Thursday, April 26, 2018

எங்கெங்கு காணினும் பாதாகைகள்

குற்றாலத்தில் அரிமா சங்க ஆண்டு விழாவில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. குற்றாலத்தில் காணும் இடமெல்லாம் அருவிகள்தான் இருக்கும். ஆனால் அன்று ஒரே பதாகைகள்தான் அணிவகுத்தன. (சொல்லனும்ல.......... நம்ம போட்டாவும் இருக்குதுல்ல........ சிறப்பு அழைப்பாளரா போயிட்டு அங்கங்க போட்டோ எடுத்தா நம்ம ]கெளரவம் என்ன ஆவரது. அதனால் ஒரே ஒரு போட்டோ மட்டும் எடுத்துக்கிட்டேன்).
இந்த அரிய வாய்ப்புக்கு இப்போது தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது பெற்ற அரிமா ஆளுநர் சுந்தரராசன் ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். என்னைப் பேச அழைத்த போது தொலைபேசி உரையாடல் தொடங்கி தொடர்வண்டி பயணம், தென்காசியிலிருந்து அழைத்துச் சென்றது, அங்கு ஊர் சுற்றிப் பார்க்க கார் அனுப்பியது, மீண்டும் தொடர்வண்டி நிலையம் கொண்டு வந்து சேர்க்கும் வரை அன்பு உபசரிப்பு செய்தார். கிளம்பும் போது உங்களைத்தான் சரியாகக் கவனிக்க வில்லை என்று வேறு அங்கலாய்த்துக் கொண்டார். சரியாகக் கவனிப்பது என்பது அவரது அகராதியில் இதையும் விட அதிகம் போல.
இராமநாதபுர மாவட்டத்தின் முதல் பெண் அரிமா திருமதி ஜெயந்தி சுந்தரராசன் அவர்கள் அதனினும் அன்பு மழை பொழிந்தார். மேடையில் நின்று கொண்டிருந்தாலும் பார்வையெல்லாம் என் மீதே இருந்தது. கம்பன் விழாவுக்குக் கண்டிப்பாக வர வேண்டும் என்னும் அன்பு அழைப்போடு என்னை வழியனுப்பினார்.
இந்த இணையர் அரிமா மாவட்டத்தின் முதல் இணையர் (District first couple) என்னும் வார்த்தைகளை வைத்தே என் உரையைத் தொடங்கினேன். இந்த இணையரின் இந்தப் புகைப்படம் சிம்மக்குரலோன் சிவாசிகணேசன் அவர்கள் குரலில் சுந்தர ராசன் ஐயா அவர்கள் ஒரு பாட்டுப் பாடும் காட்சியை என் கண் முன் கொண்டுவந்தது.. அதாவது
“உன்னை கரம் பிடித்தேன்
வாழ்க்கை ஒளிமயம் ஆனதடி
பொன்னை மணந்ததனால் சபையில்
சபையில் புகழும் வளர்ந்ததடி
கால சுமைதாங்கி போலே
மார்பில் எனை தாங்கி
வீழும் கண்ணீர் துடைப்பாய்
அதில் என் விம்மல் தணியுமடி
ஆழம் விழுதுகள் போல்
உறவு ஆயிரம் வந்தும் என்ன
வேர் என நீ இருந்தாய்
அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்
பேருக்கு பிள்ளை உண்டு
பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு
என் தேவையை யார் அறிவார்
உன்னை போல் தெய்வம் ஒன்றே அறியும்”
என்று கூறினேன். ஐயா அவர்கள் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. சபையோர் முகத்திலும்.
இந்நிகழ்வுக்கு என்னைப் பரிந்துரை செய்த அன்பு சகோதரர் துரைமுருகன் அவர்களுக்கு என் நன்றியும் அன்பும்.
ஒன்றே ஒன்று தான் கொஞ்சம் நெருடலாக இருந்தது......
பைன் ஆப்பிள் ஜூஸ் (பழச்சாறு) என்று ஒன்று கொடுத்தார்கள். அது திப்பி திப்பியாக மென்று தின்பது போல இருந்தது. அதை அப்படியே வைத்து விட்டு வாட்டர் மெலான் ஜூஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அதை வாங்கிக் கொண்டேன். அதுவும் துண்டுகளாக நறுக்கிப் போட்டிருந்தார்கள். மேடையில் அமர்ந்து எப்படி சாப்பிட..... அதற்குள் பின்னாலிருந்து ஒரு ஸ்பூனாவது கொடுத்திருக்கலாம் என்று வேறு பேசிக்கொண்டார்கள். குற்றாலத்தில் பழச்சாறு என்றால் கடித்துத் தின்பது போலத்தான் இருக்கும் போல.......

2 comments: