ஆன்றோர்களே! சான்றோர்களே! உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துள் ஆசிர்வதிக்கப் படட்டும்

Saturday, April 29, 2017

இலக்கியம் எப்போதும் இன்பம்


நேற்று (29.04.17) புதுவையில் நடைபெற்ற புரட்சிக் கவிஞரின் பிறந்தநாள் விழா, டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் விழா மற்றும் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் புதுவைக் கிளை தொடக்க விழா ஆகியவை புதுவைத் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற்றது.
புவைக் கிளையை இலக்கிய வள்ளல் மாம்பலம் ஆ. சந்திரசேகர் திறந்து வைத்தார். எழுத்தாளர்கள் சங்கத்தலைவர் நல்லாசிரியர் கோ.பெரியண்ணன் தலைமையில் செயலாளர் இதயகீதம் இராமானுசம் அனைவரையும் அறிமுகம் செய்து வைத்தார். பொருளார் புலவர் இராமமூர்த்தி, இணைச்செயலாளர் ப.கி.பிரபாகரன், நான், வே. சேகர் ஆகியோர் வாழ்த்திப் பேசினோம். பிறபகல் நிகழ்ச்சியாக கலைமாமணி கோனேரி பா. இராமசாமி தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. அதிலும் கவிதை பாடினோம். நிறைவாகவும் பயணாகவும் இருந்தது.
இலக்கியம் எப்போதும் இன்பம்.


Friday, April 7, 2017

சூறையாட்டு......ஒரு காதல் சூறயாடப் படுகிறது
இனி இது போல 
எப்போதும் நடந்துவிடக் கூடாது
என்று
வார்த்தைகள் தூவுகின்றன
வாய்கள் எல்லாம்

ஜன சந்தடியில்
கசங்கி, நிறமிழந்து
மெல்ல மெல்ல மடியும்
மயானப் பாதை
மலர்களைப் போல
மறுநாளில் அல்லது அடுத்த நாளில்
அவ்வார்த்தைகள் மடிந்து விடுகின்றன
அக்காதலின் சமாதியோடு

மீண்டும் அதே போல
அடுத்தொன்று…..
அப்போதும்
வெவ்வேறு வண்ணங்களில்
தூவப் படுகின்றன
மயானப் பாதை மலர்கள்

கொஞ்சம் இடைவெளி விட்டு
இன்னொன்று…..
அப்புறம் மற்றும் ஒன்று
அப்புறம் வேறு ஒன்று
இப்படியே தொடர்கிறது….
காதல் சூறையாடல்களும்……
தூவப் படும்
மயான மலர்களும்
சாதிக் கடவுளர்களுக்காக..

ஒவ்வொரு காதல்
சூறையாடப் படும் போதும்
காதலர் பெயருக்கேற்ப
மாற்றம் பெறுகின்றன
சூறையாட்டின் பெயர்களும்
சாதிக்கொலை
கெளரவக் கொலை
ஆணவக் கொலை
என்று……

நல்ல வேளை
முதல் காதலர்
ஆதாம் ஏவாள் காலத்தில்
நாம் இருந்திருக்கவில்லை
இருந்திருந்தால்
சூறையாடி இருப்போம்
ஏதேனும் ஒரு பெயர்
வைத்து
அந்தக் காதலையும்!

- ஆதிரா முல்லை.

(கவிதை உறவு மாத இதழில் இடம்பெற்றது.
நன்றி கவிதை உறவு)

Sunday, March 12, 2017

பாடலாசிரியராகிறார் - கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா
கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா அவர்களின் அழைப்பின் பேரில் இணையதளம் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவுக்குச் சென்று வந்தேன். திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இசைப்பேழையை வெளியிட்டார்.

இணையதளத்தின் இனிமை மற்றும் கொடுமை இரண்டையும் மையமாக வைத்து சங்கர் & சுரேஷ் இரட்டையர் (Not Twins; They are Friends) இயக்கத்தில் இயக்கப் பட்ட ஒரு திகில் திரைப்படம். இப்படத்தின் வசனத்தையும் பாடல்களையும் மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் எழுதியுள்ளார்கள்.

‘வாடா வாடா நம்ம ஊரு டீமு டீமு’ ஷேர் பண்ணி தருவது மாமூ மாமூ” என்ற பாடல் கோவை திரைப்பட டீமுக்குப் பெயர் பெற்றுத் தரும் குதுகலக் குத்துப் பாடல். இளைஞர் அரோல் கொரோலி இசையில் அமைந்துள்ள இப்பாடல் மரபின் மைந்தன் முத்தையா அவர்களின் இளமைக்கும் சான்று.

“விட்டு விட்டு ஒலிக்குதடா வீணை நாதம்; தொட்டுத் தொட்டுப் பழகட்டும் தோடி இராகம்” இப்பாடல் வார்த்தைகள் தெளிவாக இசைக்குள்ளிருந்து பழமையையும் மரபையும் போர்த்திக்கொண்டு பழகுதமிழ் இனிமையோடு இதமாக வெளிவருகிறது.

“நீலம் தூங்கும் வானில் நிலவின் அசைவுகள்; நீலம் பூத்த கண்ணில் கனவின் கசிவுகள்” என்னும் சோக ராகம் சோகத்தோடு இலக்கிய ரசனையான வார்த்தைகளையும் சுகமான இசையையும் சுமந்து நாற்பதுகளை அவர்களின் நினைவுகளை பதமாக அசை போட வைக்கிறது.

“திரிசங்கு சொர்க்கம் இதுவா? விடை சொல் விஸ்வாமித்ரா” என்று உச்சஸ்தாயியில் வினா எழுப்பி, சுருங்கிப் போனது பூகோளம்; சுறுசுறுப்பானது பூலோகம்; விரல்களின் நுனியில் வையகம் முழுவதும் அடங்கி விடும் இணையதளம்” என்னும் பாடல் கதைக்கருவைச் சுமந்து அசாதரனமான இசையோடும் அழுத்தமான கேள்விகளோடும் சிந்திக்க வைக்கிறது. பால்வெளி மீதினில் படுக்கையைப் போட்டது இணையதளம் போன்ற வரிகளாலும் இப்பாடல் பால்வெளி வரை கொட்டி முழக்கும் வெற்றிப் பாடல் என்பதைச் சொல்கிறது.

நான்கு பாடல்களும் இசை, எழுத்து, காட்சி என எத்தரப்பிலும் ஏற்றம் பெற்றுள்ளன.

பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கவும் திரு மரபின் மைந்தன் அவர்கள் திரைத்துறையிலும் முத்தாக ஒளி வீசவும் எம் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
இணையதளம் இதயங்களை இணைக்கும் இனிய தளமாக வெற்றி பெறட்டும். வாழ்த்துகள்.

எஸ்.பி.முத்துராமன் அவர்கள் வரும்போது வழியில் நின்றிருந்த நான் அவருக்கு வணக்கம் சொன்னேன். வழக்கம் போல ஆதிரா வாங்க என்றழைத்துப் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இலக்கியக் கூட்டத்தில் எப்போதும் பார்க்கும்போதெல்லாம் புகைப்படம் எடுப்பது எங்கள் வழக்கம். இந்தத் திரைப்படக் கலைஞர்களால் சூழப்பட்ட எனக்கு அந்நியமான கூட்டத்தில் நாகரிகம் கருதி நான் உள்ளே நகர்ந்தேன். ஆனாலும் அவரது பெருந்தன்மை இது. எப்போதும் சிலிர்க்க வைக்கும் அன்பு ஐயா எஸ்.பி.முத்துராமன் அவர்களது. பழகும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள்.

Thursday, March 9, 2017

‘ஆதி’ விருது உங்கள் ’ஆதி’(ரா)க்கு.......
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இன்று (08/03/17) உலக மகளிர் தினத்தில் வின் தொலைக்காட்சியின் ‘ஆதி’ (யாதுமாகி நின்றாய்) சாதனையாளர் விருது உங்கள் ஆதிராவுக்கு........
லக்‌ஷ்மன் ஸ்ருதி இன்னிசை மழையில்... சுதந்திரப் போராட்ட வீராங்கனை சரசுவதி ராஜாமணி, இலக்கியவாதியும் காவல்துறை அதிகாரியுமான திருமதி திலகவதி, குமுதம் ஸ்நேகிதி இதழின் ஆசிரியர் திருமதி லோகநாயகி திரு ரூஸ்வெல்ட் ஆகியோர் முன்னிலையில்.....
விருதாளர்களைப் பற்றி ஒளி-ஒலிப்பதிவு செய்து திறையில் பார்வையாளர்களுக்குப் போட்டுக் காண்பித்தது பெருமை. விருதாளர்களுக்கு, இருக்கையில் தொடுத்த மல்லிகைச் சரம் கொடுத்து உபசரித்தது புதுமை. மிக ருசியான உணவுடன் மிக உயர்ந்த உபசரிப்பு அருமை.......
வின் தொலைக்காட்சி நிறுவனர் திரு. தேவநாதன் யாதவ் மற்றும் செயலாளர் திரு. குணசீலன் இருவருக்கும் நன்றி

Sunday, February 5, 2017

பன்னாட்டுக் கருத்தரங்கம்

தமிழ் நெஞ்சங்களுக்கு,
12.02.17 ஞாயிற்றுக்கிழமை ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ள பன்னாட்டுக் கருத்தரங்கில் பங்கு பெற அன்போடு அழைக்கிறேன். தங்கள் வருகை எங்கள் உவகை. வாருங்கள் தமிழ் அமுது பருக!

Monday, December 26, 2016

பன்னாட்டுக் கருத்தரங்கம்ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றம், மலேசியா
ஈகரைத் தமிழ்க் களஞ்சியம், மலேசியா
ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரி சென்னை
ஆதிரா பதிப்பகம், சென்னை
நான்கு அமைப்புகளும் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் வருகிற 11.02.17 சனிக்கிழமை அன்று. அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
தங்கள் ஆய்வுக்கட்டுரைகள் கருத்தரங்க நூலை அழகு செய்யட்டும். விரைந்து எழுதுவீர். நிறைந்து மகிழ்வீர்!
கருத்தரங்க தலைப்பு: காலந்தோறும் தமிழ்
நாள்: 11/02/17
இடம்: ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரி, பள்ளிக்கரணை, சென்னை
கட்டுரை அனுப்ப வேண்டிய மின் முகவரி:
innilaa.mullai@gmail.com
கட்டணம் செலுத்த:
P. BHANUMATHI
SB. 01/011041
012300101011041
CORPORATION BANK
123, CHENNAI KELLY'S CORNER BRANCH
கட்டுரையும் கட்டணமும் செலுத்த நிறைவு நாள் 31/12/16

Sunday, December 11, 2016

மகாகவிக்கு புகழ் அஞ்சலி

மகாகவி சுப்பரமணிய பாரதியாரின் 135 ஆவது பிறந்தநாளில் (11/12/16) சென்னை மெரினாவில் கம்பீரமாக நிற்கும் அந்த மகாகவிக்குப் பாரதியார் சங்கத்து அன்பர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியபோது.. தலைவர் மூத்த வழக்கறிஞர் காந்தி, துணைத்தலைவர் மருத்துவர். மேஜர் ராஜா, செயலாளர் மதிவாணன், பொருளாளர் சோபனாரமேஷ், கவிஞர் நெல்லை இராமச்சந்திரன், வழக்கறிஞர்கள் இராமலிங்கம், சதீஷ் குமார், வசந்தகுமார் முதலானோருடன்...

மும்பை இலக்கியத் திருவிழாவில்... பட்டிமன்றத்தில்...இல. கணேசன் = இலக்கிய கணேசன்
மாநிலங்களவை உறுப்பினராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப் பட்ட தமிழ் இலக்கியவாதியும் பொற்றாமரை இலக்கிய அமைப்பின் தலைவருமான திரு. இல. கணேசன் அவர்களை அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் அவரது இல்லம் சென்று வாழ்த்து தெரிவித்து வந்தோம்... அடுத்து சங்கத்தின் நிகழ்வுக்காக தேதியும் கேட்டுவிட்டு வந்தோம்.
பொதுச்செயலாளர் முனைவர் இதயகீதம் இராமானுஜம், அவை முன்னவர் அரிமா. திரு. பத்மநாபன் மற்றும் முனைவர். வாசுகி கண்ணப்பன் ஆகியோருடன் நானும்...
அன்பும் கனிவும் நிறைந்த அவரது உபசரிப்பில் மகிழ்ந்தோம். அவரது மேடைப் பேச்சு கேட்டிருக்கிறேன். தனிப்பட்ட முறையிலும் இவ்வளவு இலக்கியமாகப் பேச முடியுமா என்று வியக்க வைத்தார். இலக்கியம் பலர் கூடி மகிழ்ந்து பேசும்போதே சுவை தருகிறது. பன்னோக்குப் பார்வையைத் தருகிறது. அதுவே மகிழ்வான அனுபவமாக இருக்கும் என்று கூறினார்.
எல்லோர்க்கும் இனிப்பு கொடுத்தார்கள். நவராத்திரி என்பதால் எனக்கும் வாசுகி அம்மாவுக்கும் பரிசுப் பொருட்கள் கொடுக்கப் பட்டது. (வேலைப்பாடுகள் அமைந்த அழகான தட்டு, கண்ணாடிகள் எல்லாம் பதித்த அழகான கைப்பை வெற்றிலை பாக்கு இத்யாதிகள் எல்லாம்) எல்லா திருவிழாக்களிலும் பெண்களையே சிறப்பிக்கிறார்கள். ஆகையால் அடுத்த பிறவியில் பெண்ணாகப் பிறக்க வேண்டும் என்று கூறிவிட்டு ஓர் அழகான நகைச்சுவையைக் கூறினார். இப்படித்தான் ஒரு பெண் அடுத்த ஜென்மத்துல நான் கணவனா பொறக்கனும். நீங்க மனைவியா இருக்கனும் என்று சொன்னாளாம். அவளது கணவன் அப்படி நம்பி எதையும் கேட்டுடாதே. நீ இறந்து அடுத்த பிறவி எடுக்க எப்ப்டியும் ஒரு ஐம்பது அறுபது ஆண்டுகளாவது ஆகும். அதற்குள் நிலைமை தலைகீழாக மாறிவிடும். இப்போதே கணவன்மார்கள் வேலை செய்யத் தொடங்கி விட்டார்கள். அப்புறம் அடுத்த பிறவியிலும் நீதான் அல்லல் பட வேண்டுமா என்று யோசித்துக் கொள் என்றானாம். அவர் இதனை அழகு தமிழில் பழகு தமிழில் சொன்னார். மிக நீண்ட கவிதையால் பொதுச்செயலாளர் இதயகீதம் அவர்கள் அவ்ரை வாழ்த்தினார்.
L.G. அவர்கள் வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தது............ இப்படியும் பெரிய மனிதர்கள் இருப்பார்களா என்று வியக்க வைத்தது. இருக்கிறார்களே....
நெகிழ்வாகவும் மகிழ்வாகவும் இருந்த தருணம்.. என் நூலையும் கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.

Sunday, July 3, 2016

கடற்கரைக் கவியரங்கில்....

இன்றைய (03.07.16) 543 வது கடற்கரைக் கவியரங்கில்.... எனக்குத் தலைமைப் பொறுப்பேற்கும் சிறப்பு வாய்த்தது.
அதன் தலைவரும் பொன்விழா ஆண்டில் நடை போட்டுக்கொண்டிருக்கிற முல்லைச்சரத்தின் ஆசிரியருமான கலைமாமணி பொன்னடியான் அவர்கள் என்னை வெகுவாகப் பாராட்டிப் பேசினார்கள். சற்று வெட்கமாகவும் இருந்தது. மஞ்சரி இதழில் முன்னாள் ஆசிரியர் லெச்சுமணன் (லெமன்), கவிஞர் முசுறி மலர்மன்னன், கவிஞர் ஜெகதா அய்யாசாமி, கவிஞர் அய்யாசாமி, மற்றும் கவிஞர் பலரும் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி முல்லையின் சரமென அழகும், முத்துகளின் சரமென பயனும் உடையதாக இருந்தது
.
அவ்வளவு பெரிய மனிதர் என்னைப் பார்த்ததும் கவியரங்கின் தலைமை நீங்கள்தான் என்று கூறி அழகாக அறிமுகம் செய்து வைத்தது மகிழ்வாக இருக்கிறது. கலைமாமணி பொன்னடியான் அவர்களுக்கு நன்றிகள் பல....


முல்லைச் சரம் இதழின் பொன்விழா கொண்டாட்டத்தைப் எப்படி நடத்தலாம் என்று பேசிக்கொண்டு இருக்கும்போது...