Sunday, November 17, 2019

கவிஞர் பிருந்தா சாரதியின் இருளும் ஒளியும் நூல் திறனாய்வு


Image may contain: 1 person

Image may contain: 2 people, people smiling, people sitting, people standing and outdoor

Image may contain: 8 people, including Brindha Sarathy, people smiling, people standing

Image may contain: 3 people, people standing and beard
"பத்துப் பிரிவுகளாகப் பகுத்து
'#இருளும்_ஒளியும்' கவிதைகளை ஆராயலாம்"
- பேராசிரியர் முனைவர் #ஆதிராமுல்லை
*
படைப்புப் பதிப்பக வெளியீடான 'இருளும் ஒளியும்' நூலுக்கு ஒரு திறனாய்வுரையை அக்டோபர் 23 அன்று சென்னையில்
' கவிதை உறவு " அமைப்பின்
மாதாந்திரக் கூட்டத்தில் கலைமாமணி கவிஞர் ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் முனைவர் ஆதிரா முல்லை வழங்கினார்.
அவரது உரையில் இருந்து :
"திரைப்பட வசனகர்த்தாவும் இயக்குநருமான கவிஞர் பிருந்தா சாரதி அவர்களின் இருளும் ஒளியும் நூல் ஒரு வரி இரு வரிகளில் எழுதப்பட்ட சின்னஞ் சிறு கவிதைகள்தான் . ஆனால் ஒவ்வொரு வரியுமே பரவசங்களால் நிரம்பி வாசகர்களை ஆனந்தக் கூத்தாட வைக்கின்றது.
மொத்தம் 210 குறுங்கவிதைகள் இந்நூலில் உள்ளன. இருளையும் ஒளியையும் பல விதமான பரிமாணங்களில் படம் பிடிக்கும் இக்கவிதைகளை ஒரு பேராசிரியரின் கோணத்திலிருந்து பார்க்கும்போது அவற்றைப் பத்து வகையாகப் பிரிக்கத் தோன்றுகிறது எனக்கு.
அழகியல் கவிதைகள், ஆன்மிகக் கவிதைகள், அறிவியல் கவிதைகள், உலகியல் தத்துவக் கவிதைகள்,
சித்தர் தத்துவக் கவிதைகள், தன்னம்பிக்கை கவிதைகள், காதல் கவிதைகள், சிரிக்க வைக்கும் கிளுகிளுப்புக் கவிதைகள்,
சிந்தனையைத் தூண்டும் வினா வடிவக் கவிதைகள் என்று பத்து வகைகளாகப் பகுக்கிறேன்.
ஒரு கவிதையில் ‘கூர்ந்து கவனி / தீபம் பேசுகிறது” என்பதும்
மற்றொரு கவிதையில் “உற்று நோக்காதே / விளக்குக்குக் கண் கூசுகிறது” என்பதும்
இருளையும் ஒளியையும் “ஒளிந்து விளையாடும் தீராக்காதலர்கள்” என்று ஒரு கவிதையிலும்
“ஒன்றை ஒன்று விழுங்கத் துடிக்கும் பாம்புகள்” என்று மற்றொரு கவிதையிலும் கூறுவது முரணியல் அழகு.
வள்ளுவரைப் போல பிருந்தா சாரதிக்கு இந்த முரண்பாடுகள்
முரண்படாமல் முந்தி வந்து சிந்து பாடுகின்றன.
"ஊனுடம்பு அகல் / எண்ணெய் குருதி / நாடி நரம்பாகும் திரி/ மூன்றையும் வசப்படுத்தி / ஆடிக்களித்து நின்று ஒளிரும் / அறிவே சுடர்” என்னும் கவிதை திருமூலரின்,
“உள்ளம் பெரும் கோவில் ஊனுடம்பு ஆலயம்”
என்னும் திருமந்திரத்தின் புது மந்திரம்.
‘ஏற்றி வைத்த சுடரை ஏக்கத்தோடு பாக்கிறது எரிந்த தீக்குச்சி”
என்னும் கவிதை இளையவர்களால் கைவிடப் பட்ட முதியவர்களின் ஏக்கத்தைக் கூறும் படிமம்.
"இறந்தவரின் கடைசிப் பார்வை இருளா? ஒளியா?"
என்னும் பிருந்தா சாரதியின் கேள்விக்கு பாப்லோ நெருடாவின், ‘மரணத்தின் முகம் பச்சை / மரணத்தின் பார்வையும் பச்சை” என்னும் இந்த கவிதை விடையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
“தொட்டிலில் ஆடும் குழந்தை போல் விளையாட்டு காட்டுகிறது / அகல் விளக்கில் ஆடும் சுடர்” என்று அழகியல் கவிதைகளாலும்
“காட்டுத் தீயை வீட்டு விளக்காய்க் கட்டுப் படுத்திக் கொடுத்தவர் எவரோ அவரே விஞ்ஞானி” என்று அறிவியல் கவிதைகளாலும்
"வெளியே எத்தனை விளக்குகள் எரிந்தாலும் / உன்னை பிரகாசமாக்குவது / உனக்குள் எரியும் சுடர்தான்”,
“விளக்கில் படி விளக்கையும் படி / விளக்காக வேண்டும் நீ”
என்று உள்ளத்தில் உத்வேக விளக்கை ஏற்றி வைக்கும் நம்பிக்கைக் கவிதைகளாலும்
“ஏற்றி வை / நான் எரிந்துகொண்டே / இருக்கிறேன்”
“தீபங்களை எழுத்துக் கூட்டிப் படித்தேன் அது உன் பெயர்”
போன்ற காதல் கவிதைகளாலும்
“விளக்கை ஏற்றித் திருமணம் செய்யலாம்/ விளக்கை அணைத்தல்லவா தாம்பத்யத்தைத் தொடங்க வேண்டும்”
போன்ற கிளுகிளுப்பூட்டும் கவிதைகளாலும் நிறைந்த இந்நூல் அனைத்து தரப்பினரையும் அனைத்து வயதினரையும் வசப்படுத்தும்; பரவசப்படுத்தும்.
“பிறப்பா இறப்பா தீக்குச்சியின் உரசல்?”,
“வெளிச்சம் – இருட்டு / வரவு எது? செலவு எது?”,
“இரவே நீ தேவதையா? பிசாசா?”
முதலிய கவிதைகளால் மணிக்கணக்காகச் சிந்திக்க வைக்கும் இந்தச் சாக்கரடீசுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?
ஒவ்வொருவரும் இந்த நூலை வாங்கி படிக்கலாம். மற்றவர்க்கும் பரிசாக வழங்கலாம்.
பிருந்தா சாரதியின் மற்ற கவிதை நூல்களில் இருந்து
' இருளும் ஒளியும் ' பல படிகள் உயர்ந்து பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளன.
“அலாவுதீன் விளக்கில் பூதம் என் விளக்கில் கவிதை”
என்று கூறும் நண்பர் பிருந்தா சாரதி விளக்கைத் தேய்த்துக் கொண்டே இருக்க வேண்டும். கவிதைகள் வந்து கொண்டே இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்."

No comments:

Post a Comment