Saturday, May 1, 2010

திராவிட விருட்சம்..!





ஆலம் விழுதினைப்போல் தொங்குகின்ற
மீசையிலே ஊசல்கட்டி ஆடிடவா?

தொங்கினாலும் தூங்காது ஏங்குமுந்தன்
திராவிடத்துக் கொள்கைகளைப் பாடிடவா?


இமயத்தைக் கவிழ்த்தாற்போல் இறங்கிவிட்ட
தாடியிலே பனிச்சறுக்கு ஆடிடவா?


கவிழ்ந்தாலும் ஏற்றம்சொன்ன போராட்டப்
போர்வாளாய்ப் புதுமுழக்கம் செய்திடவா?


வெண்தாடி பாய்ச்சிநின்ற சீர்திருத்த
வெளிச்சத்திலே செண்டாடி வீசிடவா?


வெளுத்தாலும் வெளுக்காத தன்மானப்
பேருணர்வை தமிழேற்றிப் பேசிடவா?

முடுக்கிவிட்ட இயந்திரமாய் நடுங்குமுந்தன்
கரம்பிடித்து தட்டமாலை சுற்றிடவா?


சொடுக்கிவிட்ட மேல்கீழாம் வருக்கவினை
விரட்டிவிட்ட சத்தியத்தைச் சாற்றிடவா?

சுருக்கம்கண்ட சதையினிலே துரும்பொளித்து
கிச்சுக்கிச்சு தம்பாளந்தான் ஆடிடவா?

கருக்கதனில் விடியாத விதவைதுயர்
விரட்டிஒளி யேற்றியதைப் புகழ்ந்திடவா?

முதுமையிலும் வீரநடைக் குதவியகைத்
தடியெடுத்துத் தேராக்கி உருட்டிடவா?

இளமைமன எரிதழலாம் தீயணைத்து
துயர்துடைத்த இன்பமதை ஏற்றிடவா?

வட்டமுகத்துக் க்ழகுதரும் கண்ணாடி
தனைஒளித்து கண்ணாமூச்சிஆடிடவா?


திட்டமிட்டு தெனைமரங்கள் தனையழித்து
குடிஒழித்த குணமதைதான் கூறிடவா?


விளையாட நினைத்தாலும் முடியாமல்
மலர்மேனி வெங்காயம் ஆனதையோ!!


திராவிடத்து விருட்சமிது செந்தமிழின்
சீர்த்திருத்த சிலையாகிப் போனதையோ!!




4 comments:

  1. பெரியாருக்கான உங்கள் கவியாடல் அருமை :)

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி பாலன்..

    ReplyDelete
  3. அருமையான ஆக்கத்திற்கு வாழ்த்துகள் அக்கா!

    ReplyDelete
  4. தங்கள் அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றி சிவா..என்றும் தங்கள் அன்பில்..இன்னும் எழுதத் துடிக்கும்..என்றும் அன்புடன்..

    ReplyDelete