Thursday, March 6, 2014

ஒருதலையாகவே



நேசித்தல் பல போதும்
ஒருதலையாகவே இருந்து முடிகின்றது

திருப்பப் பட்ட ஒலிகளாய்….
அனுசரனையற்ற சொற்களாய்….
உதாசினப் பார்வையின் வீச்சாய்….
ஏற்காத அலைபேசியின் அழைப்பாய்….
வாசிக்கப் படாத வரிகளாய்...

நேசித்தல் பல போதும்
ஒருதலையாகவே இருந்து முடிகின்றது


Wednesday, March 5, 2014

கடமை


இந்த நொடியின்
என் மனநிலை
எங்கோ ஒரு தோழனுக்கோ தோழிக்கோ
இருக்கக் கூடும்

அழும் குழந்தையின் வாயில்
நெகிழியைச் சொறுகிவிட்டு
கடமையை ஆற்றும் தாயாக
அவர்களும்
ஏதோ ஒரு செயலை ஆற்றக் கூடும்

சிந்தையும் கரங்களும் இணையாமல்
ஆற்றும் பணியில்
அவர்களும் என்னைப் போலவே
தோல்வியும் அடையக் கூடும்

அவர்களுக்காகவும் திறந்து வைக்கிறேன்
என் ஜன்னல்களை…
தென்றல் என்றாவது நுழையட்டும் என்று…



Sunday, March 2, 2014

பொங்கி வழியும்

அவ்வப்போது
பொங்கி வழியும் பாலில்
தன் வெக்கையைத்
தணித்துக் கொள்கிறது 
சின்னஞ்சிறு முனகல்களுடன்
அணைக்க மறந்த
 அடுப்பு