Saturday, June 29, 2013

பல்கலைக் கழக மானியக் குழுவின் துணைத்தலைர் டாக்டர். தேவராஜன் அவர்களுக்குப் பாராட்டு விழா

இன்று மனத்திற்கு நிறைவான நாள். சென்னைப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர். டாக்டர். தேவராஜன் அவர்கள் பல்கலைக் கழக மானியக்குழுவின் துணைத்தலைவராக பொறுப்பேற்றுள்ளார். தென்னகத்தில் இருந்து பல்கலைக் கழக மானியக் குழுவில் உயரிய பொறுப்பேற்றிருப்பது ஒரு சிறப்பு. தமிழகத்தில் இருந்து பொறுப்பேற்று இருக்கும் முதல் பேராசிரியர் என்னும் பெருமையும் இவர்க்கே.

சென்னை விருந்தினர் கழகத்தின் சார்பில் அவருக்குப் பாராட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தார் அதன் தலைவர் திரு. ரூஸ்வெல்ட் அவர்கள். அவ்விழாவில் பேரா. தேவராஜ்சன் அவர்களைப் பாராட்டிப் பேச சென்னைப் பல்கலையின் முன்னைத் தமிழ்ப்பேராசிரியர் மா. சே. வருகை புரிந்திருந்தார். நானும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேராசிரியரை வாழ்த்தும் பேறு பெற்றேன் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. 

தமிழகக் கல்லூரிகளுக்கும் முக்கியமாகச் சென்னைப் பல்கலைக் கழகத்திற்கும் என்னால் முடிந்த உதவியைச் செய்வேன் டாக்டர் தேவராஜன்  என்று ஏற்புரையில் கூறியது மகிழ்ச்சியாக இருந்தது.





Monday, June 24, 2013

உண்டாக்கி இருப்பாளா?



அவள் 
உண்டாகி இருக்கிறேன் 
என்று 
சொல்லும் போதெல்லாம்
மண்டாகி இருக்கிறேன்
என்று சொல்வது போலவே
காதில் விழுந்தது

அது உண்மைதான்
இல்லாவிட்டால்
அவளை
ஆதரவு அற்றவளாக
விடுவான்
என்று 
தெரிந்திருந்தும்
அவனை
உண்டாக்கி இருப்பாளா?




Wednesday, June 19, 2013

அடிக்கரும்பாய் இனித்தவரே!



வீறுகொண்ட எழில்யானை! மொழிப்ப கையை
       வெற்றிகொண்ட தமிழ்ச்சேனை! அகம்பு றத்தைக்
கூறுபோட்டு விளைவித்த மருதம்! எங்கும்
       குனியாதத் தன்மானக் குறிஞ்சி! நாட்டில்
யாருடனும் பகைகொள்ளா நிலவு! யாப்பில்
       எதுகைபோல் இணைந்திட்டப் பண்பாட் டுள்ளம்!
தேரினைப்போல் வலம்வந்தீர் உலகை! ஐயா
       தேடுகின்றோம்! வாடுகின்றோம்! எங்கே சென்றீர்?

வெடித்துவிழும் விதையைப்போல் தமிழை அள்ளி
       வீதியெல்லாம் பயிர்ச்செய்தீர்! உம்மி டத்தில்
படித்துவந்த உள்ளங்களில் தமிழ்உ ணர்வைப்
       பதியமிட்டு, பாத்திகட்டித் தினம்வ ளர்த்தீர்!
அடித்துவரும் புயலாக நடைந டந்து
       அருந்தமிழை நாடெல்லாம் பாய்ச்சி விட்டீர்!
படிப்பதற்கா நூல்யாத்தீர்? படிப்போர் நெஞ்சில்
       படிவதற்கே பைந்தமிழில் நூல்கள் யாத்தீர்!

சீற்றமில்லாத் தென்றலய்யா உமது நெஞ்சம்,
       செந்தமிழ்த்தாய் குடியிருக்கும் தமிழின் கூடல்
மாற்றமில்லாத் திசையைப்போல் கொண்ட கொள்கை
       மாணிக்கச் சுடரொளியின் வெளிச்சக் காடு
ஏற்றமெல்லாம் பெண்ணினத்தார் பெறுவ தற்கே
       எழச்செய்தீர் வள்ளியம்மாள் நிறுவ னத்தை
ஊற்றினைப்போல் எழுகிறதே உம்நி னைவு
       உள்ளூறும் நன்றியினால் வணங்கு கின்றோம்

வெள்ளிவிழா கொண்டாடும் போது உங்கள்
       விசைப்பணியை எண்ணுகின்றோம்! பெண்கள் வாழ்வில்
நள்ளிரவை ஒளிரவைத்த விடியல் நீங்கள்!
       நலத்தமிழால் வெளிச்சமிட்ட பரிதி நீங்கள்
தெள்ளுதமிழ் சிலம்பொலியின் ஏற்றம் போல
       திசையெட்டும் பெண்ணினத்தை ஒளிரச் செய்தீர்
தெள்ளியநீர் ஓட்டம்போல் எங்கள் நெஞ்சம்
       தினம் இருக்கச் செய்தவரே வணங்கு கின்றோம்!

தேதிஓட்டும் நாட்காட்டி! அ.மு.ப. நீரோ
       தண்டமிழ்த்தாய்த் தேரோட்டி! தூய அன்பில்
போதிமரப் புத்தனுக்கே தம்பி நீர்தான்
       புகழ்விரிக்கும் குறள்வழியே நடைந டந்தீர்!
ஆதிமுதல் தமிழ்த்தாய்க்கு அடிக்க ரும்பாய்
       அன்றாடம் இனித்தவரே! கீழ்க்க ணக்கு
நீதிநூலின் மறுபதிப்பே! ஐயா! நாங்கள்
       நினைக்கின்றோம் மீண்டுமிங்கே வருவீ ரோநீர்!



இக்கவிதை வெள்ளி விழா கண்ட வள்ளியம்மாள் மகளிர் கல்லூரியின் நிறுவனர் பேரா. முனைவர். அ.மு.பரமசிவானந்தம் அவர்களைப் போற்றி எழுதியது. 2012 - 13 ஆம் கல்வியாண்டின் கல்லூரி மலரில் இடம்பெற்றது. 

     
     


Saturday, June 15, 2013

இயக்குநர் மணிவண்ணன் கருப்புச் சட்டைக்குள் ஆர்ப்பரித்த வெள்ளை உள்ளம் அமைதி அடையட்டும்.






இயக்குநர் மணிவண்ணன் இயற்கை எய்தியதினார் என்னும் செய்தி இதயத்துள் கனக்கிறது. ஒரு சில மணி நேரங்கள் அவருடன் பேசி, சிரித்து மகிழ்ந்ததை மனம் அசை போடுகிறது. அவர் என்னிடம் வைத்த வேண்டுகோளை நிறைவேற்ற முடியவில்லை. வருந்துகிறேன். குழந்தை மனத்துடன் பேசியதை, அவரது கைப்பேசியில் புகைப்படம் எடுத்த்க்கொண்டதை, “நான் படிக்காதவன்ம்மா, எனக்கு இலக்கியத்தில் இருக்கும் வைதீக முறைத் திருமணங்கள் எப்படி நடந்தன? முக்கியமாகக் கண்ணகி, சீதை, பாஞ்சாலி போன்றோரின் திருமணம் குறித்த செய்திகளை எழுதித் தாருங்கள். நான் நடத்தி வைக்கும் சுயமரியாதைத் திருமணங்களில் அதைப் பற்றி பேச வேண்டும்” என்று கேட்டுக்கொண்டதை எப்படி மறக்க? இரு திங்களுக்கு முன்னர் அழைத்து அடுத்த மாதம் தருகிறேன் என்று கூறினேன். மிகவும் வருந்துகிறேன். அந்தக் கருப்புச் சட்டைக்குள் ஆர்ப்பரித்த வெள்ளை உள்ளம் அமைதி அடையட்டும். அவருக்கு என் வீர வணக்கம்


இயக்குனர் மணிவண்ணைப் பற்றி..அந்த விழாவில் வாசித்த கவிதை.. இன்று கண்களின் நீர்த்தாரைகளுடன்....

கருஞ்சிறுத்தைக் கூட்டம் 
இவன் 
கன்னத் தாடி
கண்ணிரண்டும்???? 
கன்னி வெடி
என்ன முரண்? 
மணிவண்ணன் கருத்த மெய்யில் 
கலங்கமில்லா 
வெள்ளை உள்ளம்
வெள்ளித்திரை சிரிப்புக்கு..... 
பல்லே இவன் தான்!
நாவில்
சொல்லணையைக் க்ட்டி வைத்து 
நல்ல தமிழ் சிந்தனையை 
இயக்குகின்றான்.