Friday, July 26, 2013

இரங்கல் கூட்டம்



பால் , எறும்பு
இரண்டுக்குமான பாதுகாப்பாய்
லஷ்மண்ரேகா, மஞ்சள்தூள்
எல்லாவற்றாலும்
எவ்வளவுதான்
பாதுகாப்பு வளையம்
போட்டு வைத்தாலும்

வியூகங்களையெல்லாம்
தகர்த்து எரிந்து விட்டு
வேலி தாண்டி
பால்(ழ்) கிணற்றில்
பாய்ந்து
தற்கொலை செய்து கொள்கின்ற
எறும்புகளுக்காக
தினமும் நடத்துகிறேன்
இரங்கல் கூட்டத்தை...

உழைப்பை,
விடா முயற்சியை,
சுறுசுறுப்பை
போதித்த
எறும்புகளிலும்
கோழைகள் உண்டென..!


Wednesday, July 24, 2013

அம்மா



கோலம் போட
புள்ளி 
வைத்த போதெல்லாம்
முந்தானையைப்
பிடித்துக் கொண்டு
நின்றிருந்த
என் உள்ளத்தில்
குறிக்கோள்களை
அள்ளி
வைத்தவள் 

அம்மா



Saturday, July 6, 2013

பச்சை விளக்கு


சாயம் போன
கறுப்பு வெள்ளைக் கனவுகளைக்
கண்டுகொண்டிருக்கின்றன
அவள் 
சிவப்பு விழிகள்

கடிகாரத்தின்
அப்போது முடுக்கிய
பெண்டுலமாய்
அங்குமிங்கும் அலைகிறது
ஒவ்வொரு
வாகனத்தின் மீதும்
பஞ்சு படர்ந்த
அவள் பார்வை

குழந்தையின்
அணைப்பில் இருக்கும்
மரப்பாச்சியைப் போல
அவள் கையில்
உயிர் நிரப்பிய
குழந்தை

இலையுதிர்க் காலத்து
சருகளைப் போல்
பட்டுப்போன
அம்மா, அய்யா, அக்காக்களை
உதிர்க்கிறது
அந்த மனித மரத்தின்
உலர்ந்த இதழ்கள்

அருவருப்புப் பார்வைகளைத்
தாண்டி
‘சில்லைறை இல்லம்மா
போ போ’என்னும்
விரட்டியடிப்புகளைக்
கடந்து

தட்டின் சில்லறை ஓசை
காதில் விழுவதற்குள்
விழுந்து விடுகிறது
பச்சை விளக்கு
சிக்னலில்