டாக்டர் அப்துல் கலாம் மறைந்த போது எழுதிய அஞ்சலி கவிதை. வேறு இதழ்களில் வந்து விட்டது என்று கூறிய பின்னும் 4 இதழ்களில் இடம் பிடித்தது இந்தக் கவிதை.
நன்றி...
கவிதை உறவு,
புதுகைத் தென்றல்
உரத்த சிந்தனை
முரசு சங்கமம்

கவிதைகளால்தான் முடியும்



உறக்கத் தேவதையால்
ஆசிர்வதிக்கப் படாதது
பலரின் இரவுகள்
அவளின் சாபங்களோடு
வாழ்வது அவ்வளவு எளிதல்ல
எப்படியேனும் கடந்தாக வேண்டும்
ஆசிர்வாதம் பெறாத அந்த இரவுகளை
கவிதைகளால்தான் அது முடியும்
விழித்தெழுக எழுத்துகளே
கவிதைகளுக்கென
ஆசிர்வதிக்கப் பெற்றவர்கள் நீங்கள்

Thursday, October 15, 2015

உங்கள் ஆதிராவுக்கு டாக்டர் அப்துல் கலாம் தங்கப் பதக்க விருது


















குலோபல் எகனாமிக் ஃப்ராகரஸ் ரிசர்ச் அசோசியேஷன், புது தில்லி (CLOBAL ECONOMIC PROGRESS & RESEARCH ASSOCIATION, NEW DELHI) பல்வேறு துறைய்யில் சாதனை புரிந்தவர்களுக்கு டாக்டர் அப்துல் கலாம் கோல்டு மெடல் விருதினை (DR. ABDUL KALAM GOLD MEDAL AWARD)  வழங்கியது.

அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டது மகிழ்வு. உச்சநீதி மன்ற நீதியரசர் ச. மோகன், அண்ணா பல்கலையின் முன்னைத் துணைவேந்தர் டாக்டர் மன்னர் ஜவஹர் மற்றும் அரிமா சங்க மாவட்ட ஆளுநர் நித்யா குமார், ஜிப்ராவின் பொதுச்செயலாளர் டாக்டர் சாகித் பாஷா ஆகியோருடன்......

அடியேனும் தனி சாதனையாளருக்கான தங்கப் பதக்க விருதினைப் பெற்றேன் என்பது கூடுதல் மகிழ்வு.


Monday, October 12, 2015

சாகசக் கலை



சாகசக் கலை
***************

புலன்களைப் பூட்டி விடுவதும்
புத்துயிர்த்து மலர்த்துவதுமான
சாகசக் கலையைக்
கற்றுள்ளது
உன் விரல்கள் உதிர்க்கும்
வார்த்தைகள்


Tuesday, September 15, 2015

தமிழச்சிக்கு வாழ்த்துகள்

11.09.15 அன்று  நம்ம செல்லத்தமிழச்சி பாரதி பணிச்செல்வர் விருது பெற்றார்கள்.. அழகா குட்டியா ஒரு ஏற்புரை சொன்னாங்க. அவர்களை வாழ்த்தி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட போது.......
சென்ற ஆண்டு இவ்விருதினைப் பெறும் பேற்றினை நானும் பெற்றது மகிழ்வாக



Saturday, September 5, 2015

ஆசிரியர் செம்மல் விருது’ உங்கள் ஆதிராவுக்கு....

ஆசிரியர் தினமான (05.-09.15) இன்று தமிழக கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனத்திடமிருந்துஆசிரியர் செம்மல் விருதுபெற்ற நெகிழ்வான தருணம். 
*************************************************************************************************
*
இனிக்க இனிக்கத் தமிழில் பேசும் இளைய சமுதாயத்திற்காகத் தொண்டாற்றும் மாண்பமை நீதியரசர் ஆர். மகாதேவன் அவர்களிடமிருந்து விருது பெற்றது இனிது.
* யாருடைய பிறந்தநாள் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப் பெறுகிறதோ அவரது இல்லத்தில் இவ்விருதினைப் பெற்றது இனீதினும் இனிது.
* விருது பெற்றவர்களின் சார்பில் ஏற்புரையாற்றியது மேலும் நெகிழ்வு.
* முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களது இல்லம் முழுவதும் சுற்றிச் சுற்றி வந்து அவர் வசித்த இடத்தின் காற்றையெல்லாம் சுவாசித்துத் தீராமல்..... தீரும்பியது பெரிதினும் பெரிது.
.* டாக்டர் இராதா கிருஷ்ணன் அவர்களது பெயர்த்தி (தள்ளாத வயதிலும்) இனிதாக வரவேற்று எல்லோருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டது மகிழ்வினும் மகிழ்வு.
* இத்தனைக்கும் அன்புச் சகோதரர் நல்லாசிரியர் முனைவர். கோ. பெரியண்ணன் அவர்களுக்கு நன்றி.
*************************************************************************************************
எல்லாவற்றுக்கும் மேலாக எத்தனை புகைப்படங்கள்!!!! கவிஞர் நம்ம ஊர் கோபி... உங்களுக்கு நன்றியெல்லாம் கிடையாது. அன்பு....... அன்பு... அன்பு.... அன்பு மட்டும்தான்.
*************************************************************************************************















Thursday, August 27, 2015

குடந்தையுடனும் நெல்லைக் கண்ணனுடனும் பட்டிமன்றம்

கும்பகோணத்தில் என் தந்தை தமிழ்க்கடல் நெல்லைக் கண்ணன் அவர்களின் தலைமையில் பட்டி மன்றத்தில் பேசியபோது.





Tuesday, March 24, 2015

முத்தத் தீர்மானம்




முத்தத்தின் மீது வெறுப்பென்று ஒன்றும் இல்லை
முத்தம் தூய்மையானதுதான்

கண்ணீரைத் தடம் மாற்ற
காமத்தை உருமாற்ற
பெருமைப் பட
பாராட்ட
எல்லாவற்றிற்குமே
ஒரு முத்தம் போதுமானதாக இருக்கின்றது

ஆலயத்திற்கு ஒர் ஆடை
அரங்கிற்கு ஒர் ஆடையென
தரம் பிரித்து அணிவதைப் போல
முத்தங்களும் தரம் பிரித்துப்
பரிமாறப் பட வேண்டும்

அழுந்தப் பதியும் புறங்கை முத்தத்தில்
கருகி விடுகின்றன உரோமங்கள்
உச்சி முகர்வதில் மெச்சிக் கொடுப்பதில்
இதழ்வழி பீறிடும் வெப்பம்
ஓசோனின் கிழிசலாய் துளைத்து விடுகின்றன
நெற்றியை

அதிர அதிர கொடுக்கும்
முத்தத்தின் சந்தடி
மூச்சினை முட்டவே செய்கிறது
பல நேரங்களில்

மழலைகளின் முத்தங்களில் கூட
பால்மணம் வீசுவதில்லை….
பால்ய மனம் வீசுகிறது
சில நேரங்களில்

முத்தத்தின் மீது வெறுப்பென்று ஒன்றும் இல்லை
முத்தம் தூய்மையானதுதான்

என்றாலும்………

அவசரமாக ஒரு தீர்மானம்
நிறைவேற்றி விட வேண்டும்
“இனி
மலர்களின் முத்தம் தவிர
வேறு எதனையும்
ஏற்பதில்லை”


-    ஆதிரா முல்லை

நன்றி புதுகைத் தென்றல்

Tuesday, November 18, 2014

மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் பாராட்டு விழாவில்


தமிழுக்குக் குரல் கொடுத்த உத்தரகண்ட் மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் அவர்களுக்கு 11/11/14 அன்று சென்னை மியூசிக் அகதமியில் கவிப்பேரரசு வைரமுத்து நடத்திய பாராட்டு விழாவில் தோழி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுடன்






Thursday, November 6, 2014

12.11.14 நாளிட்ட குமுதத்தில் என் கவிதை


மரங்கள் அடர்ந்த அடவியொன்றில்
வார்த்தைகளோடு காத்திருந்து அந்த வனக்குயில்
அவன் வந்தவுடன் இசைக்க...

இரவும் பகலும் இறுக்கிக் கொள்ளும்
ஒரு மாலையில்
தென்றலின் வருடலோடும்
வண்டுகளின் கீதத்தோடும்
மலர்களின் மென்மணக் கசிவோடும்
நிலவின் இதச் சூட்டோடும்
மழைச் சாரலின் முத்தங்களோடும்
அதனோடு அவன் அமர்ந்திருந்த போது
இசையோடு இழைக்கத் தொடங்கியது
ஒரு பாடலை அந்தக் கானக்குயில்

எனக்கு இருள் பிடிக்கும் என்றான் அவன்
எனக்கு ஒளி பிடிக்கும் என்றது அது
எனக்குக் காதல் பிடிக்கும் என்றான் அவன்
எனக்குக் கவிதை பிடிக்கும் என்றது அது
இப்படியே தொடர்ந்த வெற்றுரையின் முடிவில்
அவனுக்காகவே அது வைத்திருந்த பாடலைக்
கேட்காமலே புறப்பட்டுப் போனான் அவன்

அவனது காதோரம்
எப்போதும் இசைத்துக் கொண்டே இருக்குமாறு
ஒரு மரண சாசனம் வரைந்து விட்டுப்
புறப்பட்டது
குரலிழந்த அந்தக் குயில்!

தென்றலினது
தேன்வண்டினது
மழையினது
மலரினது
நிலவினது
இசையாய்
அவன் கேட்டுக் கொண்டிருப்பது
அந்தக் காதல் குயிலின் வார்த்தைகளைத்தான்!


நன்றி குமுதம்