Saturday, March 27, 2010

செந்தணலில் குளிக்கின்றாள்.....





https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivHS849_vxp4dFBiioJiuuKDrNdld6Jvh6rKxPXU1wZrADieLOsfHyTp_KysVaA7nN34ndZOIZ9J7iNMl7EO-fdx7FeSXNlbZUqJRUPOx3SlxTQJOwoeD4qJD2y24F2pRCsX1pJec1Nvke/s400/annai2.jpg



சங்கமொழி என்றுரைப்பார்: தரணியெங்கும் தமிழ்பரப்ப

சுங்கவரி பெற்றிடுவார் அவர்பிழைக்க எம்மினத்தார்!

இங்கிவரைச் சுமந்தவள்தான் தமிழ்மகளோ? என்செய்வோம்

தங்கிவிட்ட நெஞ்சமதின் தன்னலத்து வேரறுக்க?



ஆதிமொழி எம்மொழிதான் என்றுரைப்பார்! ஆலயத்தில்

வேதமொழி சொல்கின்ற வழக்கந்தான் மாறவில்லை!

பாதியிலே வந்தவளைப் பந்தியிலே உன்னைவிட்டு

வீதியிலே தாயைவிட்டு வேடிக்கைப் பார்கின்றார்!



செந்தணலில் குளிக்கின்றாள் எந்தாய் சந்தனத்தைப்

பூசுவதார்? தமிழர்களின் மணவிழாவில் தமிழ்இல்லை!

மணிவிழாவில் தமிழ்இல்லை! எம்மண்ணில் தவழ்கின்ற

மழலைகளின் பேசுமொழி தமிழ்என்றோ மறைந்ததையோ!



ஆட்சிமொழி தமிழ்என்பார் அங்கோர் சாட்சிக்கும்

தமிழில்லை! தெருவெங்கும் ஊர்ப்பலகை பேர்ப்பலகை

தமிழெழுத்து கண்கதில்லை! துமியளவும் வேற்றுமொழி

கலவாத தமிழ்நாட்டைக் கான்பது எந்நாளோ?



ஆன்மீகப் பாதையெல்லாம் அடைத்ததந்த வடக்குமொழி!

வளர்கல்விச் சாலையெல்லாம் மேற்குமொழி அரசாட்சி!

தெள்ளுதமிழ்க் கல்ல்வியதைத் திண்ணையிலே கற்றதெல்லாம்

பல்லுடைந்த பாட்டிசொன்ன பழங்கதையாய் போனதையோ!



உருப்படத்தான் தமிழில்லை! திரைப்படமும் தமிழ்மொழியில்

கொடுப்பதற்கு மனமின்றி யூத்தென்றும் நியூவென்றும்

காதலாகும் கனிரசத்தை டூயட்டென்றும் பெயரிடுவார்!

உள்நாட்டில் உணவருந்த மேல்நாட்டுத் திருவோடு!



அயல்ஆசை சுயநலத்தில் பயணம் செய்தால்

ஊர்கூடி செக்கிழுத்த கதையாகும் தமிழ்ப்பயணம்!

சுகம்பெறவே துறைதோறும் தமிழ்நீரைப் பாய்ச்சி

விட்டால் பயனடைவாள் அவளன்று தமிழரன்றோ!!!

















9 comments:

  1. //துமியளவும் வேற்றுமொழி
    கலவாத தமிழ்நாட்டைக் கான்பது எந்நாளோ?//

    சாத்தியமில்லீங்கோ....

    ReplyDelete
  2. என்னங்க வசந்த் இப்படிச் சொல்லி விட்டீர்கள்? முயன்றால் முடியாதது உண்டா? (சும்மா சொன்னேன்!!!) நன்றி வசந்த் கண்டுகிட்டதுக்கு...

    ReplyDelete
  3. சங்கத்தமிழ் மகளுக் கங்கமெலாம் குளிர்ந்துவிடும்

    திங்கள் முகத்தாளே உன்பண்கள் குவிந்துவிட்டால்

    எங்கும் தமிழ்மணக்க எழுந்து வந்த தாரகையே

    எங்கள் மனம் குளிரக் கவிஎழுதிச் சிறப்பித்தாய்...


    வார்த்தை வித்தகியே வாயடைத்துப் பார்த்து நின்றேன்

    சீர்மிகு இவ்வரி போல் சிறப்பாக எழுதாமோ

    பார்புகழத் தமிழுக்கு மகுட்மாய் வந்தவளே

    தேர்சிறந்த திருவாரூ ராதிரையே நீ வாழி...


    முத்துத் தெளித்தால்போல் சிதறிவிட்டவார்த்தைகளால்

    சித்துக் கலையாக சிறப்பிக்கும் வார்த்தைவளம்

    எத்துனை முயன்றாலும் என்னாலும் ஏலாது

    பத்துவிரல் அத்தனையும் என்னாளும் போதாது...


    தமிழமுது படைத்திடவே அட்சயக் குடமேந்தி

    துமியளவும் பிழையில்லா கவியமுதம் படைத்தவளே

    இமையதனையசைக்காமல் இன்றெல்லாம் படித்திடவே

    உமைமகனின் தமிழ்வரமும் பெற்றவளேஆதிரையே..


    இனியும் இவ்வாறே இனியமுக் கனிச்சுவையை

    கனியும் மொழியதுவாம் கன்னித் தமிழினிலே

    நனியும் பிறழ்வின்றி நற்கோவைச் சரமாக

    தனியொரு சிறப்புட்னே தருவாயா என் தோழி...!

    என் இனிய வாழ்த்துகளும் பாராட்டுகளும் தோழி...!

    என்றும் அன்புடன் கலை

    ReplyDelete
  4. அன்புள்ள ஆதிரா,

    //உருப்படத்தான் தமிழில்லை! திரைப்படமும் தமிழ்மொழியில்
    கொடுப்பதற்கு மனமின்றி யூத்தென்றும் நியூவென்றும்
    காதலாகும் கனிரசத்தை டூயட்டென்றும் பெயரிடுவார்!
    உள்நாட்டில் உணவருந்த மேல்நாட்டுத் திருவோடு!//

    என்ன செய்வது இன்றைய கால சூழ்நிலை... தமிழில் பெயர் வைத்தால் பாதி கூட்டம் திரையரங்கே செல்வதில்லை. தூய தமிழில் வைத்தால் திரையரங்கு பக்கமே யாருமே வருவதில்லை.

    ReplyDelete
  5. அந்த வேதனையின் வெளிப்பாடுதான் வாசன். நன்றி கருத்துக்கு.

    ReplyDelete
  6. கலை இத்தனை அழகான வாழ்த்து. இதற்கு எனக்குத் தகுதி இல்லை என்பதை நான் நன்கு அறிவேன். இதில் தங்கள் அன்புள்ளத்தையே காண்கிறேன். அதனால் இக்கவிதையை என் கண்களில் ஒற்றி இதயத்தில் வைத்து பூட்டிக்கொள்கிறேன்.
    அன்புடன்
    ஆதிரா.

    ReplyDelete
  7. என்னே தமிழ் பற்று!!! மெய் சிலிர்க்க வைக்கிறது ..... உங்கள் நட்பு எனக்கு கிடைத்த பெருமை தோழி!!! தங்கள் தமிழ் பணி தொடரட்டும்....

    உங்களைப்புகழ்ந்து அய்யா ராமசாமி அவர்கள் எழுதிய கவிதை அழகு! அழகு!!!

    உங்கள் புகழ் மெம்மேலும் பெருகட்டும்!!! வாழ்த்துக்கள் ஆதிரா!!!

    ReplyDelete
  8. அன்பு கவிதன்,
    தமிழ் குருதியுடன் இணைந்ததல்லவா? அன்போடு உடனுக்குடன் ஓடோடி வந்து பாராட்டும் உங்கள் நட்பு எனக்கு தேனினும் இனியது கவிதன். தொலைதூரம் நம் நட்புக்கும் அன்புக்கும் சாட்சியாக இருக்கட்டும்.. நன்றியுடனும் அன்புடனும்...

    ReplyDelete
  9. மன்னிக்கவு கவிதன்.. தாமதமான நன்றி நவிலலுக்கு..பல நாட்களாக என் வலைப்பக்கமே வர இயலவில்லை..அதுதான் காரணம்..

    ReplyDelete