Monday, June 30, 2014

அப்போது ‘அழகு’




ஆதி நாட்களைப் போல் இல்லை
இப்போது எதுவுமே

அப்போது காடு நிரம்பியிருந்தது
இப்போது கட்டிடம்

அப்போது காற்று நிறைந்திருந்தது
நிலமெல்லாம்
இப்போது புகை மண்டலம்

அப்போது ஆன்மிகம் நிறைந்திருந்தது
இப்போது அரசியல்

அப்போது ஆடை மறைத்திருந்தது
அங்கங்களை
இப்போது மேல்நாட்டு வாடை

அப்போது காதல் நிரம்பியிருந்தது
நெஞ்சங்களில்
இப்போது காமம்

ஒற்றைச் சொல்லால் சொல்வதென்றால்
அப்போது ‘அழகு’
இப்போது
நரகு
----------


Wednesday, June 25, 2014

தினமலர் நாளிதழில் என் நேர்காணல்.

22.06.14 ஞாயிற்றுக்கிழமை தினமலர் பெண்கள் மலரில் என் நேர்காணல். 


Thursday, June 19, 2014

சென்னை கந்த கோட்டத்தில் வசந்தவிழா

 12/06/14 வியாழன் அன்று கந்த கோட்டம் முருகன் கோவிலில் வள்ளலார் என்னும் தலைப்பில் அடியேனுடைய சொற்பொழிவு நடைபெற்றது. அவை நிறைந்த ரசிகர்கள். மனம் நிறைந்த நிகழ்வு.





Monday, June 9, 2014

முரட்டுப் பிரியம்



பந்தயத்தில்
ஓடத் தயாராக இருக்கும்
தடகள வீரரைப் போல்
முற்றத்தில் காத்திருந்தது
என் மீதான
உன் பிரியம்

கதவு திறக்கும்
அக்கணத்தில்
உள்ளே நுழைய ஆயத்தமாக

ஆக்கிரமிப்புக்கு அஞ்சி
இறுகத் தாளிட்டேன்
இரட்டைக் கதவுகளையும்

தாழ்க்கோல் துவாரத்தில்
நுழைந்து
அறைகள் தோறும் வியாபித்திருக்கும்
அந்த முரட்டுப் பிரியத்தை
எப்படிச் சுவாசிப்பது

Sunday, June 8, 2014

பிரியம்



பிணி
மூப்பு
மரணம்
எதன் பொருட்டோ

இன்றோ
நாளையோ
என்றோ ஒரு நாள்
என் இருப்பு
சூனியமாகலாம்

நாளோ
வாரமோ
மாதமோ
ஆண்டுக்கொரு முறையோ
திறந்திருக்கும் இதயத்திலோ
கனவுகளின் வரத்துக்காக
மூடியிருக்கும் விழிகளிலோ
நான் வரவும் கூடும்
வராமல் போகவும் கூடும்

இப்போதே ஒரு கவிதையை
எழுதி விடுகிறேன்
வழிகின்ற
பிரியத்தின் வண்ணத்தில்
வார்த்தைகளைத் தோய்த்தெடுத்து


Saturday, June 7, 2014

ரகசியமாக



நீ தூவிய 
குறுநகையிலிருந்து
என் நிலத்தில் 
முளை விடுகிறது 
ஒரு செடி

உன் கூரை தாண்டிய

மேகம்
கொண்டு வந்து
பொழிகிறது
உன் சுவாசத்தை

உன் சாளரத்திலிருந்து

வந்த தென்றல்
புன்னகையைப் பூட்டுகிறது
பூக்களின் இதழ்களில்

பூத்துக் குலுங்கும்

உன்னை
எவருமறியாமல் வாசிக்க
ஒரு பெயர் சூட்டுவாயா
ரகசியமாக?