Friday, April 7, 2017

சூறையாட்டு......



ஒரு காதல் சூறயாடப் படுகிறது
இனி இது போல 
எப்போதும் நடந்துவிடக் கூடாது
என்று
வார்த்தைகள் தூவுகின்றன
வாய்கள் எல்லாம்

ஜன சந்தடியில்
கசங்கி, நிறமிழந்து
மெல்ல மெல்ல மடியும்
மயானப் பாதை
மலர்களைப் போல
மறுநாளில் அல்லது அடுத்த நாளில்
அவ்வார்த்தைகள் மடிந்து விடுகின்றன
அக்காதலின் சமாதியோடு

மீண்டும் அதே போல
அடுத்தொன்று…..
அப்போதும்
வெவ்வேறு வண்ணங்களில்
தூவப் படுகின்றன
மயானப் பாதை மலர்கள்

கொஞ்சம் இடைவெளி விட்டு
இன்னொன்று…..
அப்புறம் மற்றும் ஒன்று
அப்புறம் வேறு ஒன்று
இப்படியே தொடர்கிறது….
காதல் சூறையாடல்களும்……
தூவப் படும்
மயான மலர்களும்
சாதிக் கடவுளர்களுக்காக..

ஒவ்வொரு காதல்
சூறையாடப் படும் போதும்
காதலர் பெயருக்கேற்ப
மாற்றம் பெறுகின்றன
சூறையாட்டின் பெயர்களும்
சாதிக்கொலை
கெளரவக் கொலை
ஆணவக் கொலை
என்று……

நல்ல வேளை
முதல் காதலர்
ஆதாம் ஏவாள் காலத்தில்
நாம் இருந்திருக்கவில்லை
இருந்திருந்தால்
சூறையாடி இருப்போம்
ஏதேனும் ஒரு பெயர்
வைத்து
அந்தக் காதலையும்!

- ஆதிரா முல்லை.

(கவிதை உறவு மாத இதழில் இடம்பெற்றது.
நன்றி கவிதை உறவு)

6 comments:

  1. பாராட்டுகள் பாராமுகம் ஏமாற்றுகிறது

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம். தாங்கள் அழைத்தபோது தேர்வு மேற்பார்வை. பத்து நாட்களாகக் காய்ச்சல் வேறு. சந்திக்க ஆர்வம் அதிகமாக இருந்தும் வெய்யிலின் அச்சுறுத்தலால் வர இயலவில்லை. வருகிறேன் என்று கூறவும் இயலவில்லை. வரவும் இயலவில்லை. எப்படிச் சொல்வது என்று புரியாமல்...... என் கொடுப்பினை அவ்வளவுதான் என்று வருந்தினேன்...

      Delete
  2. "ஒவ்வொரு காதல்
    சூறையாடப்படும் போதும்
    காதலர் பெயருக்கேற்ப
    மாற்றம் பெறுகின்றன
    சூறையாட்டின் பெயர்களும்
    சாதிக்கொலை
    கெளரவக் கொலை
    ஆணவக் கொலை
    என்று…" என
    நெஞ்சைத் தொட வைக்கும் வரிகள்!

    ReplyDelete