Sunday, December 11, 2016

இல. கணேசன் = இலக்கிய கணேசன்




மாநிலங்களவை உறுப்பினராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப் பட்ட தமிழ் இலக்கியவாதியும் பொற்றாமரை இலக்கிய அமைப்பின் தலைவருமான திரு. இல. கணேசன் அவர்களை அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் அவரது இல்லம் சென்று வாழ்த்து தெரிவித்து வந்தோம்... அடுத்து சங்கத்தின் நிகழ்வுக்காக தேதியும் கேட்டுவிட்டு வந்தோம்.
பொதுச்செயலாளர் முனைவர் இதயகீதம் இராமானுஜம், அவை முன்னவர் அரிமா. திரு. பத்மநாபன் மற்றும் முனைவர். வாசுகி கண்ணப்பன் ஆகியோருடன் நானும்...
அன்பும் கனிவும் நிறைந்த அவரது உபசரிப்பில் மகிழ்ந்தோம். அவரது மேடைப் பேச்சு கேட்டிருக்கிறேன். தனிப்பட்ட முறையிலும் இவ்வளவு இலக்கியமாகப் பேச முடியுமா என்று வியக்க வைத்தார். இலக்கியம் பலர் கூடி மகிழ்ந்து பேசும்போதே சுவை தருகிறது. பன்னோக்குப் பார்வையைத் தருகிறது. அதுவே மகிழ்வான அனுபவமாக இருக்கும் என்று கூறினார்.
எல்லோர்க்கும் இனிப்பு கொடுத்தார்கள். நவராத்திரி என்பதால் எனக்கும் வாசுகி அம்மாவுக்கும் பரிசுப் பொருட்கள் கொடுக்கப் பட்டது. (வேலைப்பாடுகள் அமைந்த அழகான தட்டு, கண்ணாடிகள் எல்லாம் பதித்த அழகான கைப்பை வெற்றிலை பாக்கு இத்யாதிகள் எல்லாம்) எல்லா திருவிழாக்களிலும் பெண்களையே சிறப்பிக்கிறார்கள். ஆகையால் அடுத்த பிறவியில் பெண்ணாகப் பிறக்க வேண்டும் என்று கூறிவிட்டு ஓர் அழகான நகைச்சுவையைக் கூறினார். இப்படித்தான் ஒரு பெண் அடுத்த ஜென்மத்துல நான் கணவனா பொறக்கனும். நீங்க மனைவியா இருக்கனும் என்று சொன்னாளாம். அவளது கணவன் அப்படி நம்பி எதையும் கேட்டுடாதே. நீ இறந்து அடுத்த பிறவி எடுக்க எப்ப்டியும் ஒரு ஐம்பது அறுபது ஆண்டுகளாவது ஆகும். அதற்குள் நிலைமை தலைகீழாக மாறிவிடும். இப்போதே கணவன்மார்கள் வேலை செய்யத் தொடங்கி விட்டார்கள். அப்புறம் அடுத்த பிறவியிலும் நீதான் அல்லல் பட வேண்டுமா என்று யோசித்துக் கொள் என்றானாம். அவர் இதனை அழகு தமிழில் பழகு தமிழில் சொன்னார். மிக நீண்ட கவிதையால் பொதுச்செயலாளர் இதயகீதம் அவர்கள் அவ்ரை வாழ்த்தினார்.
L.G. அவர்கள் வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தது............ இப்படியும் பெரிய மனிதர்கள் இருப்பார்களா என்று வியக்க வைத்தது. இருக்கிறார்களே....
நெகிழ்வாகவும் மகிழ்வாகவும் இருந்த தருணம்.. என் நூலையும் கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.

No comments:

Post a Comment