Tuesday, October 30, 2012

விற்பனைப் பெண்ணின் மழைப்பயணம்




அலைகளில் கால் நனைக்கும்
குழந்தையின் மகிழ்ச்சியாய்
மழையில் 
சாலையின் அலையில் 
கால்நனைத்துச் 
செல்லும் பேருந்தில் 
தொடர்கிறது 
அவள் பயணம்

பயணத்தை வேகமாக
முன்னோக்கி நகர்த்துகின்றன
சாலையின் இருபுறமும்
சுவரொட்டியில்
நிஜமழையில்
குளித்துக் கொண்டிருக்கும் 
நடிகையும்

இரவில் அவளை 
ஒளியூட்டிக் காட்ட வேண்டி
பகலில் விழி மூடி ஓய்வெடுக்கும்
நியான் விளக்குத் தூண்களும்

செவிச் சுவர்களை
உரசியும் உரசாமலும்
பயணித்து வெளியேறுகின்றன
நடத்துநரின்
சீழ்க்கை ஒலியும்
பக்கவாத்தியம்
ஓய்ந்தவுடன் ஒலிக்கும்
வாய்ப்பாட்டாய்
‘டிக்கட் வாங்கும்மா’ என்ற
குளிரில் நடுங்கிய
குரல் ஒலியும்

எதிலும் பயணிக்காமல்
நின்றே இருக்கிறது
அவள் மனம்
நிறுத்தத்தில் இறங்கியதும்
அடர் மழையிலும்
வீடு வீடாகத்
தொடர வேண்டிய
விற்பனை பணியை
எண்ணி


8 comments:

  1. ம்ம்ம்ம் ..ரெம்ப ருமையான கவிதைங்க காவிதாயினி

    அந்த போஸ்டர் குளியல் நச்
    வரிகள் எல்லாம் ம்ம்ம் ..அருமை

    ReplyDelete
    Replies
    1. சுடச் சுடக் கருத்து. மகிழ்ச்சி. நன்றி செய்தாலி

      Delete
  2. தொடர்ச்சியாய் மீண்டுமொரு விற்பனைப் பிரதிநிதி
    ரசிக்கக் கூடிய வரிகளில்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சிட்டுக்குருவி

      Delete
  3. படத்தில் இருக்கும் பெண்ணின் கனவுகள் வரிகளில் வர, மாற்றுத்தளம் தர, இன்னும் முயன்றிருக்கலாமோ?

    ReplyDelete
  4. ஆமாம் அப்பாதுரை. கவிதை எழுதவேண்டும் என்று நினைக்காமல் ஏதோ கிறுக்குவது என்பது இதுதானோ.. கவிதைக்கு ஏற்ற படம் தேட பொறுமையில்லாமல் கிடைத்ததைப் பதிவிட்டேன். படம் என்னையும் கவர்ந்தது. எனக்கும் இந்த கருத்து தோன்றியது. அந்தப் படத்துக்கு அழுத்தமான கவிதை எழுதலாம். முயற்சி செய்யலாம்.

    ReplyDelete