என் இரண்டாம் பெற்றோர்
**************************************
**************************************
2002 முதல் பதினான்கு ஆண்டுகள் எனக்கு நல்ல ஆசானாக மட்டுமல்லாமல் ஒரு தந்தையாக இருந்து நல்லது எது அல்லது எது என்று எப்போதும் கருணையோடு சுட்டிக் காட்டி வழிநடத்தியவர். பேராசிரியர் சா. வளவன் அவர்கள். என் இளமுனைவர் (M.Phil.), மற்றும் முனைவர் (Ph.D) இரு ஆய்வுக்கும் நெறியாளராக இருந்தவர். ஆய்வை மட்டுமன்றி சொந்த வாழ்விலும் ஒரு தந்தையின் கனிவோடு எப்போதும் ஆற்றுப்படுத்திவர். இரண்டு ஆய்வுகளிலும் முழு சுதந்திரம் கொடுத்த தகை சான்ற பேராசிரியர். எந்த குறுக்கீடும் ஒரு போதும் செய்தில்லை. “மேடையில் பேசுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் எழுதுங்கள். படைப்புகள்தான் காலத்தைக் கடந்து நிற்கும்” என்று எப்போதும் சொல்லிக்கொண்டே இருந்தவர்.
என்னுடய கட்டுரைத் தொகுப்பு நூலுக்கு “ஐயா வழக்கம் போல வாழ்த்துரை ஒரு நான்கு வரிகளில் தாருங்கள்” என்று கேட்ட போது “ஏன் நூல் தர மாட்டீங்களா? நான் பார்க்கக் கூடாதா?” என்று கேட்டு வாங்கி படித்தார். நான் அவரைப் படிக்க வைத்துத் தொந்தரவு செய்யக்கூடாது என்பதால் எப்போதும் நூலைத் தர மாட்டேன். வாழ்த்து மட்டும் கொடுங்கள் என்பேன். உச்சிதனை முகர்ந்தால் என்னும் கட்டுரைத் தொகுப்பு நூலுக்கு அணிந்துரை கொடுத்துள்ள ஐயா,
“நான் அவருக்கு இரண்டாம் பெற்றோர். இந்த நூலுக்காக அவரை உச்சி மேல் வைத்து மெச்சிப் பாராட்டி மகிழ்கிறேன்.” என்று எழுதிக் கொடுத்தார். இப்போது விழித்தாரைகளோடு நூறு முறைக்கு மேல் அந்த வரிகளைப் படித்து விட்டேன்.
“மயக்குறு மந்திரா மொழி” என்று தலைப்பை எழுதியதோடு,
“மழலையர் பேசுவதை மயக்குறு மந்திர மொழி என்பர். அவர்தம் மழலை பெற்றோர்க்கு ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்தும். அம்மொழியிலேயே ஆசிரியரும் பெற்றோர்க்கு வேண்டிய அறிவுரைகளையும் ஆக்கப் பூர்வமான செயல் ஈடுபாட்டினையும் கூறியிருக்கிறார். நூலின் நடை மயக்குறு மந்திர மொழிகளால் ஆனது என்பதையே இவ்வாறு குறிப்பிட்டேன்” என்று என் மொழி நடையை ரசித்த தந்தை அவர்.
என் பள்ளிப் பருவத்தில் ஒருபக்கம் எழுதிய தாள்களால் ஆன ரஃப் நோட்டைத் தைத்து கொடுப்பார் என் தந்தை. என் கல்வித் தந்தையும் என் ஆய்வுக் காலங்களில் கட்டுக் கட்டாகத் தாள்களைக் கொடுத்து “எழுத இதைப் பயன் படுத்துங்க. பேப்பர் விலைக்கு வாங்காதீங்க” என்பார். எப்போதும் நான் எழுதும்போதெல்லாம் தாள்களில் உங்கள் அன்பு முகத்தைப் பார்ப்பேன் ஐயா. இப்போதும் இனியும் என் எழுத்துகளைத் தாள்களில் வழியாக தாங்கள் ஆசிர்வதிப்பீர்கள்.
தொடர்ந்து உடனிருந்து பார்த்துக் கொண்ட என்னால் (ஒரு நாள் விட்டு ஒரு நாளாவது சென்று) என் விபத்துக்குப் பிறகு 20 நாட்கள் பார்க்க முடியவில்லை. 29/04/16 அன்று மனநிலையே சரியில்லை. ஆட்டோவில் சென்று பார்த்து விட்டு வந்தேன். உள்ளே நுழைந்தவுடன் “கை எப்படி இருக்கிறது? இந்த வலியோடு ஏன் வந்தீங்க?” என்றுதான் கேட்டார். எப்படி ஐயா இருக்கீங்க என்று கேட்டவுடன் குழைந்தையைப் போல ஒரு அழுகைக் குரலோடு வலது பக்கம் கால் மரத்து இருக்கும்மா என்றார். ஐயா தொட்டால் தெரியுதா என்று காலைத் தொட்டேன். தெரியுது. ஆனா அசைக்க முடியல” என்றார். பேசிக்கொண்டே கண்ணை அயர்ந்தார். மருத்துவருக்கு அழைத்துக் கேட்டார்கள். ஹீமோ கொடுத்தால் அப்படித்தான் இருக்கும் என்று மருத்துவர் கூறிவிட்டார். 2 மணிக்குப் பார்த்து விட்டு வந்துள்ளேன். அதன்பிறகு அவர் பேசிய வார்த்தை 6 மணிக்கு, மணி என்ன என்று அம்மாவிடம் கேட்டுள்ளார். ஆறு மணிக்கு எங்களையெல்லாம் ஆறாத துயரில் ஆழ்த்திச் சென்று விட்டார். எங்கள் பேராசிரியர். அவர் எங்களையெல்லாம் விட்டு எங்கும் சென்று விடவில்லை. சீரிய சிந்தனையாக, சொல்லாக, எழுத்தாக எப்போதும் எங்களை ஆசிர்வதித்துக் கொண்டே இருப்பார்.
மருத்துவ மனையில் தங்கியதைச் சொல்லிக்கொண்டே இருப்பார்; உங்கள ஐயா மறக்கவே மாட்டாரு; அவர்க்கு என்ன தோனிச்சோ…. உங்கள எப்படியோ கூப்பிட்டுப் பார்த்துட்டுப் போயிட்டார் என்று அம்மா சொல்லிச் சொல்லி அழும்போதுதான்…..…….. தாங்கவே முடியவில்லை.
No comments:
Post a Comment