Sunday, March 12, 2017

பாடலாசிரியராகிறார் - கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா




கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா அவர்களின் அழைப்பின் பேரில் இணையதளம் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவுக்குச் சென்று வந்தேன். திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இசைப்பேழையை வெளியிட்டார்.

இணையதளத்தின் இனிமை மற்றும் கொடுமை இரண்டையும் மையமாக வைத்து சங்கர் & சுரேஷ் இரட்டையர் (Not Twins; They are Friends) இயக்கத்தில் இயக்கப் பட்ட ஒரு திகில் திரைப்படம். இப்படத்தின் வசனத்தையும் பாடல்களையும் மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் எழுதியுள்ளார்கள்.

‘வாடா வாடா நம்ம ஊரு டீமு டீமு’ ஷேர் பண்ணி தருவது மாமூ மாமூ” என்ற பாடல் கோவை திரைப்பட டீமுக்குப் பெயர் பெற்றுத் தரும் குதுகலக் குத்துப் பாடல். இளைஞர் அரோல் கொரோலி இசையில் அமைந்துள்ள இப்பாடல் மரபின் மைந்தன் முத்தையா அவர்களின் இளமைக்கும் சான்று.

“விட்டு விட்டு ஒலிக்குதடா வீணை நாதம்; தொட்டுத் தொட்டுப் பழகட்டும் தோடி இராகம்” இப்பாடல் வார்த்தைகள் தெளிவாக இசைக்குள்ளிருந்து பழமையையும் மரபையும் போர்த்திக்கொண்டு பழகுதமிழ் இனிமையோடு இதமாக வெளிவருகிறது.

“நீலம் தூங்கும் வானில் நிலவின் அசைவுகள்; நீலம் பூத்த கண்ணில் கனவின் கசிவுகள்” என்னும் சோக ராகம் சோகத்தோடு இலக்கிய ரசனையான வார்த்தைகளையும் சுகமான இசையையும் சுமந்து நாற்பதுகளை அவர்களின் நினைவுகளை பதமாக அசை போட வைக்கிறது.

“திரிசங்கு சொர்க்கம் இதுவா? விடை சொல் விஸ்வாமித்ரா” என்று உச்சஸ்தாயியில் வினா எழுப்பி, சுருங்கிப் போனது பூகோளம்; சுறுசுறுப்பானது பூலோகம்; விரல்களின் நுனியில் வையகம் முழுவதும் அடங்கி விடும் இணையதளம்” என்னும் பாடல் கதைக்கருவைச் சுமந்து அசாதரனமான இசையோடும் அழுத்தமான கேள்விகளோடும் சிந்திக்க வைக்கிறது. பால்வெளி மீதினில் படுக்கையைப் போட்டது இணையதளம் போன்ற வரிகளாலும் இப்பாடல் பால்வெளி வரை கொட்டி முழக்கும் வெற்றிப் பாடல் என்பதைச் சொல்கிறது.

நான்கு பாடல்களும் இசை, எழுத்து, காட்சி என எத்தரப்பிலும் ஏற்றம் பெற்றுள்ளன.

பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கவும் திரு மரபின் மைந்தன் அவர்கள் திரைத்துறையிலும் முத்தாக ஒளி வீசவும் எம் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
இணையதளம் இதயங்களை இணைக்கும் இனிய தளமாக வெற்றி பெறட்டும். வாழ்த்துகள்.

எஸ்.பி.முத்துராமன் அவர்கள் வரும்போது வழியில் நின்றிருந்த நான் அவருக்கு வணக்கம் சொன்னேன். வழக்கம் போல ஆதிரா வாங்க என்றழைத்துப் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இலக்கியக் கூட்டத்தில் எப்போதும் பார்க்கும்போதெல்லாம் புகைப்படம் எடுப்பது எங்கள் வழக்கம். இந்தத் திரைப்படக் கலைஞர்களால் சூழப்பட்ட எனக்கு அந்நியமான கூட்டத்தில் நாகரிகம் கருதி நான் உள்ளே நகர்ந்தேன். ஆனாலும் அவரது பெருந்தன்மை இது. எப்போதும் சிலிர்க்க வைக்கும் அன்பு ஐயா எஸ்.பி.முத்துராமன் அவர்களது. பழகும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள்.

Thursday, March 9, 2017

‘ஆதி’ விருது உங்கள் ’ஆதி’(ரா)க்கு.......








^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இன்று (08/03/17) உலக மகளிர் தினத்தில் வின் தொலைக்காட்சியின் ‘ஆதி’ (யாதுமாகி நின்றாய்) சாதனையாளர் விருது உங்கள் ஆதிராவுக்கு........
லக்‌ஷ்மன் ஸ்ருதி இன்னிசை மழையில்... சுதந்திரப் போராட்ட வீராங்கனை சரசுவதி ராஜாமணி, இலக்கியவாதியும் காவல்துறை அதிகாரியுமான திருமதி திலகவதி, குமுதம் ஸ்நேகிதி இதழின் ஆசிரியர் திருமதி லோகநாயகி திரு ரூஸ்வெல்ட் ஆகியோர் முன்னிலையில்.....
விருதாளர்களைப் பற்றி ஒளி-ஒலிப்பதிவு செய்து திறையில் பார்வையாளர்களுக்குப் போட்டுக் காண்பித்தது பெருமை. விருதாளர்களுக்கு, இருக்கையில் தொடுத்த மல்லிகைச் சரம் கொடுத்து உபசரித்தது புதுமை. மிக ருசியான உணவுடன் மிக உயர்ந்த உபசரிப்பு அருமை.......
வின் தொலைக்காட்சி நிறுவனர் திரு. தேவநாதன் யாதவ் மற்றும் செயலாளர் திரு. குணசீலன் இருவருக்கும் நன்றி