Sunday, December 30, 2012

முனைவர் பட்ட வாய்மொழித்தேர்வு

ஆய்வாளரையும் (என்னை) ஆய்வுத்தலைப்பையும் அறிமுகப்படுத்தி வரவேற்புரை வழங்குகிறார் நெறியாளர், என் மதிப்புக்குரிய பேரா.முனைவர். சா.வளவன், (ப.நி.) , தமிழ்த்துறை, பச்சையப்பன் கல்லூரி. சென்னை.

 தலைமை உரை ஆற்றுகிறார் பேரா. முனைவர். அனுராதா, 
துறைத்தலைவர், தமிழ்த்துறை, பச்சையப்பன் கல்லூரி.

ஆய்வாளர் (நான்) ஆய்வுரை

ஆய்வுரை

வினாக்கள் தமிழ்த்துறைத் தலைவரிடமிருந்து

வினாக்கள் பார்வையாளர்களிடமிருந்து 

பார்வையாளர்களின் வினாக்களுக்கு விடை பகர்தல்

பார்வையாளர்களின் வினாக்களுக்கு விடை பகர்தல்

பார்வையாளர்களின் வினாக்களுக்கு விடை பகர்தல்

புறத்தேர்வாளர் வினாக்களைத் தொடுத்து, துளைத்தெடுத்தல்

புறத்தேர்வாளர்களின் அறிக்கையை வாய்மொழித்தேர்வாளர் முனைவர். அரங்க. இராமலிங்கம், துறைத்தலைவர் (பொ), மொழித்துறை, சென்னைப் பல்கலைக்கழகம் வாசித்தலும்

 புறத்தேர்வாளர்கள் மூவரின் அறிக்கையின் அடிப்படையிலும், என் ஆய்வு அறிக்கையின் அடிப்படையிலும் பார்வையாளர்களின் வினாக்களுக்கு ஆய்வாளர் விடை பகர்ந்ததன் அடிப்படையிலும் முனைவர் பட்டம் வழங்க பல்கலைக் கழகத்திற்குப் பரிந்துறை செய்தல்


பார்வையாளராகக் கலந்து சிறப்பித்த பேராசிரியர்கள்

பார்வையாளராகக் கலந்து சிறப்பித்த பேராசிரியர்கள்
கவிஞர். நெல்லை இராமச்சந்திரன், பேரா.முனைவர். மைதிலி வளவன், முன்னைத் தமிழ்த்துறைப் பேரா. பச்சையப்பன் கல்லூரி, தமிழ்த்துறைத் தலைவருடன் நான்
 
பார்வையாளர்கள்
கலந்து சிறப்பித்த வள்ளியம்மாள் கல்லூரியின் பேராசிரியர்களுடன் நான்

கலந்து சிறப்பித்த வள்ளியம்மாள் கல்லூரியின் பேராசிரியர்களுடன் நான்

என் உடன்பிறப்பு (தங்கை)

முனைவர் பட்ட ஆய்வாளர் சுந்தர், மற்றும் பேரா.முனைவர்.சேதுராமலிங்கம்

கடந்த 28.12.12 வெள்ளியன்று என் முனைவர் பட்ட ஆய்விற்கான வாய்மொழித்தேர்வு நடைபெற்றது.

நெறியாளராக ஆய்வை அழகுற நெறிப்படுத்திய, பெருமதிப்பிற்குரிய பச்சையப்பன் கல்லூரியின் முன்னைப் பேராசிரியர், முனைவர். சா. வளவன்  அவர்களுக்கும்,
புறநிலைத் தேர்வாளர், சென்னைப் பல்கலைக் கழக மொழித்துறைத் தலைவர் டாக்டர் அரங்க. இராமலிங்கம் அவர்களுக்கும்,
தலைமையேற்று நடத்திய பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர். அனுராதா அவர்களுக்கும் மற்றும்
முனைவர், திருமதி. மைதிலி வளவன்
முனைவர். சேதுராமலிங்கம்
முனைவர். அர்த்தநாரிசுவரன்
முனைவர். திருநாவுக்கரசு
முனைவர். திருமதி.  உமா பார்வதி
கவிஞர் நெல்லை இராமச்சந்திரன்
மற்றும் இந்நிகழ்வில் பங்கேற்ற பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி

Monday, November 26, 2012

கற்களையே எறிந்து கொண்டு



ஒவ்வொரு பெண்ணின் மீதும்
கற்களையே
எறிந்து கொண்டிருக்கின்றன
அன்றைய
“வதனமே சந்தர பிம்பமோ”
தொடங்கி
இன்றைய
“வேணாம் மச்சான் வேணாம்
இந்தப் பொண்ணுங்க காதலு”
வரையில்

Sunday, November 25, 2012

வாரிசு



வாரிசு

பொன்னை உருக்கித்
தாலி தந்த
கணவனுக்குத்
தன்னை உருக்கி
தாரம் தருவது

Wednesday, November 21, 2012

பிரிகள்




வரவுக்கும் 
செலவுக்கும்
இடையேயான
இழுவைப் பந்தயத்தில்
இழுகயிறாய் 
மாட்டி நைந்து போகிறது
பாசம் பந்தம்
என்னும்
உறவுப் 
பிரிகளெல்லாம் 

Tuesday, November 13, 2012

நினைவுகளைச் சாப்பிட்டுக் கொண்டு!


சாப்பிட்டாயா 
என்று கேட்க ஆள் இல்லாத போது 
நன்றாகச் சாப்பிட்டேன்
மூன்று வேளையும்!

சாப்பிட்டாயா 
என்று நீ கேட்கும்போதெல்லாம்
சாப்பிட்டேன்
என்று 
பொய் சொல்கிறேன்!

உலர்ந்த வயிற்றோடு
மூன்று வேளையும்
உன் நினைவுகளைச்
சாப்பிட்டுக் கொண்டு!

Friday, November 9, 2012

கோடு....





மெல்ல முகம் பார்க்கும் 
சின்னக் குழந்தைகளின் 
பிஞ்சு விரல்களிடும் 
கோலம் எனும்
தண்ணீர்க் கோடு!!

கரையில்லாத அன்பைக்
காணாது கண்டுவிட்டால் 
விழியோரம் போட்டுவிடும் 
நெஞ்சத்தின் 
கண்ணீர்க் கோடு!!

பொங்கிவரும் காதலை 
பொய்முகம் காட்டி
மறைத்துவிடும் கன்னிக்கு 
நாணமெனும் 
பெருமைக் கோடு!! 

ஓயாது உழைத்தபின்னும் 
ஒட்டிய வயிறுகொண்ட
பாட்டாளி பரம்பரைக்கு 
பற்றாக் குறையென்னும்
வறுமைக் கோடு!!

சோர்வில்லா வீரனுக்கு 
சொந்தமண்ணாம் 
நாடுகாக்கும் சொப்பனமே 
வீரமென்னும் 
எல்லைக் கோடு!!

பொங்குதமிழ் கவிதைககு 
தொடைஎன்ற தளைஎன்ற
எதுகைமோணை இலக்கணமே 
முரண்என்னும் 
தொல்லைக் கோடு!! 

கட்டழகுப் பெட்டகத்தை
கட்டிலிலே முத்தமிட
மொட்டுவிடும்
முகையதுதான்
மழலைஎன்னும் 
மஞ்சக் கோடு !!

கட்டிலறை முத்துகளுள் 
ஒருமுத்து வரமென்றும் 
மறுமுத்து புறமென்றும் 
எறிவதுதான் 
பேதமென்னும்
வஞ்சக் கோடு!!

Wednesday, November 7, 2012

ஏற்றங்களை மாற்றம் செய்!



உழைப்புச் சாவியால் பூட்டிக் கிடக்கும்
புலன்களை விடுதலை செய்

தேம்பும் குழந்தை மனத்தை
தேக்கு மரத்தால் இழைத்து விடு

உதட்டு முற்றத்தில் மகரந்தப்
பூக்களின் புன்னகை தேக்கு

பருந்தின் கூரிய பார்வையை
கீழ்மையகற்றி மேல்நோக்கி வீசு

விரல் நுனிகளால்
உலக விசையை முடுக்கு

சீமைக் குதிரையின் சீரும் குழம்படியை
குதிகாலில் பூட்டிக்கொள்

இதய இருட்டை
தண்ணொளியால் நிரப்பு

கிழிபடாத ஓசோனாய்
அறிவு வெளிச்சத்தைப் பாய்ச்சு

வெற்றி திராவகத்தைத்
தேகமெங்கும் தெளித்துக் கொள்

எட்டியும் அருகியும் இருக்கும்
ஏற்றங்களை உனதாக மாற்றம் செய்!

Tuesday, November 6, 2012

சிவகாசியின் குட்டி தேவதைகள்







சுவர்க்கத்திற்குச் செல்லும்
வழியறியாது
பையூரில் பயணித்த
குட்டித் தேவதைகள்
வந்திறங்கின
அந்த சிவகாசியில்

சூரியக் குழம்புடன்
வெண்மேகத்துக்குள் ஒளிந்திருந்த
இடிகளை பொடித்து
இட்டும் தொட்டும்
கனவில் பூத்த
வண்ணம் சேர்த்தும்

நமக்கான
விருந்தினைத் தயாரிக்கின்றன
தேவதைகளின்
சின்னஞ்சிறு விரல்கள்
வெடிகளாக

நிலவை
எட்டி உடைத்து
தெறித்து விடுகிறது
அந்தத் திருநாள் கொண்டாட்டம்

வெடித்துச் சிதறிய 
வெண்ணிலவின் சில்லுகள்தோறும்
விபத்தில் சிதறிய
அந்தப் மோனாலிசாக்களின்
ஏக்க முகங்கள்!!



Monday, November 5, 2012

கணமும் யுகமும்




வருகிறேன் என்றாய்
அச்சொல் உதிர்த்த 
உன் உதடுகள் மூடும்முன்
வாழ்ந்துவிட்டேன்
ஓரு 
யுகம்

செல்கிறேன் என்றாய்
அச்சொல் உயிர்க்க
உதடுகள் விரியும் முன்
செத்துவிட்டேன்
அக்
கணம்

பாவ ஆத்மாவாய்...



கவனிப்பதும்
கவனிக்காததும்
கவனித்தும்
கவனிக்காதது போல்
கடப்பதும்
உனக்கான 
வாடிக்கையாகிப் போனது

நீ

கவனிக்கும்போது
பரிசுத்த ஆத்மாவாய்
உணர்வதும்
கவனிக்காத போது
பாவ ஆத்மாவாய்
கரைந்து
காணாமல் போவதும்
எனக்கான
வாடிக்கையாகிப் போனது!

Saturday, November 3, 2012

நாட்காட்டி.




காலம் கரைவதை
ஞாலத்துக்குக்
காட்டியபடி
நாளும் மெலிகிறது

நாட்காட்டி.

பிரதீபா காவேரி



கர்நாடகத்தில் இருந்து
வராத தலைவியை
கடல் நாடகத்திலிருந்து
கடத்தி வந்தது
நீலம்

கப்பலாக


பிரபஞ்ச கருநாக்கில்
குத்திய வேலாக
குத்தி நிற்கிறது

அந்தக் காவிரியும்
எண்ணெய் வழிய!



Thursday, November 1, 2012

நாம் தீபாவளி கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்




ஆய்ந்தாய்ந்து
அறிவுப்போதை தலைக்கேறி
அக்கினி முட்டைகளை
வார்த்தைகளாய் 
பொறிக்கின்றன
அறிஞ அசுரங்கள்

இருட்டில் சமைத்த
சட்டங்களால்
வயிற்றுப் 
பள்ளத்தாக்குகளில்
நெருப்புகளை
இட்டு நிரப்புகின்றன
அதிகார அசுரங்கள்

மேகத்தால் மூடி மறைத்தாலும்
நீண்டு கொண்டே போகும்
வானமாய்
கைநீட்டும்
கையூட்டு அசுரங்கள்

தன் குட்டிகளை விழுங்கி
தன்னுயிர் வளர்க்கும்
பாம்புக் குவியல்களாய்
பிணம் அவித்து
தனம் குவிக்கும்
இனவெறி அசுரங்கள்

என்று எங்கும்
நர அசுரங்கள்
வளர்ந்து கொண்டிருக்கின்றன
வாமனங்களாக
தீர்க்க ஆயுளுடன்

நாம் தீபாவளி
கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்
நரகாசூரனை அழித்ததாக
நினைத்து



(இந்தக் கவிதை நவம்பர் 2012 தமிழ் நானூறு இதழில் வெளியானது. நன்றி தமிழ் நானூறு)

Tuesday, October 30, 2012

விற்பனைப் பெண்ணின் மழைப்பயணம்




அலைகளில் கால் நனைக்கும்
குழந்தையின் மகிழ்ச்சியாய்
மழையில் 
சாலையின் அலையில் 
கால்நனைத்துச் 
செல்லும் பேருந்தில் 
தொடர்கிறது 
அவள் பயணம்

பயணத்தை வேகமாக
முன்னோக்கி நகர்த்துகின்றன
சாலையின் இருபுறமும்
சுவரொட்டியில்
நிஜமழையில்
குளித்துக் கொண்டிருக்கும் 
நடிகையும்

இரவில் அவளை 
ஒளியூட்டிக் காட்ட வேண்டி
பகலில் விழி மூடி ஓய்வெடுக்கும்
நியான் விளக்குத் தூண்களும்

செவிச் சுவர்களை
உரசியும் உரசாமலும்
பயணித்து வெளியேறுகின்றன
நடத்துநரின்
சீழ்க்கை ஒலியும்
பக்கவாத்தியம்
ஓய்ந்தவுடன் ஒலிக்கும்
வாய்ப்பாட்டாய்
‘டிக்கட் வாங்கும்மா’ என்ற
குளிரில் நடுங்கிய
குரல் ஒலியும்

எதிலும் பயணிக்காமல்
நின்றே இருக்கிறது
அவள் மனம்
நிறுத்தத்தில் இறங்கியதும்
அடர் மழையிலும்
வீடு வீடாகத்
தொடர வேண்டிய
விற்பனை பணியை
எண்ணி


Sunday, October 28, 2012

விற்பனை முகவர்


எத்தனை முறை
கெஞ்சிக் கேட்டும்
உள்ளே விடாத
அடுக்கு மாடிக் குடியிருப்பின்
காவலாளியைப் பார்த்து
முறைக்கிறார்
விற்பனை முகவர்!

அவரது 
உடையைப் பார்த்துப்
புன்னகைக்கிறான்
அருகில் நிற்கும்
பிச்சைக்காரன்

Saturday, October 27, 2012

மரங்களும் மங்கைகளே





வேதனைகளை
வேர்களாக்கி
மண்ணுக்குள்
மறைத்து விட்டு
மகரந்த மலர்களால்
மணம் விட்டுப்
புன்னகைக்கும்
மரங்களும்
மங்கைகள்தான்

சோதனைகளை
இரத்த நாளங்களாக்கி
இதயப் பைக்குள்
மடக்கி வைத்து
மனம் மரத்து
இதழ் மட்டும்
புன்னகைக்கும்
மங்கைகளும்
மரங்கள்தான்

Thursday, October 25, 2012

அடைமழை





அன்று 
செயற்கை மழையில் 
குளித்துக் கொண்டிருந்த நடிகை 
இன்று 
இயற்கை மழையில் 
குளித்துக் கொண்டிருக்கிறாள் 

சுவரொட்டியில்






Wednesday, October 24, 2012

உலர்ந்து போகிறேன் நான்


என் சாரளத்தில் பூக்கும்
மழையின்
ஒவ்வொரு துளியும்

உன் உதடுகள் தெளித்த 
ஈர மொழிகளை
உச்சரிக்கின்றது

உலர்ந்து போகிறேன் நான்












Tuesday, October 23, 2012

அரிதாரம்



முகத்துக்குப் பூசுவதுபோல்
ஒவ்வொரு நாளும்
உறங்கி விழிக்கையில்
அகத்துக்கும்
அரிதாரம் பூசுகிறோம்

என்றாவது
ஒப்பனை கலைந்துவிடுமோ
என்னும் அச்சத்தில்
அவ்வப்போது
வெளுத்து விடுகிறது 
முகம்

Monday, October 8, 2012

என்னோற்றாள் தமிழ்த்தாய்!!

அருட்தந்தை சேவியர் தனிநாயக அடிகள் 



உலகத்துத் தமிழர்க்கு ஆய்வரங்க அமுதை
      உணர்வோடு உண்பித்த தாயே நீதான்
பழகித்தான் பார்த்தவரும் மறக்கின் றாரே
      பண்பாட்டுத் தமிழென்று பகர்வ தற்கு
கலகத்து மாநிலத்து வணஅடிகள் நீயோ
      கனித்தமிழைப் பாய்ச்சுகின்றாய் கழனி தோறும்
கழகங்கள் கண்டவர்கள் ஆய்வரங்கின் இறுதி
      வரிசையிலே நிற்கின்றார் முதல்வன் நீயே!

பன்மொழிகள் கற்றவன்நீ பார தி(தீ)போல்
      படித்ததிலே தமிழ்ஒன்றே பண்பாடா டென்றாய்
ஒண்மொழியாம் திருக்குறளை மலாய்க்கு, சீன
      மண்மொழிக்கு மொழிபெயர்க்க மூலம் ஆனாய்
பன்னாடு படையெடுத்தாய் தமிழின் தூதாய்
      பழந்தமிழைப் பாரெல்லாம் பாய்ச்சி விட்டாய்
இந்நாடு மாநாடு காண்பதெல்லாம் சேவை
      இனியவண தனிநாயக உன்னால் தானே!

கற்பிளந்து மலைபிளந்து சிலைகள் செய்த
      கவின்கலைகள் இழப்பதா வாழ்வு என்றாய்    
சொற்பொழிந்து சுவைபொழிந்த கவிகள் எல்லாம்
      சிங்களத்தைப் படிப்பதால் மாளும் என்றாய்
தொழுகையிலே மொழியுரிமை வேண்டச் சொன்னாய்
      தொடர்ந்துபெற தமிழினத்தைச் தூண்டச் சொன்னாய்
உழுதபயன் களம்சேர்ந்த தின்று நாங்கள்
      உயிர்க்காற்றை உன்னாலே சுவாசிக் கின்றோம்.

தொண்ணூற்று ஒன்பதுபூ சொன்ன பாட்டின்
      தொல்குறிஞ்சி காண்கின்றாய் ஹவாய் மண்ணில்
பண்ஊற்றால் போற்றுகின்றாய் வான ஒலியில்
      பைந்தமிழின் தேர்ப்பாகன் பார தியை
கண்ணூற்றுப் பொழிகின்றாய் திருவாச கத்தில்
      கனித்தமிழால் கசிந்துருகும் சேக்கி ழாரால்
என்னோற்றாள் தமிழ்த்தாய்தான் யாழ்ப்பா னத்து
      எழிலார்ந்த நெடுந்தீவில் நீஉ திக்க!

     
     
       



(இக்கவிதை இம்மாதம் பிரான்சில் நடைபெற்ற,
 அருட்தந்தை தனிநாயக அடிகளாரின் 
நூற்றாண்டு விழா  மலரில் இடம்பெற்றது.)




     

Thursday, September 13, 2012

முடமாகிப் போன கனவுகள்!




புத்தகங்களைக் கட்டிக்கொண்டு
உறங்கிக் கொண்டிருந்தது
அந்த
வளர்ந்த குழந்தை!

அன்று  மட்டும்…..
புதுப் புத்தகம் வாங்க
வேகமாக ஓடாமல் இருந்திருந்தால்…..

அந்தக் காரின் முன் 
விழாமல் இருந்திருந்தால்….

முன்னங்கால் முழுதும்
முடமாகாமல் இருந்திருந்தால்…..

அப்பா பள்ளிக்கு முழுக்குப் போடச்
சொல்லாமல் இருந்திருந்தால்…..

உள்வீட்டில்
சக்கர நாற்காலியில்
சிறைப்படாமல் இருந்திருந்தால்….

இன்று
தானும் ஒரு
கணினி விஞ்ஞானி
என்னும்
முடமாகிப் போன கனவுகளுடன்!



Sunday, September 9, 2012

மெட்டியின் புலம்பல்


பாதம் 
அசையும் போதெல்லாம்
உன்னை உச்சரித்த
மெட்டி
என்னை நச்சரிக்கின்றது
“தேய்ந்து 
ஊமையாகும் முன்பு
மீண்டும் ஒரு முறை
உன் பற்களின்
ஸ்பரிசம் 
கிட்டாதா?”
என்று.

Saturday, September 1, 2012

அவள் நீயாகி விடுகிறாள்!




முதன் முதலில்
உன் கையில் இருந்து
வாங்கிய புத்தகம்

என் வீட்டு சோபாவில்....

புத்தகத்தின்
அட்டையில்
சிரித்துக்கொண்டிருக்கிறாள்
ஒரு நடிகை!

என்ன அதிசயம்

நான் பார்க்கும் போதெல்லாம்
சிரித்துக் கொண்டிருக்கும்
அவள்
நீயாகி விடுகிறாள்!
 


Thursday, August 30, 2012

பிரிவுரையும்... வாழ்த்தும்....



என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்....


நினைக்கின்ற பொழுதெல்லாம் கவிதையாகி
நீபாடு என ஊறும் தமிழ் ஊற்று
கணக்கின்ற இதயத்துடன் தேடுகின்றேன் - பிரிவுரை
கவிதைக்கோ ஓர் சொல்ல்லும் கிடைக்கவில்லை

உற்றதொரு ஆலமரக் கிளைகளிலே வாழ்கின்ற
உல்லாசப் பறவைகளே உம்பிரிவால்
இரவினிலே முழுநிலவை மூடிவைத்த மைஇருளில்
கண்ணிருந்தும் தள்ளாடிக் கரைந்திட்டேன் இந்நாளில்
என்றாலும்
வாழ்த்தொன்று கூறிடவும் விழைந்திட்டேன்

கல்வியெனும் அழியாத செல்வம் பெற்று
காதலினால் வைத்தைக் கட்டிப் போட்டு
இணையற்ற பொருள்செல்வம் பெரிதும் பெற்று
இன்பத்தை இடையறாது என்றும் பெற்று
இசைநாட்டி வாழ்ந்திடுவீர் என்றும் என்றும்

உழைப்பினிலே ஓயாத கதிரவன் போல்
ஊக்கத்தில் இமயத்தின் அடிமலை போல்
இமைக்காமல் முன்னேறிச் சென்று நாளை
ஈட்டிடுவீர் வெற்றிஎட்டு திக்கும் திக்கும்


கடமைதனை மறவாது செய்வார்க் கெல்லாம்
காலமகள் வெற்றி தந்து வாழ்த்தும் இசைப்பாள்
உடைமைதனை பிறர்க்கீந்து மகிழ்ச்சி கொண்டால்
உண்டாகும் பெரும்பேறு சிறுமை இல்லை

தடைகண்டு துவளாது முனைந்து செல்வீர்
வரலாறு உமபெயர்க் கும்இடம் கொடுக்கும்
போற்று கின்ற புத்துலக சிற்பியாகி
பொறித்திடுவீர் பொன்னெ ழுத்தால் உம்புகழை

இமைகாக்கும் கண்போல இல்ல றத்தை
இருவருமே போற்றி வாழ்ந்து இன்பம் காண்பீர்
பெற்றவரும் மற்றவரும் வியந்து போற்ற
நற்றமிழ் போல் பெருவாழ்வு வாழ்ந்திடுவீர்

என்றென்றும் என்று நற்றமிழில் நாவைசைத்தேன்
விரும்புகின்ற வாழ்த்தொன்று உளமாற இசைத்திட்டேன்
உளக்குளத்து உதித்தெழுந்து இமைச்சிப்பி பிரசவித்த
விழிமுத்து மாலையிட்டு விரும்பாமல் விடையளித்தேன்!!

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை