Sunday, April 4, 2010

இணையத்தில் பொறித்திடுவோம்.....






  http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcRD-jwpKmFAmaCPZao69GDLL2eNmGnoP5BwAi8Cx6h7p41UsI_5Cw&t=1
கலைபயின்றேன் என்றாலும் கட்டுரைக்கும் வன்மையிலேன்! 
அலைகளென ஆசைகளைத் தேக்கிவைத்து ஏங்குகிறேன்!  
சரம்சரமாய் நினதுபுகழ் உலகுக்குப் பாய்ச்சிவிட  
கரம்குவித்தேன் உனதுமகள் வரந்தருவாய் எந்தமிழே!
 
நிறையறிவுச் சிந்தையிலேன்; நீடுபுகழ் தமிழமுதைச் 
சிறிதளவு பருகியதன் போதையினால் துடிக்கின்றேன்;  
வரைகடந்து வான்கடந்து என்மொழிதான் உதிக்கின்ற 
பிறைவடிவம் பெற்றதென்று கூத்தாடிக் குலவையிட!

எந்தமிழே! நாவசைத்து நீமொழிந்த முந்துமொழி 
தாய்மொழியே! மற்றந்த பிந்தைமொழி எல்லாம்உன் 
வழிவந்த தங்கைமொழி; தம்பிமொழி; எனஉலகச்
சந்தையிலே போற்றிவிடும் நிலையதுதான் பெறவேண்டும்!



வாழ்முறையை வகுத்தளித்த தொல்ப்பாட்டன் இலக்கணத்தை;         
நூல்முறையாம் எம்தாத்தர் சங்கத்துப் பனுவல்களை;  
என்னினத்து மூதாட்டி ஒளவையவள் ஆக்கங்களை;  
எண்ணில்லா மொழிகண்ட வள்ளுவனின் தமிழ்மறையை;

கம்பநாடன் கனிரசத்தை; தமிழ்ப்புலவன் தனக்கென்றும்
தெம்புதரும் காப்பியமாம் சிலம்பதனை; இடும்! இடும்!
என்றதிரும் போர்ப்பரணி முழக்கத்தை; ஊன்கலந்து
தெவிட்டாது இனிக்கின்ற தேவார; வாசகத்தை;
http://img1.123tagged.com/en/virtualromance/16.gif
வாடும்பயிர் வாட்டமதைப் போக்குகின்ற அருட்பாவை;
ஊடும்சாதி பேதங்களைத் தகர்த்தெறிந்த பாரதியை;
கூடிநின்ற தாசனவன் பகுத்தறிவுச் சிந்தனையை;
பாடிப்பாடி ஆவதென்ன? பழங்கதையா பசிதீர்க்கும்?



கூட்டின் இரைதேடும் குருவியதாய் பறக்கின்றான்!
அறிவுத்தேட் டில்எந்தமி ழன்எங்கோ சென்றுவிட்டான்!
சிறுநோட்டில் இவைஎழுதி நாட்டார் காண்பதுண்டா?
புதுப்பாட்டை இணையத்தில் பொறித்திடுவோம் அவன்பெருமை!

ஏர்பிடித்த ஊர்மகன்தான் எந்தமிழன்! தரணியிலே
நூல்பிடித்த கைகளெல்லாம் ஏங்குகின்ற சீர்பெற்றான்!
ஊர்ப்புறத்துச் செப்பேட்டில் எழுதுவதா அவன்பெருமை?
பார்படிக்க இணையத்தில் பொறிப்பதன்றோ பீடுதரும்!


இணையதளம் எத்தனையோ இருந்தாலும் தமிழ்த்தளமே 
இனியதளம் எனஉலகோர் ஏற்றிடவே நம்முன்னோர் 
ஆதித்தமிழ் வித்தைகளும் இன்றுள்ளோர் சேர்த்துள்ள 
புத்தமுதம் அத்தனையும் இணைத்திடுவோம் இணையத்தில்!





ஆதிரா..

10 comments:

  1. கவிதை அற்புதம் ஆதிரா! தங்கத்தட்டில் வைத்த சங்கத்தமிழாய் ஜொலிக்கிறது...!!!

    ReplyDelete
  2. தங்கள் மனம் நிறைந்த பாரட்டிக்கு என் நெஞ்சார்ந்த நன்றி கவிதன்..

    ReplyDelete
  3. ஆகா! அருமையான கவிதை!
    அரசனாக இருந்திருந்தால் இதோ பதினாயிரம் பொற்காசுகள் என்று சொல்லியிருப்பேன்!
    அற்ப மானிடனென்பதால் அருமையான கவிதை என பாராட்டுகிறேன்!
    எத்தனை செய்திகள்! அருமை!

    ReplyDelete
  4. கவிதை அருமையாக இருக்கின்றது... பிரிய தோழியே, உங்களைப் போன்றவர்கள் கவிபாட இருக்கும் வரை மெல்லத் தமிழ் இனிச்சாகா...

    ReplyDelete
  5. கவிதை அருமை மேடம்

    ReplyDelete
  6. சரியான கருத்து திரை கடல் ஓடியும் தகவல்களை தமிழில் கொண்டு வர வேண்டும் சூப்பர்

    ReplyDelete
  7. திரு அண்ணாமலை அவர்களே..
    பதினாயிரம் பொற்காசுகள் நிலையில்லாத்து என்பதை அறிந்த த்ருமிதான் இவள்.. அதையும் விட தங்கள் பொன்னான இதழ்கள் (விரல்கள்) உதிர்த்த பாராட்டு மொழி அழிவில்லாதது..ஆழ்மனதில் இருந்து வருவது... இதைவிட இந்த தருமிக்கு என்ன வேண்டும்,, வந்து வாழ்த்து சொன்ன இறையனாரே..நெஞ்சார்ந்த நன்றி தங்கள் பேராதரவுக்கு..

    ReplyDelete
  8. உங்களைப் போன்றவர்களீன் ஊக்கமே என்னை ஏதோ சிறு பிள்ளைத்தனமாகக் கிறுக்க வைக்கிறது.தோழி.. மிக்க நன்றி.. தங்கள் பாராட்டுக்கு...
    நல்ல தமிழை வாழ வைப்போம்...தோழி..நன்றி மீண்டும்...

    ReplyDelete
  9. தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி சம்ஸ்..

    ReplyDelete
  10. அன்பு மணி..
    தொடரும் தங்கள் பாராட்டுக்கு, ஊக்கத்திற்கு என் மனமார்ந்த நன்றி...

    ReplyDelete