Sunday, November 15, 2015

மழைக்குழந்தை



கம்மியும்
கை கால்களை உதைத்து கர்ச்சித்தும்
ஒலி எழுப்பும்
குழந்தையின்
அழுகையாய்க் கேட்கிறது
பலஹீனமாகவும்
பலமாகவும் பெய்யும்
மழையின் குரல்

அழவும் தெரியாமல்
அழாமல் இருக்கவும் முடியாமல்
விம்மி வெதும்பிக் கொண்டிருக்கும்
குழந்தையாய்
பரிதாபமாக முகத்தை
வைத்துக் கொண்டிருக்கிறது
மழை பொழியாத
நேரத்து மேகம்

அவ்வப்போது நிறுத்தி
நம் கவனத்தை ஈர்க்கும்
குழந்தையின் அழுகையென
நாம் கவனிக்கவே
விட்டு விட்டு
பெய்கிறது
மழையும்

அடிக்க வேண்டும் போல
கோபம் வந்தாலும்
ரசிக்காமல்
இருக்க முடிவதில்லை
குழந்தைகளின்
அடத்தைப் போலவே
மழையின்
அடத்தையும்

ஆனால்
குழந்தைகள் ஒருபோதும்
கொல்வதில்லை
குழந்தைகளை
மழையைப் போல!

- ஆதிரா முல்லை

4 comments:

  1. மழைநீர் மேலாண்மை செய்யாத மனிதர்களால் தான்மா பிரச்சனையே..மழை என்ன செய்யும்..

    ReplyDelete
  2. கவிதை அருமை...ஒப்பீடும் ரசனையுடன்..

    ReplyDelete