Thursday, August 30, 2012

பிரிவுரையும்... வாழ்த்தும்....



என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்....


நினைக்கின்ற பொழுதெல்லாம் கவிதையாகி
நீபாடு என ஊறும் தமிழ் ஊற்று
கணக்கின்ற இதயத்துடன் தேடுகின்றேன் - பிரிவுரை
கவிதைக்கோ ஓர் சொல்ல்லும் கிடைக்கவில்லை

உற்றதொரு ஆலமரக் கிளைகளிலே வாழ்கின்ற
உல்லாசப் பறவைகளே உம்பிரிவால்
இரவினிலே முழுநிலவை மூடிவைத்த மைஇருளில்
கண்ணிருந்தும் தள்ளாடிக் கரைந்திட்டேன் இந்நாளில்
என்றாலும்
வாழ்த்தொன்று கூறிடவும் விழைந்திட்டேன்

கல்வியெனும் அழியாத செல்வம் பெற்று
காதலினால் வைத்தைக் கட்டிப் போட்டு
இணையற்ற பொருள்செல்வம் பெரிதும் பெற்று
இன்பத்தை இடையறாது என்றும் பெற்று
இசைநாட்டி வாழ்ந்திடுவீர் என்றும் என்றும்

உழைப்பினிலே ஓயாத கதிரவன் போல்
ஊக்கத்தில் இமயத்தின் அடிமலை போல்
இமைக்காமல் முன்னேறிச் சென்று நாளை
ஈட்டிடுவீர் வெற்றிஎட்டு திக்கும் திக்கும்


கடமைதனை மறவாது செய்வார்க் கெல்லாம்
காலமகள் வெற்றி தந்து வாழ்த்தும் இசைப்பாள்
உடைமைதனை பிறர்க்கீந்து மகிழ்ச்சி கொண்டால்
உண்டாகும் பெரும்பேறு சிறுமை இல்லை

தடைகண்டு துவளாது முனைந்து செல்வீர்
வரலாறு உமபெயர்க் கும்இடம் கொடுக்கும்
போற்று கின்ற புத்துலக சிற்பியாகி
பொறித்திடுவீர் பொன்னெ ழுத்தால் உம்புகழை

இமைகாக்கும் கண்போல இல்ல றத்தை
இருவருமே போற்றி வாழ்ந்து இன்பம் காண்பீர்
பெற்றவரும் மற்றவரும் வியந்து போற்ற
நற்றமிழ் போல் பெருவாழ்வு வாழ்ந்திடுவீர்

என்றென்றும் என்று நற்றமிழில் நாவைசைத்தேன்
விரும்புகின்ற வாழ்த்தொன்று உளமாற இசைத்திட்டேன்
உளக்குளத்து உதித்தெழுந்து இமைச்சிப்பி பிரசவித்த
விழிமுத்து மாலையிட்டு விரும்பாமல் விடையளித்தேன்!!

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

Monday, August 20, 2012

தந்தை மகற்காற்றும் நன்றி....…



அன்று 
எல்லா பாடங்களிலும் 
தான் பெற்ற 
முதல் மதிப்பெண்களை...

ஆட்டத்தில்
அள்ளிக் குவித்த 
வெள்ளிக் கோப்பைகளை...

ஆறாவது முறையும்
சுதந்திரதின கொண்டாட்ட
மேடையில் பேசி
அடர் மழையாய்
வாங்கிய கைத்தட்டலை...

அத்துணை ஆசிரியர்களும்
அன்பு மகள் என்று
அள்ளியணைத்ததை...

தாயிடம்
சொல்லிச் சொல்லி
இன்புற்றுக் கொண்டிருந்தது,

தந்தையின் 
மோகத் தவத்துக்காய்

தான்
எய்ட்ஸ் வரம்பெற்று...
எழுத்தறிவு வரம் பெறாத..

இருளுலகில் வாழும்
அந்தக் குழந்தை! 


Saturday, August 18, 2012

தத்துவத்தை உயிர்ப்பிக்க!




எழும் ஓசையால்
சூழும் மாசினால்
சூறாவளியாய்ச் சூழ்ந்து வரும்
அழிவுகளைச்
சமன்செய்து கொள்ள முடியாது
கையற்று சுழலும்
பூமியாய் நான்

எரிமலையை
இதயத்துள்
கொந்தளித்துக் கொண்டு,,,

உயிரை மூடிய 
ஒற்றை அங்கியும்
ஓசோனால்
கிழிபட்டுக்கொண்டிருக்கும்
அபாயத்தைத் தடுக்க முடியாத
வானமாய் நீ

சேர்க்க முடியாத
இதயப் பிளவை 
விழிநூலால் 
தைத்துக்கொண்டு...

இந்த உலகுக்கும்
நம் உறவுக்கும்
பதில் சொல்லவேண்டிய
வி(ம)தியோ
வான மங்கைகளின்
நாட்டியத்தில்
களித்துக்கொண்டு
சொர்க்கத்தில்....
பேராசையில் மூழ்கி

கடைசி மூச்சுவரை
வாழ்ந்து விடுவதுதான்
வாழ்க்கைத் தத்துவம்!

அந்த நொடிவரை
காதலுடன்
வாழ்ந்து விடுவோம்
பூமியும் வானமுமாய்

இந்த
உலகத்துடன் சேர்ந்து
தத்துவத்தை உயிர்ப்பிக்க!


Tuesday, August 7, 2012

கன்னக் கதுப்பிலும் நீயே....



வயலோரம்
வளைந்தோடும்
தென்றல்
நிலவின்
தேன் சாரலுடன்
உன் வாசத்தைச்
சுமந்து வருகிறது

இசை கூட்டி

இதழ்மீட்டி
பொன்வண்டுகள்
குளிர்செய்கின்றன
மலர்களின்
செவிமடல்களில்
உன் சொற்களால்

இதழ்பிரியாது

நாணிக்கவிழ்கின்றன
நறுமுகைகள்
அவற்றின்
கன்னக் கதுப்பிலும்
நீயே
புன்னகைக்கிறாய்
ஒளி நிலவாய்!

Thursday, August 2, 2012

குமுதம் இதழில் என்கவிதைத் துளிகள்....



இந்த வாரம் (08.08.12) நாளிட்ட

குமுதம் இதழில் வெளியான என்

கவிதைத் துளிகள்
Posted by Picasa

 குமுதம் இதழுக்கும்

இதழாசிரியருக்கும்

என் மனமார்ந்த நன்றிகள்

Wednesday, August 1, 2012

கத்தும் குயிலோசை...

நான் நினைக்க
மறக்கும்
என் தனிமையை
கன்ணுக்குத்
தெரியாமல்
எங்கோ இருந்து
கத்திக் கத்தி
நினைவூட்டுகிறது
அந்தக் குயில்

உன்
கைப்பேசியின்
கதறலைப் போல...





Sunday, July 29, 2012

ஒற்றை மழையில்
மலரின்
முகமெங்கும்
இதழ்ப் பதித்தது
சாரல்


மழை மணத்தால்
மதுமலரின்
மனமெங்கும்
இரசவாதம்

Wednesday, July 25, 2012

சக்கரவாகமாக ஏந்திக்கொள்



அன்பை 
அடர் மழையாய்க் 
கொட்டி
தீர்க்கிறேன்
சக்கரவாகமாக
ஏந்திக்கொள்வாய்
என்று.

அள்ளிக்கொள்ள
அத்தனை பெரிய
பாத்திரம்
என்னிடம்
இல்லை என்கிறாய்!
அவ்வளவு
குறுகியா போனது
உன் மனம்?

இனிய கவிதைக்கு இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!



முறைவைத்து முகம் காட்டும் நிலவல்லநீ
என் அறைக்குள்ளும் வந்துநிதம்
அட்சரங்கள் பதித்தாய்
சிறைவைத்தாய் 
முகநுலின் சிட்டுகளை
இதயத்தில்!
உன் உதயத்தால்
சிறகடித்துப் பறக்கின்றோம்!
எழுத்து ஏழை நான்!
வரம்கேட்டேன் வாழ்த்து சொல்ல
வழக்கம்போல்
வார்த்தை வரம் கிட்டவில்லை
மனமலரைப் பறித்தெடுத்து
நினைவுகளால் மணம் கூட்டி
இணையத் தென்றலிலே அனுப்புகிறேன்
ஏற்று அருளும்
இதமான இதயம் அது
என்பதனால்!


இனிய கவிதைக்கு இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!

எளிமையும் இனிமையும் ததும்பும் பாவலரே எங்களுடன் என்றும் இணைந்து இருக்கும் கருணையும் வேண்டி..... தங்களைப் பல்லாண்டு வாழ்க! என வாழ்த்துகிறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பழனி பாரதி சார்.

Saturday, July 21, 2012

நாணம்..





உன் மூச்சுச் சூட்டில்
பொறிந்து
வெளியேறியது
அதுவரை
நான்
அடைகாத்து வைத்திருந்த
நாணம்!
இன்று

உன் வாசிப்பிற்குள்..... 
கட்டுமானங்களை
உடைத்த
மரபுக் கவிதையாக
நான்!
 

Tuesday, July 10, 2012

என்ன விதி?


உன் கனவில்
நான் வருவதும்
என் கனவில் 
நீ வருவதும்
காதல் விதி!

என் கனவில் 
நீ கொஞ்சிய
நாய் கூட
வருகிறதே
இது
என்ன விதி?


Monday, July 9, 2012

பிரபஞ்சம் அறியாமல்..





அடை காப்பதில்
உனக்கும் எனக்கும்
எத்தனை வேறுபாடுகள்

ஓட்டுக்குள்
ஜணனித்த
உயிரை
உடல் சூட்டில்
உயிர்ப்பித்து
பிரபஞ்ச வெளியில்
உலவ விட
நீ
அடை காக்கிறாய்!

நானும்
அடைகாக்கிறேன்`

எந்தச் சூட்டிலும்
பொறிந்து விடாத
மரணித்துப் போன
காதலை
பிரபஞ்சம் அறியாமல்
மன மயாணத்துள்
புதைத்து
வைக்க
நான்
அடைகாக்கிறேன்!
 

Sunday, July 8, 2012

மெளனம்



உன் 
இதழ்கள் மூடிய
மெளனத்தில்
திறந்து விடுகின்றன
என்
நரகத்தின்
கதவுகள்!

அடைகாத்தல்



பருந்திடம்
குஞ்சைப்
பறிகொடுத்த
புறாவைப்
பார்த்தபோது
புரிந்து கொண்டேன்
அடைகாத்தல்
எத்துணை
கடினம் என்று...

பொத்திப் பொத்தி
அடைகாத்த
காதலைப்
பறிகொடுத்த போது
உணர்ந்து கொண்டேன்
பரிகொடுத்தல்
எத்துணை
துன்பமென்று....

Saturday, July 7, 2012

காதல் குருவி



தாயை
கூட்டில் வைத்து
பொத்திப் பொத்தி
வளர்க்கும்
சின்னக்குருவியாக
நீ

உன்
பிஞ்சு இதழ்
கலந்து  ஊட்டும்
காதலுக்கு
தவமிருக்கும்
தாய்க்குருவியாக...
நான்

காதலில் 
முரண்பாடும்
உடன்பாடோ...



Sunday, July 1, 2012

உறங்காத அந்த விடியல்


வண்ண வண்ணமாக
கண்களில் வந்து போகும
கோல
கலர்க் கனவில்
உறங்காத
அந்த விடியல்

சாணி வாசம்
சுகந்தமாய் வீசும்
குளிர்ச்சியான
மண் தரை

போட்டி போட்டு
பூசனிப் பூவை
சாணியில் நட்டு வைக்கும்
அம்மாவின் கோலம்

குளித்தவுடன்
வாஞ்சையாய்
அழுத்தி அழுத்தி
தலையைத் துவட்டிவிடும்
அப்பாவின்  வாசம்


புதுப்பாவாடை
குடை விரிக்க
நமஸ்காரம் செய்தவுடன்
தொட்டு விடாமல்
எட்ட நின்று
காசு கொடுக்கும்
பாட்டியின் ஆச்சாரம்


கருகும்
மஞ்சள் கொத்தின்
மணத்துடன்
பொங்கலோ பொங்கல்
சொன்ன உற்சாகம்


பிடிவாதமாய்
சர்க்கரை
பொங்கலை மட்டும்
தின்று
நிரம்பிய வயிறு

ஆஹா.....
எல்லாம் இனிமையாக
நினைவுகளில்!
ப்ச்
ஏக்கம் நிஜத்தில்!!



Tuesday, June 26, 2012

எனக்கான சவப்பெட்டி


எனக்கான
சவப்பெட்டியைத்
தினம் தினம்
வெவ்வேறு
வடிவில்
உருவாக்குகின்றன
உன்
நினைவுகள்

நீ - நான்


நீருக்குள் 

வீசிய 


வெடி குண்டாக


இதயத்தின் 


ஆழத்தில்


நீ 



வெடித்துச் 

சிதறியதோ

நான்!




Monday, June 25, 2012



மீனாகப் பன்றியாக மிதக்கின்ற ஆமையாக
மேலான அவதாரங்கள் - பத்தும்
தேனாக இனிக்கிறதாம் தேடுகின்றேன் அவற்றுள்ளே 
தெய்வப்பெண் ஒன்றில்லையே
வீணான ஆதிக்க எண்ணத்தால் பெண்ணினத்தின் 
வேரறுத்துப் போட்டனரே 
ஆனாலும் தாய்தெய்வம் அன்புதனை சுமந்திங்கு 
ஆறாகப் பாய்கின்றதே

Saturday, June 23, 2012

தாய்


காரை மண் சிமெண்ட் அடிக்கல் இன்றி
கால்கள் இரண்டில்
கருவறை சுமந்து
காதல் குழந்தையை
கடவுளாக்கி
ஒன்பது மாதம்
உதிர நெய்யும்
உயிர்மலர்ப்பூவும்
உணர்வுடன் பெய்து
வேள்வி நடத்தும்
ஒப்புயர்வில்லா
ஒருதனி பக்தை

தாய் 

Tuesday, June 19, 2012

தொலைதூர நண்பன்!




உடைந்து
நொறுங்கும் போதெல்லாம்
அள்ளியெடுக்க
உன்
கரம் வேண்டும்
என்னருகில்!

இமைக்கரை
உடையும் போதெல்லாம்
அணை போட
உன்
சுட்டுவிரல்
வேண்டும்
என்னருகில்!

துவளும் போதெல்லாம்
சுகமாகச்
சாய்ந்து கொள்ள
உன்
உன் தோள் வேண்டும்
என்னருகில்!

என்றாலும்
என்றென்றும்
என்
தொலைதூர
நண்பனாக
நீ வேண்டும்!
 

Friday, June 15, 2012

மரணித்தும்


கண்டவர் விண்டதில்லை
விண்டவர் கண்டதில்லை
என்று
கூறுவதெல்லாம்
சுத்தப் பொய்
உன்
வார்த்தைகளின்
மெளனத்தால்
மரணித்தும்
உயிர்த்திருக்கிறேனே!

அவனுக்கு அவள்





அகோரப் பற்களுடன்
நீண்ட நாவுடன்
கைகளில்
சூல்மும்
கத்தியும்
ஈட்டியும்
உடுக்கையும்
இல்லாத
அழகான
காளியாகக்
காட்சியளிக்கிறாள்
அவனுக்கு
அலுவலகத்தில்
மேலாளர் 
இருக்கையில்
அமர்ந்திருக்கும்
அவள்














Saturday, June 9, 2012

சவங்கள்!




என்றோ
மாய்ந்து போன
காதலின்
சுவடுகளை
சவக்குழியில்
புதைக்க நினைக்கிறேன்.


அறிவுப் பாடையில்
அரங்கேறிய
ஆயிரமாயிரம்
அணுக்களில் இருந்தும்
பிடுங்கி எடுத்த
நினைவின்
நீண்ட நெடிய
கடைசி
 ஊர்வலத்திற்கு


இதயம்
அடிக்கிறது
தாரை தப்பட்டை
கண்கள்
கன்னத் தெருவெங்கும்.
மத்தாப்புப்
பூக்களை
உதிர்க்கிறது


நாவின்
புலம்பல்
நர்த்தனத்துடன்
இறுதிச்சடங்கு
நடக்கிறது


என்னுள்ளிருந்து
இடம்பெயர்ந்தது
அந்த நாட்கள்
என்றிருக்கும்போது


பிரேதப்
பரிசோதனைக்காகத்
தோண்டி எடுக்கப்படும்
பிணங்களாய்
மீண்டும்
மெல்ல மெல்ல
மேலெழுகின்றன
நினைவுச் சவங்கள்!





ஆசை முகம் மறந்து போச்சே.... மகா கவியின் அழகான காதல் பாடல்

Thursday, June 7, 2012

ஆங்கில மோகம்


அரிச்சுவடியில்
அழகாய்
சிரிக்கும்
அம்மா
நேரில்
அடிக்க வருகிறாள்
அம்மா என்றதால்!





Sunday, June 3, 2012

தமிழின் தலைமகனுக்கு ஒரு வாழ்த்து


கல்லணை தந்தான் சோழன்
கனித்தமிழ் செழிக்க மேடை
சொல்லணை தந்தாய் நீதான்
சுவையணை வரியில் வைத்தாய்
பல்லணை பயிர்க்குத் தந்தாய்
பழந்தமிழ் நீயே காத்தாய்
நெல்லணை தஞ்சை வளத்தை
நிதம்நிதம் நாட்டில் வார்த்தாய்

அஞ்சுகத் தாயின் மைந்தா
ஐம்முறை ஆட்சி கண்டாய்
நஞ்சிடும் வைதீ கத்தின்
நரம்பினை அறுத்துச் சாய்த்தாய்
கொஞ்சிடும் ச்ங்கப் பாட்டைக்
குப்பனும் கேட்க வைத்தாய்
அஞ்சிடும் பெரியார் தொண்டின்
அனலென பகையைத் தீய்த்தாய்

அண்ணனின் கொள்கை காத்தாய்
அவர்புகழ் உலகு சேர்த்தாய்
தென்னவர் பண்பாட் டுக்குக்
திருக்குறள் கோட்டம் கண்டாய்
கண்ணகி சிலம்பைக் காட்டும்
கடற்கரை சிலையை வைத்தாய்
தண்டமிழ் தலைவா நீயும்
தரைகடல் காலம் வாழ்க!






Friday, June 1, 2012

மின்னல் வெட்டி இதயம் கிழிகிறதே!!!



மேகத்துக்குள்
ஒளிந்திருக்கும்
மின்னல் வெட்டி
வானம்
கிழிவதில்லை

உன்
இமைகளுக்குள்
ஒளிந்திருக்கும்
மின்னல் வெட்டி
இதயம்
கிழிகிறதே
எப்படி?

Thursday, May 31, 2012

அல்லியைப் பார்த்து நிலவு மலர்கிறது..


நிலவைப் பார்த்து
அல்லி மலரும்
என்பார்கள்

இங்கு
கால் முளைத்த
இந்த
அல்லியைப் பார்க்க
நிலவு மலர்ந்துள்ளது!!

Monday, May 28, 2012

ஏமாற்றிச் சென்றது ஏன் ஆண்மழையே


சொல்லாமல் கொள்ளாமல் வந்தாய்
கண்களில்
கன்னங்களில்
இதழ்களில்
பரவசமாய்
குளிர் முத்துக்களைப்
பதித்தாய்
இனிக்கும் ஈரச்சுவை
இன்னும் இன்னும் என்று
ஏங்கி நிற்கையிலே
ஏமாற்றிச் சென்றது ஏன்
ஆண்மழையே
நீயும் என் காதலனாய்




Thursday, May 24, 2012

ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன்!




தொப்புள் கொடியில் பூக்காத
பிள்ளை மலரே
நாளும் 
குருதியில் வளராத
இரத்த உறவே


முந்நூறு நாட்கள்
கருவறை தவம் 
செய்யவில்லை
மூன்றே நொடியில்
முழுவதுமாக
முத்துப் பிள்ளையை
ஈன்றெடுத்த 
நிகழ் யுகக் 
குந்தி நான்


அவளைப் போல
எவரும அறியாமல்
பெட்டியில் வைத்து
நதி நீரில் விட்டுவிட
நான் தயாரில்லை


நீ மட்டுமே அறிய
மனப்பெட்டியில்
உனை வைத்து
அடை காக்கிறேன்
என் நெஞ்சத்து
ஏக்கச் சூட்டில்



Sunday, April 15, 2012

ஒரு தாயின் ஜனனம்



http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcSa7pY9EtKfPrHLUPZbep0iaFJDxxpMUGWmkSbFASGIQGVv8WbP
உன் சுவாசத்தில்
பிரித்தெடுத்தெடுத்தேன்
தொலை தூரத்தில் இருந்தும்
உன் மனத்தின்
ஏக்கங்களை

உனக்கே புரியாமல்
உன்னுள்
ஓலமிட்டுக்கொண்டிருப்பது
தாய்மைக்கான ஏக்கமா
காதலுக்கான தவிப்பா
நட்புக்கான துடிப்பா
என்பதை
இனம் காண முடிந்தது
என்னால்

ரகசியமாக
உன்னை
குழந்தையாக்கி
என் மனத்துள்
பூட்டிக் கொண்டு
நாட்கள் பல ஆயிற்று

உன் மனமே புரியாத உனக்கு
என் மனம் எப்படி புரிந்தது?
நான் ரகசியமாக இருக்கவே
விரும்புகிறேன் என்கிறாயே.

என்னை 
தாயாகத் தத்தெடுத்த 
என் பிள்ளை நிலாவே
சுமக்காத என் கருவறையும்
சுருதியாகி இசைக்கும்
சுகமான தாய்ராகம்
உன் பயணத்தில
என் 
வாழ்வின் எல்லை வரை!

Saturday, November 19, 2011

உருப்பட எத்தனிக்கையில்...

http://cdn1.wn.com/pd/99/13/59aaa0ebc89248e982e9515fa5d9_grande.jpg

பாசப் பள்ளத்தில் சறுக்கி

ஆசை மேட்டில் இடறி

கோப மலை முகட்டில் முட்டி மோதி,

சிற்றின்பச் சாக்கடையில் மூழ்கி

அனுபவச் சக்கரத்தில்

  குயவனின் கைப்பட்ட

களிமண்ணாய்

வளைந்து நெளிந்து

முழுவதுமாக

உருப்பட எத்தனிக்கையில்

முடிந்தே விடுகிறது 

வாழ்க்கை

Tuesday, October 25, 2011

இனிய ஒளித் திருநாள் வாழ்த்துகள்

வாழ்க்கை வழியில்
தீப ஒளியுடன் 
அறிவொளியும்
ஆன்ம ஒளியும்
அணிவகுத்திட
துன்பம் துவள
இன்பம் தவழ 
இனிமை மட்டும் கண்டிடுவீர்
என்று
என் வலைப்பூ
பூத்துக்குலுங்க
வாழ்த்து நீர் பாய்ச்சும்  
வசந்தகால
மேகங்களை
இனிய ஒளித் திருநாளில்
வாழ்த்தும் 
அன்பு உறவு
உங்கள்
ஆதிரா

Saturday, August 20, 2011

புறக்கணிப்பு!!!



நண்பனே!
என் இல்லக்
கடவுள் மீது
ஆணையிட்டாய்
புகையைப் புறக்கணிக்க!

தேன்சிந்தும்
என் கன்னத்துச்
செவ்வண்ணத்தின் மீது
ஆணையிட்டாய்
மதுக்கின்னத்தைப்
புறக்கணிக்க!

அட்டையை உரிப்பதாய்
உன்னோடு ஒட்டிய
ஒவ்வொரு
பழக்கத்தையும்
 பிரித்தெடுத்தேன்
லாவகமாக

இன்று
சட்டையைக் கழற்றுவதாய்
என்னை நீ......

யார்மீது ஆனையிட்டாய்
என்னை புறக்கணித்து
நீ வாழ!