Saturday, November 17, 2018

(ஜோ மல்லூரியின் மழையில்)


ஜோ மழையில் நனைந்தேன்.......
(ஜோ மல்லூரியின் மழையில்)
************************************************
காலையில் தெரியாத எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. நான் வணக்கம் என்று சொல்லி முடிக்கும் போது இந்தப் பக்கம் ஜோ மல்லூரி என்ற உற்சாகக் குரல். நான் என்னையும் அறியாமல் வாவ்வ்வ்வ்வ்வ்..... என்று உரத்துக் கூறிவிட்டு....... மகிழ்ச்சி வணக்கம் சொல்லுங்கள் என்றேன்.
அன்று நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தது அருமையாக இருந்தது. அங்கு சொல்லிச் செல்லும் வாய்ப்பு இல்லாமல் இருந்தது. நீங்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தீர்கள். பிறகு அழைத்துப் பேசலாம் என்றால், நான் வெளியூர் பயணத்தில் இருந்தேன். அதனால்தான் தாமதமாகப் பேசுகிறேன். ஆரூர் தமிழ்நாடன் அவர்களிடம் உங்கள் எண் பெற்றேன். என்று பத்து நிமிடம் பேசினார். அதில் பாராட்டே மிஞ்சி இருந்தது.
இப்படிச் சொல்லி முடித்தார்.
மேடையில் உள்ளவர்களை அறிமுகம் செய்யும் போது பலரும் எழுதிக்கொடுப்பதைப் படித்து விட்டுப் போய்விடுவார்கள். நீங்கள் ஒவ்வொருவரையும் பற்றி நன்கு உள்வாங்கிக் கொண்டு அவர்களது சிறப்புகளைச் சொல்லி, மனமாறப் பாராட்டி அறிமுகப் படுத்தினீர்கள். அதில் ஒரு ஆழமான அன்போடு கூடிய ஈடுபாடும் ரசனையும் இருந்தது. என்று பாராட்டினார்.
அவரது பேச்சுக்கு அருகில் நானெல்லாம் நிற்கக் கூட முடியாது என்பதை நானறிவேன். அப்படிப் பட்ட ஆளுமை நம்மைப் பாராட்டுவதுதானே நமக்கு உற்சாகம் தரும். 16 நூல்களின் ஆசிரியரும் கவிஞரும் ஆகச் சிறந்த பேச்சாளரும் நடிகரும் இயக்குநரும் என்று பல்கலை வித்தகர் ஜோ மல்லூரி அவர்கள்.
அதிகாலையில் கொடுத்த உற்சாகத்திற்கு நன்றி ஜோ அவர்களே.

திரைப்பட நடிகராகப் பலரும் ரசித்த ஜோ மல்லூரி அவர்களை நான் இலக்கியவாதியாக அதிகமாக ரசித்துக் கொண்டிருக்கிறேன். திரைப்படத்தைப் பற்றி சொன்னாலும்,

புதுக்கவிதைக்கும் மரபுக்கவிதைக்கும் இடையிலொரு பொதுக்கவிதை பாடும்
மதுக்கவிஞர். மதுக்கவிஞர் என்றால் போதையில் தள்ளாடும் கவிஞர் அல்லர். மது போல மயக்கும் மதுரக் கவிதை பாடுபவர். ”வெற்றி பெறும் வரை மனதை யுத்த நிலையில் வை. வெற்றி பெற்ற பின் மனதை புத்த நிலையில் வை” என்று கவிதை பாடும் கும்கி யானை
மேடைப் பேச்சிலோ பட்டத்து யானை
நல்லதோர் தமிழ் செய்யத் தொடங்கி பெண் பேதை அல்ல மேதை என்று வரிசையாக 16 நூல்களைத் தமிழுக்குச் செய்து தந்தவர். அமிர்தா என்னும் அழகியோடு (நூலின் பெயர்) நீங்கள் இருந்தது போதும். இது நெய் ஊற்றும் நேரம் (இதுவும் நூல்). ஆம் பேரா. நளினி தேவிக்காக அன்பு நெய் ஊற்றும் நேரம். நடிப்புக் கல்லூரி, பேச்சுக்கல்லூரி, ஜோ மல்லூரி அவர்களே வருக!

என்று அவரது கவிதையையும் படைப்புகளையும் முன்வைத்து அவரை அறிமுகப் படுத்தியது மகிழ்ச்சியாக இருந்தது.


எப்போதும் அறிமுகம் இல்லாதவர்களோடு  ஒளிப்படம் எடுக்கவும் நானாகச் சென்று பேசவும் ஒரு தயக்கம் என்னிடம் உண்டு.  உங்களோடு ஒளிப்படம் இல்லை. அதனால் இந்தப் படம் இருக்கேஎனக்குச் சிறப்பு செய்வதை ஓரக்கண்களால் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள் ஜோ அவர்களே.... நன்றி

No comments:

Post a Comment