Thursday, November 6, 2014

12.11.14 நாளிட்ட குமுதத்தில் என் கவிதை


மரங்கள் அடர்ந்த அடவியொன்றில்
வார்த்தைகளோடு காத்திருந்து அந்த வனக்குயில்
அவன் வந்தவுடன் இசைக்க...

இரவும் பகலும் இறுக்கிக் கொள்ளும்
ஒரு மாலையில்
தென்றலின் வருடலோடும்
வண்டுகளின் கீதத்தோடும்
மலர்களின் மென்மணக் கசிவோடும்
நிலவின் இதச் சூட்டோடும்
மழைச் சாரலின் முத்தங்களோடும்
அதனோடு அவன் அமர்ந்திருந்த போது
இசையோடு இழைக்கத் தொடங்கியது
ஒரு பாடலை அந்தக் கானக்குயில்

எனக்கு இருள் பிடிக்கும் என்றான் அவன்
எனக்கு ஒளி பிடிக்கும் என்றது அது
எனக்குக் காதல் பிடிக்கும் என்றான் அவன்
எனக்குக் கவிதை பிடிக்கும் என்றது அது
இப்படியே தொடர்ந்த வெற்றுரையின் முடிவில்
அவனுக்காகவே அது வைத்திருந்த பாடலைக்
கேட்காமலே புறப்பட்டுப் போனான் அவன்

அவனது காதோரம்
எப்போதும் இசைத்துக் கொண்டே இருக்குமாறு
ஒரு மரண சாசனம் வரைந்து விட்டுப்
புறப்பட்டது
குரலிழந்த அந்தக் குயில்!

தென்றலினது
தேன்வண்டினது
மழையினது
மலரினது
நிலவினது
இசையாய்
அவன் கேட்டுக் கொண்டிருப்பது
அந்தக் காதல் குயிலின் வார்த்தைகளைத்தான்!


நன்றி குமுதம்

9 comments:

  1. சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி பாவாணன் அவர்களுக்கு

      Delete
  2. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ‘தளிர்’ சுரேஷ்

      Delete
  3. வாழ்த்துக்கள் சகோதரி....
    அருமையான கவிதை...
    கவி வரிகளின் ஈரமான சாரல் இன்னும் நெஞ்சுக்குள்...
    புத்தகத்தில் கண்டேன், படித்தேன், களிப்புற்றேன்...

    ReplyDelete
    Replies
    1. புத்தகத்திலும் படித்து இங்கும் வந்து கருத்திட்ட அன்புள்ளத்திற்கு நன்றி மகேந்திரன்

      Delete
  4. மீண்டும் மீண்டும் படித்தேன். உதாசீனத்தின் வலி உருகி வழிகிறது வார்த்தைகளில்.
    வாழ்த்துக்கள் மேடம்.

    ReplyDelete
    Replies
    1. அன்பு சிவா, அந்த நாளைப் போல இப்போது எதுவும் இல்லை. நாம் வலைப்பூ மட்டுமே இருந்திருநதால் நன்றாக இருநிதிருக்கும். பழைய நினைவுகளுடன்.... நன்றி சிவா

      Delete
  5. நலமா ஆதிரா! நல்ல கவிதை! சிவாவிற்கு உங்கள் பதிலை
    ஆமோதிக்கிறேன். எனினும் நல்ல நட்புகள் கால இடைவெளிகளில் கரைந்து போவதில்லை அல்லவா..

    ReplyDelete