Saturday, October 28, 2017

அச்சமும் பொறுப்புணர்வும் நச்சரிப்பு செய்கின்றன







பல நிகழ்வுகளில் பங்கு பெறுகிறோம். சில நிகழ்வுகள் மன மகிழ்வைத் தருகின்றன. சில நிகழ்வுகள் இது போலொரு நிகழ்வுக்கு இனி போகவே கூடாது என்னும் உணர்வைத் தருகின்றன. சில நிகழ்வுகள் மனத்துக்கு நெருக்கமாக வந்து இதமானதொரு உணர்வையும் நெகிழ்வையும் ஏதாவது செய்தாக வேண்டும் என்னும் நச்சரிப்பையும் கொடுத்துக் கொண்டிருக்கும்.
            மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் முதியோர் இருக்கும் அன்பகம் என்னும் காப்பகத்தின் ஆண்டு விழாவுக்குத் தொடர்ந்து ஐந்து அண்டுகளாகக் குத்து விளக்கு ஏற்றி வைத்து விழாவைத் தொடங்கி வைத்து வாழ்த்துரையும் வழங்கும் வகையில் சென்று கொண்டிருக்கிறேன்.
             அச்சமும் பொறுப்புணர்வும் கூட்டக் கூடிய ஒரு நிகழ்வு சென்ற ஆண்டு ஆண்டு விழாவில் அரங்கேறியது. ஆண்டு மலர் வெளியிட்டார்கள். பிரித்துப் பார்க்கிறேன் என் புகைப்படத்தைப் போட்டுத் துணைத்தலைவர் என்று அச்சிடப் பட்டிருந்தது. திடீரெண்டு அந்த அறிவிப்பை அன்பகத்தின் நிறுவனரும் செயலாளருமான டாக்டர் வீரமணி செய்தார்.
              இந்த ஆண்டு, நீதியரசர் ச. மோகன் தலைமையில் நேற்று நடந்த விழாவில் உடல்நிலை சரியில்லாத நிலையில் நீதியரசர் வந்து கலந்து கொண்டார். தொலைவு ஒன்றரை மணி நேர பயணம். நீதியரசரை நிகழ்வுக்குச் செல்ல வேண்டாம் என்று நானும் அலைபேசியில் அழைத்துச் சொன்னேன். ஆனால் வந்த அவர் பேசும் போதும் அதைக் கூறி இந்த மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் நான் நீதியாக நடந்து கொள்ளவில்லை என்றால் நான் இருந்து என்ன பயன் என்று உணவுப் பூர்வமாக உரத்த குரலில் சிம்மம் போல கர்ச்சித்துக் கூறினார்.
           அவர் பேச்சையும் செயலையும் (உடல்நிலை அவ்வளவு மோசமாக இருக்கும் போது அவ்வளவு தொலைவு பயணம் செய்து வந்தது) 
எதாவது செய்ய வேண்டும் என்னும் எண்ணம் மேலும் மேலும் எழுவதை எத்தனை முறையில் மனத்தை மாற்றினாலும் மாற்றவே முடியவில்லை. என்னால் முடிந்த உதவியை ஆண்டுதோறும் செய்தும் வருகிறேன். அது போதாது.... இன்னும் இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று மனம் தொடர்ந்து நச்சரித்துக் கொண்டே இருக்கிறது.

          அரிமா டாக்டர் ரூபி மனோகரன், அரிமா டாக்டர் மணிலால், அரிமா சந்தானம், கலைமாமணி ஏர்வாடி இராதாகிருஷ்ணன், கவிஞர் சிந்தை வாசன் முதலான சான்றோர் பலர் கலந்து கொண்ட நிறைவான விழா.
      நடிகர் கிங்காங்கும் போண்டா மணியும் ஆண்டுதோறும் வந்து அக்குழந்தைகளுக்காகக் கலை நிகழ்ச்சி நடத்துகின்றனர்.
                 அன்பகம் நிறுவனர் டாக்டர் வீரமணி அவர்களும் ஊனமுற்றவர். அவரும் அவரது குடும்பத்தாரும் இத்தொண்டிற்காகவே நலமாக வாழட்டும் என்று வாழ்த்தி வந்தேன். வாழ்த்துகிறேன்.

No comments:

Post a Comment