Saturday, March 27, 2010

செந்தணலில் குளிக்கின்றாள்.....





https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivHS849_vxp4dFBiioJiuuKDrNdld6Jvh6rKxPXU1wZrADieLOsfHyTp_KysVaA7nN34ndZOIZ9J7iNMl7EO-fdx7FeSXNlbZUqJRUPOx3SlxTQJOwoeD4qJD2y24F2pRCsX1pJec1Nvke/s400/annai2.jpg



சங்கமொழி என்றுரைப்பார்: தரணியெங்கும் தமிழ்பரப்ப

சுங்கவரி பெற்றிடுவார் அவர்பிழைக்க எம்மினத்தார்!

இங்கிவரைச் சுமந்தவள்தான் தமிழ்மகளோ? என்செய்வோம்

தங்கிவிட்ட நெஞ்சமதின் தன்னலத்து வேரறுக்க?



ஆதிமொழி எம்மொழிதான் என்றுரைப்பார்! ஆலயத்தில்

வேதமொழி சொல்கின்ற வழக்கந்தான் மாறவில்லை!

பாதியிலே வந்தவளைப் பந்தியிலே உன்னைவிட்டு

வீதியிலே தாயைவிட்டு வேடிக்கைப் பார்கின்றார்!



செந்தணலில் குளிக்கின்றாள் எந்தாய் சந்தனத்தைப்

பூசுவதார்? தமிழர்களின் மணவிழாவில் தமிழ்இல்லை!

மணிவிழாவில் தமிழ்இல்லை! எம்மண்ணில் தவழ்கின்ற

மழலைகளின் பேசுமொழி தமிழ்என்றோ மறைந்ததையோ!



ஆட்சிமொழி தமிழ்என்பார் அங்கோர் சாட்சிக்கும்

தமிழில்லை! தெருவெங்கும் ஊர்ப்பலகை பேர்ப்பலகை

தமிழெழுத்து கண்கதில்லை! துமியளவும் வேற்றுமொழி

கலவாத தமிழ்நாட்டைக் கான்பது எந்நாளோ?



ஆன்மீகப் பாதையெல்லாம் அடைத்ததந்த வடக்குமொழி!

வளர்கல்விச் சாலையெல்லாம் மேற்குமொழி அரசாட்சி!

தெள்ளுதமிழ்க் கல்ல்வியதைத் திண்ணையிலே கற்றதெல்லாம்

பல்லுடைந்த பாட்டிசொன்ன பழங்கதையாய் போனதையோ!



உருப்படத்தான் தமிழில்லை! திரைப்படமும் தமிழ்மொழியில்

கொடுப்பதற்கு மனமின்றி யூத்தென்றும் நியூவென்றும்

காதலாகும் கனிரசத்தை டூயட்டென்றும் பெயரிடுவார்!

உள்நாட்டில் உணவருந்த மேல்நாட்டுத் திருவோடு!



அயல்ஆசை சுயநலத்தில் பயணம் செய்தால்

ஊர்கூடி செக்கிழுத்த கதையாகும் தமிழ்ப்பயணம்!

சுகம்பெறவே துறைதோறும் தமிழ்நீரைப் பாய்ச்சி

விட்டால் பயனடைவாள் அவளன்று தமிழரன்றோ!!!

















Sunday, March 21, 2010

பாவியரோ தேவியர்???

















பாவைதனைத் தன்னுடலில் பாதி யாக்கி

சிறைவைத்த பரமன்தனை பாரியென்றால்

இருபாதி இணைந்துவிட்ட ஒருவர் கோலம்

மறுபாதி தியாகத்தின் சின்னமன்றோ?

ஆண்பாதி பெண்மீதி அம்மை யப்பர்

ஆண்பாலா? பெண்பாலா? இரண்டும்தானே!

அர்த்தநாரி ஈசுவரனாம் உமயொரு பாகனென்று

ஆண்பெயரில் அழைத்திடுதல் நீதியாமோ!




ஆயகலை அனைத்துக்கும் தலைவி தன்னை

தூயகலை வெண்கமல வீணையளை

மாயைகளை ஓட்டிவிடும் சோதி யாளை 

நேயமின்றி நாவதனில் சிறைவைத்து

சொல்லுச்குச் சுழல்கின்ற பம்ப ரமாய் 

பல்லுக்குள் ஆடவைத்து பெண்ணை 

எள்மூக்கும் மதியாத நான்முகனை 

தெய்வமெனல் மன்பதைக்கு நேராமோ!




காலமெல்லாம் கடல்மீதில் கழிப்ப தற்கும்

கைநோகக் கால்பிடித்து விடுவதற்கும்

பூதலத்தாள் செல்வம்செய் செய்யவள்தான் சேவகளா?

சிந்தித்துப் பார்ப்பீரே பூதலத்தீர்!

நெஞ்சமதில் சிறைவைத்தான் என்பது அல்லால்

கொஞ்சிநிதம் கால்பிடித்து கரம்பிடித்து

வஞ்சிதனை மெய்சிலிர்க்க விட்டகதை ஒன்றுண்டா

வஞ்சமகன் அவதாரச் சுவடிதனில்?




{இது மூற்றிலும் வேடிக்கையாக சிந்தித்த, ஒரு சிறு பெண்ணியச் சிந்தனை தந்த விளைவே. கடவுளைக் குறைகூறும் (இறை மறுப்பு) சற்றும் இல்லை என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.}







ஆதிரா..

Friday, March 19, 2010

என்ன ஆகியிருப்பேன்???....


http://images.cdn3.inmagine.com/168nwm/iconotec/icn064/icn064042.jpg

பார்க்காமல் இருந்திருந்தால்
உன் விழி செய்த
புரட்சிகளை!!!

கேட்காமல் இருந்திருந்தால்
உன் வாய் உதிர்த்த
புதுமொழியை!!!

படிக்காமல் இருந்திருந்தால்
உன் விரல் பதித்த
சுடு எழுத்தை!!!

ரசிக்காமல் இருந்திருந்தால்
உன் ஒருதோள் சாய்ந்த
சிறு நடையை!!!

ருசிக்காமல் இருந்திருந்தால்
உன் செவ்விதழின்
சுவைத்தேனை!!!

கொடுக்காமல் இருந்திருந்தால்
என் இரும்பொத்த
இதயமதை!!!

நான் வீணாக இருந்திருப்பேன்
காதல் இல்லா
நரகமதில்!!!


ஆதிரா

Wednesday, March 17, 2010

கருச்சிதைவு..


கருப்பு நிலாவில்

உடல் வழிந்து ஓடுகின்ற
உதிரத்தின் அலங்கோலம்
தெருவெங்கும்
வெள்ளைப்பூசனியின்
கருச்சிதைவு!
சிதைக்காமல் தனை ஈன்ற
பெற்றோர்க்கு
மகன் ஆற்றும் நன்றி!
எள்ளுடன் உருட்டிய
வெள்ளைச் சோற்றுடன்
நீர்க்கடன்!
பெண்ணென்று தெரிந்ததனால்
கருச்சிதைவும்

ஸ்கேன் அன்று
சொல்லாமல் விட்டதனால்
முழுச்சிதைவும்
ஆன மகள்
என்செய்வாள்?
பரிகாரம் யார் செய்வார்??
ஆதிரா..

விவேகம்....

http://www.animated-gifs.eu/phone-240x320-clocks/0030.gif



நொடிகளின் மீதேறி

வேகமாய் வலம் வரும்

பெரிய முள்ளே!

ஒருசிறு

அசைவில்


மணியை நகர்த்தும்

என் விவேகம்

உன்னிடம் உள்ளதா???

உருவு கண்டு

எள்ளாமை

வேண்டும்!!!!!!!!!



ஆதிரா..








Tuesday, March 16, 2010

வஞ்சி(ச) மகள்...


வருந்தி அழைத்தாலும்
வழக்கிட்டுக் கேட்டாலும்
கன்னடத்து நஞ்சையதில்
தங்கிவிட்ட
வஞ்சி(ச)மகள் காவிரிதான்
என்நெஞ்சத்துக்
கவிமகளோ!
சிந்தித்துப் பார்த்தேன்
நிந்தித்தும் பார்த்துவிட்டேன்!
சந்தத்தில் வந்தவளோ
சரளமாக வருவதில்லை!!

திட்டிஅழைத்தாலும் நடுவர்மன்ற
தீர்ப்பென்ன சொன்னாலும்
தீரேன்உன் வேட்கையென
கொட்டி முழக்கமிடும்
கர்(நாடக)ப் பத்தினிபோல்
பழந்தமிழே நீயிருந்தால்
பட்டுடுத்திப் பார்த்தவள்நான்
கட்டழகிதான் உனக்கு
சல்வாரும் கம்மீசும்
கால்சட்டயாம் ஜீன்சோடு
குதிகாலில் ஹைஹீல்சும்
சேர்த்தழகு செய்வதெவன்????

கட்டுக்குள் அவளஅடங்கி
கதிகலங்க வேண்டாமே
க(ன்)னித்தமிழ் நிலங்கடந்து
காலாற நடைபயின்று
கடல் அடைய நாம் நினைத்தால்
அணைக்கட்டில் அடங்குவதே
ஆத்மசுகம் என்றுரைக்கும்
காவிரிபோல்
பைந்தமிழே!!
சங்கத்தில் நீ இருந்தால்
சாதனைகள் செய்வதெவன்??
சிறகுனக்கு செய்தளிப்பேன்
சிட்டாகநீ பறக்க
எதுகை மோனை முரணென்ற
தளை(டை)யில்லாத் தேரேற்றி
தொடுவானம் செலுத்திடுவேன்!

அளவின்றி அதிகமாக
அவள்மடிதான் சுரந்துவிட்டால்
அன்பின்றி அவிழ்த்துவிடும்
அரக்கர்களை அரவணைத்து
அமுதள்ளித் தருவதுவே
குடகுமலைக் கொடி(ய)அவளின்
குலப்பெருமை என்பதுபோல்
கன்னல்மொழி கவிப்பெண்ணே!
எழுதிக்குவிக்கின்ற கவிஞர்களே
உறவென்று இசைக்கின்றாய்
எழுகின்ற புதுக்கவிஎன்
இழுப்புக்கு எதிர்நின்றாய்!!

கொங்கைவடி சுவையமுதை
அங்குமிங்கும் காட்டிவிட்டு
பருகுமுன்னே பறந்துவிடும்
காவிரிதத பாவை(வி)யைப்போல்
புதுமைஎன்ற கவிமகளே நீ
உத்திகளால் எனைக்கவர்ந்தாய்
எண்ணுகின்ற போதெல்லாம்
புத்தியிலே வட்டமிட்டாய்
ஏடெடுத்து எழுதிவிட
நான் துணிந்தேன்
இரக்கமின்றி
வரமறுத்தாய்!!!!


ஆதிரா..

Monday, March 15, 2010

கணிகை.....

அட்டிலில் அடுப்பெரிக்க
கட்டிலில் விளக்கணைக்கும்
நித்திய கன்னி!

அழும் குழந்தை
அடிவயிற்றின்
பசி அக்கினியை
காம வலையாக்கி
கண்வழி
வீசுபவள்!!!!


ஆதிரா..

மனிதம் வாழலாம்!!!



http://www.franksinger.com/cd001/images/owtUnity250.jpg

இந்துவாய் இருப்பதில்
இன்னல்கள் இல்லையோ!
எண்ணற்ற இறைவர்!
யாரை நினைப்பது?
கதைகளைக் கேட்டே
காலம் கழிந்தது!
இன்னும் தெய்வங்கள்
நெடுங் கணக்கானது!!


பரிசுத்தம் ஆகுமா

கிருத்துவன் என்பதால்!

ஆடுகள் தவறி

பாதைகள் மாறலாம்!

தலைகளை அறுத்திடும்

சாதிக் கொடுங்கோல்

மேய்ப்பன் கைகளின்

ஆயுதம் ஆவதோ!!



மனிதர் யாவரும்

ஒன்றென்று ஓதினால்

மக்கதுப் பயணம்

புனிதம் பெற்றிடும்!

ஈச்ச மரங்களும்

போதி மரங்களும்

இணைந்து மாறிடும்

இன்பச் சோலையாய்!!


அன்னை என்பதும்
ஆத்தா என்பதும்
தாய்மை நிரம்பிய
பன்மொழி அல்லவா!
கருணை மேரியும்
முத்து மாறியும்
மதங்கள் மாற்றிய
மென்மொழி அல்லவா!!



சாமம் இசைக்கலாம்
ஏசுவின் காணத்தை!
அதர்வனப் புதிரை
புத்தர் விளக்கலாம்!

ஹிஜிரத்துள் யஜுரின்

விழுதுகள் ஊன்றலாம்!
மதமிழந்த வேதம் யாவிலும்
மனிதம் வாழலாம்!!!!



ஆதிரா..

துடிப்பு....


சாதிக்கத் துடிக்கும்
இளைஞனே
உன் கனவுகளைக்
கண்களில் கண்டு விடாதே!!
இமைக்கின்ற நேரத்தில்
உன்னை
ஏமாற்றிக் களவுக்குச்
சென்றுவிடும்
சில நேரம் கமுக்கமாய்
உறங்கி விடும்.

ஓயாது
உறங்காது
உனக்காகவே துடிக்கும்
இதயத்தில் கண்டுவிடு !!


ஆதிரா..

உள்ளொன்று...


ஏகதேசமாக்
நீ உதிர்த்த
எல்லா சொற்களையும்
சிந்தாமல் சிதறாமல்
ஒரு மூலைகூட மடங்காமல்
புத்தகமாக்கி
சேமித்து வைத்திருக்கிறேன்
என் மனப் பையில்....


அவசர அவசரமாக மேய்ந்துவிட்டு
ஆற அமர அசைபோடும்
எருமையாய்
ஒவ்வொன்றாக
சுவைத்தபோதுதான் தெரிந்தது!!
அரிதாரம் அணிந்திருந்த அவை
சொற்கள் அல்ல..
ஒவ்வொன்றும் தங்க முலம் பூசிய
சயனைடு குப்பிகள் என்று....

உன் வார்த்தைகளால்
வாழ்விழந்த
இறுதி மனம்
என்னுடையதாக இருக்கட்டும் !
இனியாவது இதழ்களை மட்டும்
பேச விடு
உன் உள்ளத்து நஞ்சு கலவாமல் !!!


சம்மதம்.....



அந்திவானம் நீலநிறம்

அதிகாலை சிவப்பு நிறம்

மத்தியிலே வெள்ளை நிறம்

மலைமுகிலோ கருப்பு நிறம்

ஆனாலும் வானம் ஒன்று!!



இந்தியனில் கருப்பனுண்டு

இளஞ்சிவப்பு வெள்ளையுண்டு

இனிமையுடன் பழகுவதில்

இருப்பதள்ளி கொடுப்பதிலும்

எவனுண்டு வையந்தன்னில்

இந்தியனுக் கீடுசொல்ல!!



பாடும்மொழி வேறுபடும்

பாட்டின் இசை ஒன்றேதான்

மொழி நிறத்தால் மாறிடினும்

மாறா ஒற்றுமை யுடையவனே

இமயம் குமரி இடைப்பட்ட

இடந்தனில் வாழ்ந்திடும் இந்தியனே!!



தனித்தனி ஓடும் நூலிழைகள்

தன்மானம் காக்கும் ஆடையாம்போல்

பனித்துளியாய் பலசாதி மக்கள்

உயர்த்துவர் தேசத்தை கூட்டுறவால்.


புத்தன் ஏசு நபியன்னல்

ஆழ்வார் சைவ நாயன்மாரென

நித்தம் இறைவனை கரம்கூப்பி

தொழுதிடும் மதங்கள் பலவுண்டு

நல்மார்க்கம் கூறும் எம்மதமும்

சம்மதம் என்பவன் இந்தியனே!!




சிறகு....



http://www.animated-gifs.eu/avatars-100x100-cats/0003.gif




http://www.animated-gifs.eu/phone-240x320-angels/0237.gif


உணர்வுகளை


கனவுகளை

லட்சியத்தை


ஒவ்வொரு


இறகாக


உதிரச் செய்த


உறவுகளை


உதிர்த்துவிட்டு


பறக்கத் தொடங்கினேன்!!


சிறகே இல்லாமலும்


பறக்க


கற்றுக் கொடுத்தது


நட்பு !!!!!!!!!









(இக்கவிதை என்னுள் அடங்கி என்னை விழுங்கி எல்லாமுமாகி நிற்கின்ற என் தோழி ராஜிக்கு சமர்ப்பணம்)







சொல்லிவிட...

நான்
குங்குமத்தில்
வகிடெடுத்தேன்...
குருதியிலே
நீ கலந்த
சொந்தமதை
சொல்லிவிட!!!!

ஆதிரா..

Sunday, March 14, 2010

கல்விச் செல்வம்.....

http://www.fotosearch.com/bthumb/OJO/OJO135/pe0033974.jpg


















வாழ்கின்ற
நாட்கள் வரையில்

வழித்துணை என்று எண்ணி
குவித்திடும் செல்வம் ஓர்நாள்
கள்வனால் கவரப் படலாம்

மங்கைதான் மகிழ்ந்து அணியும்
தங்கமும் வைரமும் ஓர்நாள்
நங்கையின் உடலை விட்டே
நீங்கியும் போகக் கூடும்!

சீற்றமே காற்று கொண்டால்
கட்டிய ஆடை கூட
ஒட்டிய உறவை விட்டே
ஓடிடும் அவலம் உண்டு!

நாளுடன் கோளும் பார்த்து
ஆழமாய் அடிக்கல் நாட்டி
கட்டிய மனையும் கூட்
கட்டழல் உண்ணப் போமாம்!

பெருமழை பெய்யும் நாளில்
பெருகிடும் வெள்ளம் தானே
பெற்றுள்ள பொருளை எல்லாம்
பேயென இழுத்து போமாம்!

அமிழ்தினும் இனிமை பயக்கும்
அவயத்து முந்து மகனும்
அரிவையின் காதல் கூடி
பிரிவையும் கொள்ளக் கூடும்!

மாறிடும் கருத்து உணர்வால்
மங்களம் என்னும் மனையும்
வின்மீனும் பகலும் போல
விலகிடும் நிலையும் உண்டு!

நவில்தரும் நூல்நயம் போல்
பிரியலர் கொண்ட நட்பும்
இருவினை சேரும் காலை
செருமுனை ஆகு மன்றோ!

மானுடப் பையுள் அடையும்
உயிர்வளி என்னும் காற்றும்
காலனின் பாசக் கயிற்றால்
கட்டுடல் விட்டுப் போகும்!

கள்வனால் கவர முடியா
ஒருமையில் கற்ற கல்வி
எழுமையும் பெருமை தருமே
முழுமையும் பெறுவீர் அதனை!

வெள்ளந்தான் அடித்துச் செல்லா
விழுமிய செல்வம் கல்வி
வேண்டிய பொருளை ஈந்தும்
ஈண்டுவீர் அதனை இன்றே!

மலையென பெற்ற செல்வம்
அலையென கரைந்த போதும்
நல்வழி காட்டும் கல்வி
செல்வழி பீடு சேர்க்கும்!

கொடையெனும் உயர்ந்த பண்பால்
கொடுத்திடும் கல்வி மட்டும்
பெறுபவர் அன்றி கொடுப்பார்
இருவர்க்கும் இன்பம் பயக்கும்!

எண்ணுடன் எழுத்தும் வாழ்வின்
கண்களாய் வண்ணம் கூட்டும்..
இன்னலைத் தீர்க்கும் செல்வம்
கன்னலாம் கல்வி சேர்ப்பீர்!!!!


ஆதிரா..

தலையின் பயணம்...


எதையோ தேட
கண்ணில் பட்டது
அழுக்குப் பதிந்த
அச்சுப் பதியாத
ஐந்து ரூபாய்
அஞ்சல் தலை 

அலுவலக உறையில்!

பக்குவமான
அறுவை சிகிச்சை!
தண்ணீர் தொட்டு
தலையையும் உரையையும்
வெட்டி எடுக்க,
அழகாய் நடந்தது
தலையின் பிரசவம்!


அவசரமாக
எழுதி முடிந்தது
அலுவலகப் பணிக்கு
அப்ளிகேஷன்!


வெள்ளைத் தாளை
இரண்டாய் மடித்து
ஓரம் வெட்டி
பருக்கை சோற்றைப்
பதமாய் அப்பி
தயார் ஆனது
அஞ்சல் உறையும் !


வேலை கிடைத்த
நிம்மதி மூச்சுடன்
அடுத்த உறையில்
பயணம் தொடர்ந்த
அஞ்சல் தலைக்கு
முத்தம் பதிதது! 


அஞ்சல் செய்தால்
வேலை முடிந்தது
என்று எண்ணி
இறங்கி நடக்க
கண்ணில் பட்டன
எடுக்கும் நேரம்
எழுதப் படாத
அஞ்சல் பெட்டிகள்
வீட்டுக்கு வீடு! 


தேடி அலைந்து
நால்வரைக் கேட்டால்
அஞ்சல் பெட்டியா
அது அந்தக்காலம் 


கொரியர் என்றால்
தெருவுக்கு நான்கு
அடையாளங்கள்
சொல்ல முடியும்
என்று அலட்சியப்
புன்னகை வீசிசெல்ல 


அஞ்சல் சேவை
மறைந்தே விட்டதா
என்றே எண்ணி
நடந்தேன் நடந்தேன்!


இரண்டு கடையின்
இடையில் கண்டேன்
இடையும் மெலிந்து
தோலும் உரிந்த
சிவப்புச் சிலிண்டரை!


கண்டு பிடித்த
ஆனந்தத்தில்
கவருடன்
கையையும் நுழைத்து
அஞ்சல் செய்தேன்!

பொத்தென்ற
சத்தம் கேட்டு
நிம்மதியாக
நடக்க முனைந்தேன்!


தஞ்சம் அடைந்தது
கால்களில்
மீண்டும்

என் அஞ்சல்உறை!!!!!!!!



ஆதிரா..

கோடு....


மெல்ல முகம் பார்க்கும்
சின்னக் குழந்தைகளின்
பிஞ்சு விரல்களிடும்
கோலமெனும்

தண்ணீர்க் கோடு!!
கரையில்லாத அன்பைக்
காணாது கண்டுவிட்டால்
விழியோரம் போட்டுவிடும்
நெஞ்சத்தின்

கண்ணீர்க் கோடு!!

பொங்கிவரும் காதலதை
பொய்முகம் காட்டிவிட்டு
மறைத்துவிடும் கன்னிக்கு
நாணமெனும்
பெருமைக் கோடு!!
ஓயாது உழைத்தபின்னும்
ஒட்டிய வயிறுகொண்ட
பாட்டாளி பரம்பரைக்கு
பற்றாத குறைவென்னும்

வறுமைக் கோடு!!

சோர்வில்லா வீரனுக்கு
சொந்தமண்ணாம் நாடுகாக்கும்
சொப்பனமே
வீரமென்னும்

எல்லைக் கோடு!!

பொங்குதமிழ் கவிதைககு
தொடைஎன்ற தளைஎன்ற
எதுகைமோணை இலக்கணமே
முரண்என்னும்

தொல்லைக் கோடு!!
கட்டழகுப் பெட்டகத்தை
கட்டிலிலே முத்தமிட
விளைவதுதான்
மழலைஎன்னும்

மஞ்சக் கோடு !!
கட்டிலறை முத்துகளுள்
ஒருமுத்து வரமென்றும்
மருமுத்து புறமென்றும்
எறிவதுதான்
பேதமென்னும்

வஞ்சக் கோடு!!
ஆதிரா..

தாய்.....



பூமித்தாய்
வானத் தந்தை கொடுத்த
மழைச் சம்பளத்தில்
மக்களை
பேணி வளர்த்த கதை
அன்று!

தந்தையின் வருவாய்
குறைந்ததால்
குமுறி வெடிக்கும்
எரிமலையான
பொறுமைத்தாய்
இன்று!


பிணம்....




பிணம்..


மதப்பெயரால்
இனப்பெயரால்
மொழிப்பெயரால்
உதிரும் உயிர்கள்
ஓரினமாய்க் குவிவது
இப்பெயரால்!!!

 
ஆதிரா ..

வெடிக்கும் முன்னே....

ஒட்டாமல்
ஊர் ஓரம் நிற்கின்ற
ஒற்றைப் பனைமரம் நான்!உரசினாலும் பற்றாத
வெற்றுத் தீக்குசிக்காய்
வாழ்நாள் தவம்புரியும்
கட்டுப்(தீ) பெட்டிதான்!
என்றாலும்
துளைஈ இல்லா மூங்கில்களே
இசை பாடும் இளங்காற்றில்
புல்லாங்குழல் இசை பாடாதா?
அதில் மோகனம்
தான் கூடாதா?
அன்றாடம்
பேருந்துப் பாடையிலும்
அலுவலக மயானத்திலும்
ஆண் வாடை மூச்சடைக்க
சிக்கி முக்கி உரசல்களில்
பற்றி எரியாதிருக்க
தண்டு வாளையா நான்?
பருவம் கடந்தும்
காத்துக் கிடக்கும்
ஜெலட்டின் குண்டு.....
எச்சரிக்கிறேன்!!!!!!
மாற்றான்(ண்) விரல்பட்டு
வெடிக்கும் முன்னே
அணைத்து விடு!!!!!!!


ஆதிரா..

மோகச் சிறுகதையின் முடிவுரை...



















முத்த மழையின்

எச்சமாய் அரும்பிய

தேகச் சிப்பியின்


நித்திலம்


கட்டில் போரின்

வெற்றிச் சின்னமாய்

இருவர் பாடிய

தொட்டில் வாகை


நிலவொளி சூட்டில்

கருவறை வயலில்

காதலன் விதைத்த

உயிர்ப் பயிர்


மெய்யும் மெய்யும்


தொட்டு இசைத்ததில்

உயிர் கொண்டெழுந்த

பிள்ளைத் தமிழ்


விந்தச் சாரல்

சந்தனத் தீவில்

ஓடிக் கலந்த

வசந்த ருது


மோகச் சிறுகதையின்

முடிவில் முகிழ்த்த

கால்கை கொண்ட

சிற்றிதழ்



பாயல் தேசம்

பகிர்வுடன் நடத்திய

அங்கக் குலுக்களின்

பம்பர் பரிசு






ஆதிரா










ஆதிரா..