இன்று மயிலை, பாரதிய வித்யாபவனில் உறவுச் சுரங்கம், பாரதிய வித்யாபவன், கிருஷ்ணா இனிப்பகம் மூன்றும் இணைந்து நடத்திய ‘சிகரத்தைத் தொட்ட சிவசங்கரி’ நிகழ்வில் விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேரா. முனைவர். வ.வே.சு அவர்களுக்குப் ‘படைப்புலகச் சிற்பி’ விருது வழங்கப் பட்டது. (மனம் நிறைந்த வாழ்த்துகள் ஐயா)
இந்நிகழ்வில் மருத்துவ மாமணி திரு. சொக்கலிங்கம் அவர்கள் ‘காக்க காக்க இதயம் காக்க’ என்னும் தலைப்பில் சிற்றுரை ஆற்றினார். சிற்றுரையா அது? ஊசியின் காதில் ஒட்டகத்தை நுழைத்தாற் போல பெரிய பயன் தரும் சிறிய உரை.
வாழும் பாரதி இல. கணேசன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். இந்திய நிலவறையில் காசுமீரம் பாகிஸ்தான் இரண்டும் எப்படி இடம்பிடித்துள்ளது என்ற நாற்பதுகளின் வரலாற்றை, ஏசுபிரான் சிலுவையில் மறிக்கவில்லை காசுமீரத்திற்கு வந்து காயத்திற்குப் பச்சிலைகளை எல்லாம் பயன்படுத்தி மருத்துவம் செய்து பிழைக்க வைத்து விட்டனர் என்று தாம் படித்த செய்தியைப் பகிர்ந்து கொண்டார்.
இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்ற வந்த வ.வே.சு. அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் சிறப்புரையும் சிரிப்புரையுமாகத் தந்து அரங்கத்தைத் தம் கட்டுப்பாட்டில் இருந்து இம்மியும் அசையாமல் இருக்கச் செய்தார். பேரா. வ.வே.சு. அவர்களின் உரையை ஒலிப்பதிவு செய்தேன். எப்போதும் முதல் வரிசையில் அமரும் வழக்கம் இல்லாததால் ஒளிப்பதிவு செய்ய இயலவில்லை. அந்த வருத்தத்துடன்,,,,,,,,,,
சில நிகழ்வுகளில் ஒருவரது உரை நன்றாக இருக்கும். அல்லது இருவரது உரை நன்றாக இருக்கும். ஆனால் இன்றைய நிகழ்வில் எல்லோருடைய உரையும் சிறப்புரைதான் தொகுத்து வழங்கிய பேரா.முனை. உலகநாயகி பழநி அவர்களின் உரை உட்பட........ இது ஒரு வரலாற்று மாலை
No comments:
Post a Comment