Tuesday, January 26, 2016

மர்மமென்ன?




வார்த்தை வலை வீசி
வன்முறைகள் பல கூட்டும் 
கலிங்கத்துப் பரணியின்
கடை திறப்புக் காதை
அல்ல
அவன்
மோன மொழி பேசி
ஊனை உருகவைக்கும்
ஓசை இல்லா
திருவாசகம்
காலை ஒருகூடல்
மாலை மறுகூடலென
காமக் கவி பாடும்
முக்கூடல் பள்ளு
அல்ல
அவன்
இன்ப வேள்வியிலும்
துன்பம் சூழ்கையிலும்
அத்வைதம் ஆகிவிடும்
திருக்கோவையார்
சிற்றின்பக்
கதை எல்லாம்
சிலாகித்துச் சொல்லும்
குறுந்தொகை அல்ல
அவன்
பேரின்ப உலகுக்கு
சேரும்
கதை சொல்லும்
பெரிய புராணம்
காதல் தேவாரம்
அவன்
காதில் படிக்கையிலே
சாதல் போலின்பம்
கொண்டதெந்தன்
ஆவியெலாம்
இன்ப இலக்கியமே
இமைவிளிம்பில்
அவன் படித்தான்
பரணிப் பறையாக
மாறியதன்
மர்மமென்ன?

Friday, January 15, 2016

பேரின்பத்தின் எல்லையில்.......


சங்கத்தமிழ் பதித்த சிங்கத்தமிழன் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களைச் சந்தித்து என் கவிதை, கட்டுரைத் தொகுப்பு நூல்களைக் கொடுத்து வாழ்த்து பெற்ற இனிய தருணம்....

என்னை அறிமுகம் செய்து கொள்ளும்போது டாக்டர். பானுமதி என்று கூறினேன். அவருக்காக எழுதிய 12 அடிகளால் ஆன அறுசீர் விருத்தத்தைப் பொறுமையாக முழுவதும் படித்தது வியப்பு....

படித்து முடித்தவுடன் பெயர் என்ன சொன்னீர்கள் என்று கேட்டபோதுதான் நினைவு வந்தது கவிதையின் கீழ் ஆதிரா முல்லை என்று கையொப்ப மிட்டிருந்தது. அது என் புனை பெயர் என்று கூறிய போது பெயர் புதுமையாக அழகாக உள்ளது என்று பாராட்டியது வியப்பு.

நன்றாக உள்ளது தொடர்ந்து எழுதுங்கள் என்று தமிழ்த்தாயின் தலைமகன் வாயால் வாழ்த்து பெற்றது சங்கப் புலவனும் தொல்காப்பியனும் வள்ளுவனும் வாழ்த்தியது போல.....

பேரின்பத்தின் எல்லையில்.......