Saturday, October 28, 2017

அச்சமும் பொறுப்புணர்வும் நச்சரிப்பு செய்கின்றன







பல நிகழ்வுகளில் பங்கு பெறுகிறோம். சில நிகழ்வுகள் மன மகிழ்வைத் தருகின்றன. சில நிகழ்வுகள் இது போலொரு நிகழ்வுக்கு இனி போகவே கூடாது என்னும் உணர்வைத் தருகின்றன. சில நிகழ்வுகள் மனத்துக்கு நெருக்கமாக வந்து இதமானதொரு உணர்வையும் நெகிழ்வையும் ஏதாவது செய்தாக வேண்டும் என்னும் நச்சரிப்பையும் கொடுத்துக் கொண்டிருக்கும்.
            மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் முதியோர் இருக்கும் அன்பகம் என்னும் காப்பகத்தின் ஆண்டு விழாவுக்குத் தொடர்ந்து ஐந்து அண்டுகளாகக் குத்து விளக்கு ஏற்றி வைத்து விழாவைத் தொடங்கி வைத்து வாழ்த்துரையும் வழங்கும் வகையில் சென்று கொண்டிருக்கிறேன்.
             அச்சமும் பொறுப்புணர்வும் கூட்டக் கூடிய ஒரு நிகழ்வு சென்ற ஆண்டு ஆண்டு விழாவில் அரங்கேறியது. ஆண்டு மலர் வெளியிட்டார்கள். பிரித்துப் பார்க்கிறேன் என் புகைப்படத்தைப் போட்டுத் துணைத்தலைவர் என்று அச்சிடப் பட்டிருந்தது. திடீரெண்டு அந்த அறிவிப்பை அன்பகத்தின் நிறுவனரும் செயலாளருமான டாக்டர் வீரமணி செய்தார்.
              இந்த ஆண்டு, நீதியரசர் ச. மோகன் தலைமையில் நேற்று நடந்த விழாவில் உடல்நிலை சரியில்லாத நிலையில் நீதியரசர் வந்து கலந்து கொண்டார். தொலைவு ஒன்றரை மணி நேர பயணம். நீதியரசரை நிகழ்வுக்குச் செல்ல வேண்டாம் என்று நானும் அலைபேசியில் அழைத்துச் சொன்னேன். ஆனால் வந்த அவர் பேசும் போதும் அதைக் கூறி இந்த மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் நான் நீதியாக நடந்து கொள்ளவில்லை என்றால் நான் இருந்து என்ன பயன் என்று உணவுப் பூர்வமாக உரத்த குரலில் சிம்மம் போல கர்ச்சித்துக் கூறினார்.
           அவர் பேச்சையும் செயலையும் (உடல்நிலை அவ்வளவு மோசமாக இருக்கும் போது அவ்வளவு தொலைவு பயணம் செய்து வந்தது) 
எதாவது செய்ய வேண்டும் என்னும் எண்ணம் மேலும் மேலும் எழுவதை எத்தனை முறையில் மனத்தை மாற்றினாலும் மாற்றவே முடியவில்லை. என்னால் முடிந்த உதவியை ஆண்டுதோறும் செய்தும் வருகிறேன். அது போதாது.... இன்னும் இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று மனம் தொடர்ந்து நச்சரித்துக் கொண்டே இருக்கிறது.

          அரிமா டாக்டர் ரூபி மனோகரன், அரிமா டாக்டர் மணிலால், அரிமா சந்தானம், கலைமாமணி ஏர்வாடி இராதாகிருஷ்ணன், கவிஞர் சிந்தை வாசன் முதலான சான்றோர் பலர் கலந்து கொண்ட நிறைவான விழா.
      நடிகர் கிங்காங்கும் போண்டா மணியும் ஆண்டுதோறும் வந்து அக்குழந்தைகளுக்காகக் கலை நிகழ்ச்சி நடத்துகின்றனர்.
                 அன்பகம் நிறுவனர் டாக்டர் வீரமணி அவர்களும் ஊனமுற்றவர். அவரும் அவரது குடும்பத்தாரும் இத்தொண்டிற்காகவே நலமாக வாழட்டும் என்று வாழ்த்தி வந்தேன். வாழ்த்துகிறேன்.

Sunday, October 22, 2017

கனவு தேவதையைக் கண்டேன்

கனவு தேவதையைக் கண்டேன்
*******************************************
என் நீண்ட நாளைய கனவு தேவதை கவிஞர். இரா. மீனாட்சியைக் காணும் பேறு இன்று கிடைத்தது . கையில் ஒரு பையுடன் அமர்ந்திருந்த அந்தத் தேவதையைக் கண்டவுடன் ஓடிச் சென்று பேசினேன். ஒரு ஐந்து நிமிட உரையாடல்தான். என்னைப் பற்றியும் கேட்டுக் கொண்டது. நான் ஆரோவில்லில்தானே எப்போதும் இருக்கிறேன, வாருங்களேன் என்று அன்பழைப்பும் விடுத்தது.
அந்தத் தேவதை இன்று கன்னிமாரா மத்திய நூலகத்தில் நடைபெற்ற பேராசிரியர் இராம. இராமநாதன் அவர்களின் சிலப்பதிகார ஒலிக் குறுந்தகடு வெளியீட்டு விழாவில் வாழ்த்து உரைக்க வந்திருந்தது. வாழ்த்தையும் அழகு ஒளிரும் கவிதையாக வாசித்தது. தேவதையின் அழகைப் போலவே குரலும் இனிமையாக ஒலித்தது.
நிகழ்ச்சி முடிந்தவுடன் நான் எழுத்தாளர் சங்கத்தின் எட்டையபுரம் பயணத்திற்கான தொகையைப் பெற்றுக்கொண்டு இருந்தேன்.ஒரே ஒரு நிமிடம்தான். ஒருவர் அம்மா கொடுக்கச் சொன்னார் என்று ஒரு பையைக் கொடுத்தார். எந்த அம்மா என்று நான் திரும்பிப் பார்க்கும் போது அந்தத் தேவதையைக் காணவில்லை. மகா கவிதை இதழ்கள் 4 மற்றும் பேராசிரியர்கள் குறிஞ்சி வேந்தன் & அருணன் இருவரும் இணைந்து பதிப்பித்த தேர்ந்தெடுத்த பாடல்களும் R.S.Pillai அவர்களின் ஆங்கில உரையும் அடங்கிய ‘சிலப்பதிகாரம்’ நூல், ஆரோவில் பற்றிய ஒரு துண்டறிக்கை என்று பையோடு கொடுத்து விட்டுச் சிட்டென்று பறந்தது இருந்தது அந்தத் தேவதை. தேடிக்கொண்டிருந்த தேவதையின் காட்சியைக் கண்ணிரண்டில் தேக்கியிருந்த மகிழ்விலும் தேவதையின் கைப்பையே வரமாகப் பெற்ற மகிழ்விலும் குறையேதும் இல்லாமல் திரும்பினேன்.
அருகில் இருப்பவர்கள் ஒலிப்பேழை வெளியிட்ட இராம. இராமநாதன், முனைவர் வாசுகி கண்ணப்பன் மற்றும் செம்மொழி மத்திய நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் முகிலை. இராசபாண்டியன்



Tuesday, October 17, 2017

ஆதிரா முல்லை யின் நேர்காணல் - மக்கள் தொலைக்காட்சியில்..

ஆதிரா முல்லை யின் நேர்காணல் - மக்கள் தொலைக்காட்சியில்...
சற்றேறக் குறைய எட்டு மாதங்கள் (12/02/17/ கழிந்து விட்டன பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்தி. இன்னும் பசுமையான நினைவுகள் மனத்தில். அக்கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களின் பாராட்டு மழை இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன. இப்போது நினைத்தாலும் மகிழ்வையும் பெருமிதத்தையும் ஏற்படுத்தும் இப்பன்னாட்டுக் கருத்தரங்கைப் பார் போற்றும் மாபெரும் கருத்தரங்காக ஆக்கிய பெருமை இதில் பங்காற்றிய பாடாற்றிய பலருக்கும் உரியது. மீண்டும் இவ்வேளையில் அவர்களுக்கு நன்றி.
பாருங்கள்..... வாழ்த்துங்கள். மேலும் உற்சாகமாக உழைக்க உதவுங்கள்.......
நன்றி ஜோன்ஸ், மக்கள் தொலைக்காட்சி

https://www.facebook.com/aathiraa.mullai/videos/1783700848338775/

Sunday, October 15, 2017

பதிலிகள்


நேசம் என்பதன் பொருள்
புரிவதாக இல்லை
சரியும் போது
தாங்காத நேசங்கள்
மார் தட்டிக் கொள்கின்றன
நம் நிமிர்தலின் போது
தாழ்வில்
பயத்தோடு இருந்த நேசங்கள்
வாழ்வில்
பரவசப் படுவதாக நடிக்கின்றன
இல்லாத ஒன்று
சொல்லாமல் தெரிந்து விடுகின்றது
என்பதைப் புரிந்தும்
கண்டு கொள்வதில்லை
சில நேசங்கள்
பதிலிகளை எதிர்ப்பார்த்தே
சில நேசங்கள்
பரிகாசம் செய்வதற்கே
சில நேசங்கள்
இன்று நேசமாக இருக்கும் எதுவும்
அன்று நேசமாக இருந்ததில்லை
இருந்தாலும்
நெகிழும் போது விலகி
மகிழும் போது நெருங்கும்
நேசங்களோடும்
முரண்பட முடிவதில்லை
அன்றையும் இன்றையும்
அசை போட்டவாறு
உண்பதைப் போல
உடுப்பதைப் போல
நேசித்தும்
தொலைக்க வேண்டியுள்ளது
நேரம் தவறாமல்

பிரயோகம்



அத்தனையும் முடிந்த பின்பு
தெரிந்து கொள்கிறோம்….
நட்பு பகை
மேலதிகாரி கீழதிகாரி
இலக்கியவாதி பொதுநலவாதி
உற்றார் மற்றார்
உரார் உறவார்
மாற்றார் அயலார்
அக்கம் பக்கம்
அனைவருக்கும் தேவைப்படுவது
புகழ் மொழி
சொற்களை
மூட்டைக்கட்டிக் கொண்டு
முகம் பார்த்து
காலமறிந்து
அவிழ்த்துக் கொட்டி விட்டால்
எத்தனை கம்பீரமானவர்களையும்
வீழ்த்தி விடலாம்
சொல் ப்ரயோகம் தெரிந்தவர்கள்
வாழ்ந்து விடுகின்றார்கள்
சொற்களை ஏவ முடியாதவர்கள்
வீழ்ந்து விடுகின்றார்கள்
அத்தனையும் முடிந்த பின்பு
தெரிந்து கொள்கிறோம்….

மெளனமாய் இன்னும் மெளனமாய்....