Sunday, June 27, 2010

ஊமை உறவு...





காலை நேரத்தில்
மந்திரி எனக்கு
கருப்புப் பூனையாய்
பின்னால வருகின்றாய்!
மாலை வந்தால்
வாலைக் குலைக்கும்
நாயாய் மாறி
முன்னால் சென்று
வழி காட்டுகின்றாய்!
இடைப்பட்ட நேரத்தில்
தஞ்சை கோயில்
கோபுரம் போல
எனக்குள் மறைகின்றாய்!
அற்ற குளத்து
கொட்டியும் ஆம்பலும்
உனக்குப் பின்தானே!
உண்மை உறவுக்குப்
பொருள்கூறி நிற்கும்
ஊமை உறவே
உன் மறுபெயர்தான்
நிழலோ!!




Thursday, June 24, 2010

இவள் தன்மானத் தமிழச்சி....



மலர் முகமே உனதென்றான் - அவளோ
மலரென்றால் மாலைக்குள் உலர்ந்துவிடும்! இதுவோ
எதிரிகளைப் புறமோட்ட நின்றதிரும்
உலராதப் போர்ப்பறையின் முகப்பென்றாள்!

பல்வரிசை முல்லை யென்றான் - அவளோ
முல்லையென்றால் மென்மை யுண்டு! இதுவோ
தமிழ்ப்பகையை வென்றிடவே இதழ்க்குகையில்
பதுங்கிவிட்ட சிறுத்தைகளின் கூட்டமென்றாள்!

அமுதூறும் செவ்வித ழென்றான் - அவளோ
அதிசுவையாம் அமுதென்றால் தமிழாகும் இதுவோ
சமுதாயப் பாற்கடலைச் சாக்கடையாய் மாற்றுகின்ற
சதிகாரர் உயிர்குடிக்க ஊறும்கொடு நஞ்சென்றாள்!

பனிதவழ் குளிர்விழி யென்றான் - அவளோ
பனியென்றால் கதிரொளிக்குக் கரைந்துவிடும்! இதுவோ
கனிமொழியாம் தமிழிருக்க, அயல்மொழியைப் பேசுகின்ற
நுனிநாக்கைச் சுட்டெரிக்கும் இருசுடரென்றாள்!

தளிர்க்க் கரமேவா என்றான் - அவளோ
கரம் எழுந்து நடப்பதெங்கே? இதுவோ
கன்னித்தமிழ் நலமழிக்கும் அந்நியராம்
கயவர்களின் சிரம்பிளக்கும் உளியென்றாள்!

விரல்சூடும் நகமகுடம் அழகென்றான் - அவளோ
வளர்நகமோ அளவிறந்தால் நறுக்கப்படும்! இதுவோ
நிதம்நிதமெம் தமிழினத்தின் உயிர்குடிக்கும் சிங்களரைக்
கூறாக்கும் நேர்வேல்ஓர் பத்தென்றாள்!

கொடியிடைதான் துவழு தென்றான் - அவளோ!
கொடியென்றால் படர்க்கொம்புக்(கு) கலைபாயும் - இதுவோ
தமிழன்னை அரியணையில் அமர்ந்துவிட்ட மாற்றாளின்
குடலறுக்கும் கூர்வேல்தான் தவழுதென்றாள்!

மடல்வாழைத் தொடை என்றான் - அவளோ
வாழையென்றால் காற்றடித்தால் சாய்ந்துவிடும்! இதுவோ
அடர்க்காடாய் மலிந்துவிட்ட தன்னலத்து வேரறுக்கும்
கோடரியின் கணமானப் பிடிகளென்றாள்!

ஏதெதுநான் சொன்னாலும் எதிர்மறையாய் சொல்கின்றாய்!
பெண்ணேநீ யாரென்றான்? அவளோ எண்ணுவதும் எழுதுவதும்
உண்ணுவதும் உனக்கென்றே தமிழுக்காய் வாழ்கின்ற
தன்மானத் தமிழச்சி தான்பெற்ற மகளென்றாள்!


Sunday, June 20, 2010

முகவரி தந்த தந்தைக்குச் சில வரிகள்....



ஞானத்தால் நலிந்த தேகம்
நயவுரை பெய்யும் மேகம்
வானத்தின் கதிரின் வீச்சு
வளைந்திடா அருவிப் பேச்சு
ஊனத்தைக் காணா சொற்கள்
உண்மையின் வைரக் க்ற்கள்
தேனொத்த நட்பு! அய்யோ
தேர்அச்சு முறிந்த தய்யோ!

துணைவிக்குப் பத்ம நாபன்
குழந்தைக்கு ஆத்ம நாதன்
வாதித்து வெற்றி கொள்ளும்
வசந்தத்தின் ஆணி வேர்கள்
சோதிக்கும் சோதி ஆகி
சுடர்மிகும் பகுத்த அறிவு
ஊதியப் புகையாய் போச்சே
உடம்பது நீராய் ஆச்சே!

சிந்தனை நீயே அப்பா!
செயலிலும் நீயே அப்பா!
எந்தனை இறுதி வரையில்
காத்திடும் இறைவன் ஆனாய்
சொந்தமும் பலவாய்த் தந்தாய்
சுடர்விடும் பாசம் தந்தாய்
எந்தையே எங்கு நோக்கின்
இருப்பவன் நீயே அப்பா!




இது என் தந்தையின் மறைவின்போது எழுதிய இரங்கற்பா. (17.01.2010) காற்றில், ஒலியில், ஒளியில், அனலில், புணலில் கரைந்து எம்மைக் காக்கும் என் அன்புத்தந்தையை இந்நாளில் வணங்குகிறேன்.