Saturday, November 17, 2018

நன்றி ப. கி. பொன்னுசாமி ஐயா

#நன்றி ப. கி. பொ. ஐயா


1999 ல் முதுநிலைத் தமிழாசிரியராகப் பணியேற்று சென்னை வந்து குடிபுகுகிறேன். பள்ளியில் மாணவர் மன்றத் தேர்வு நடத்துவது வழக்கம். மாணவர் மன்ற இதழான நித்திலக் குவியல் இதழ் தொடர்ந்து பள்ளிக்கு வரும். அந்த ஆண்டுத் தேர்வு குறித்துப் பேசிக்கொண்டிருக்கும் போது இதழுக்குப் படைப்புகள் அனுப்புங்கள் என்று அதன் தலைவர் புலவர் ப. கி. பொன்னுசாமி அவர்கள் தொலைபேசியில் சொன்னார்.
அப்போது நான் படைப்பாளி அல்லள். ஆனால் ஐயா கேட்டுவிட்டார்களே என்று வள்ளுவ வாழ்த்து என்னும் தலைப்பில் ஒரு கவிதை எழுதி அனுப்பினேன். அதுதான் என் முதல் கவிதை. தொலைபேசியில் ஐயாவின் பாராட்டும் என் படைப்புகளும் தொடர்ந்தன. தொடர்ந்து பல கவிதைகளையும் கட்டுரைகளையும் தாங்கி நித்திலக் குவியல் என் இல்லம் வந்தது. ஆனால் ஐயாவை நான் நேரில் சந்தித்ததே இல்லை.
சமீபத்தில் கனடா உதயன் இதழாசிரியர் தமிழகம் வந்த போது அந்த வரவேற்பு விழாவில் ஐயாவைச் சந்தித்தேன். அழைப்பிதழில் பெயர் இல்லாமலும் சகோ. வா.மு.சே. திருவள்ளுவர் அவர்கள் என்னைப் பேசச் சொன்னார்கள். கனடா உதயன் ஐயா அவர்களைப் பற்றிப் பேசிவிட்டு (அவர் பற்றியும் எழுத வேண்டும். விரைவில்) என்னையும் ஒரு படைப்பாளி ஆக்கிய ப.கி. பொன்னுசாமி ஐயாவைப் பற்றிப் பேசினேன். ஐயாவுக்கு மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து நித்திலக்குவியலுக்குப் படைப்புகள் தாருங்கள் என்று பல முறை சொல்லிச் சென்றார்.
என் முதல் கவிதையை அச்சேற்றிய.... அப்படிச் சொன்னால் பொருந்தாது. அச்சேற்றுவதற்காக என்னைக் கவிதை புனைய வைத்த ஐயாவுக்கு என் இதயமார்ந்த நன்றிகள்.

No comments:

Post a Comment