Monday, October 8, 2012

என்னோற்றாள் தமிழ்த்தாய்!!

அருட்தந்தை சேவியர் தனிநாயக அடிகள் 



உலகத்துத் தமிழர்க்கு ஆய்வரங்க அமுதை
      உணர்வோடு உண்பித்த தாயே நீதான்
பழகித்தான் பார்த்தவரும் மறக்கின் றாரே
      பண்பாட்டுத் தமிழென்று பகர்வ தற்கு
கலகத்து மாநிலத்து வணஅடிகள் நீயோ
      கனித்தமிழைப் பாய்ச்சுகின்றாய் கழனி தோறும்
கழகங்கள் கண்டவர்கள் ஆய்வரங்கின் இறுதி
      வரிசையிலே நிற்கின்றார் முதல்வன் நீயே!

பன்மொழிகள் கற்றவன்நீ பார தி(தீ)போல்
      படித்ததிலே தமிழ்ஒன்றே பண்பாடா டென்றாய்
ஒண்மொழியாம் திருக்குறளை மலாய்க்கு, சீன
      மண்மொழிக்கு மொழிபெயர்க்க மூலம் ஆனாய்
பன்னாடு படையெடுத்தாய் தமிழின் தூதாய்
      பழந்தமிழைப் பாரெல்லாம் பாய்ச்சி விட்டாய்
இந்நாடு மாநாடு காண்பதெல்லாம் சேவை
      இனியவண தனிநாயக உன்னால் தானே!

கற்பிளந்து மலைபிளந்து சிலைகள் செய்த
      கவின்கலைகள் இழப்பதா வாழ்வு என்றாய்    
சொற்பொழிந்து சுவைபொழிந்த கவிகள் எல்லாம்
      சிங்களத்தைப் படிப்பதால் மாளும் என்றாய்
தொழுகையிலே மொழியுரிமை வேண்டச் சொன்னாய்
      தொடர்ந்துபெற தமிழினத்தைச் தூண்டச் சொன்னாய்
உழுதபயன் களம்சேர்ந்த தின்று நாங்கள்
      உயிர்க்காற்றை உன்னாலே சுவாசிக் கின்றோம்.

தொண்ணூற்று ஒன்பதுபூ சொன்ன பாட்டின்
      தொல்குறிஞ்சி காண்கின்றாய் ஹவாய் மண்ணில்
பண்ஊற்றால் போற்றுகின்றாய் வான ஒலியில்
      பைந்தமிழின் தேர்ப்பாகன் பார தியை
கண்ணூற்றுப் பொழிகின்றாய் திருவாச கத்தில்
      கனித்தமிழால் கசிந்துருகும் சேக்கி ழாரால்
என்னோற்றாள் தமிழ்த்தாய்தான் யாழ்ப்பா னத்து
      எழிலார்ந்த நெடுந்தீவில் நீஉ திக்க!

     
     
       



(இக்கவிதை இம்மாதம் பிரான்சில் நடைபெற்ற,
 அருட்தந்தை தனிநாயக அடிகளாரின் 
நூற்றாண்டு விழா  மலரில் இடம்பெற்றது.)




     

8 comments:

  1. nalla kavithai!

    nalla ullathai ariya seythamaikku-
    vaazhthukkal....

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சீனி. தாமதமான நன்றி நவிலலுக்கு மன்னிக்கவும்.

      Delete
  2. அருமையாக உள்ளது கவிதை இலக்கியச் சாரால்
    இதமாக பதமாகத் தூவக் கண்டேன் !!!!...வாழ்த்துக்கள்
    மென்மேலும் கவி சிறக்க .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அம்பாளடியாள். தாமதமான நன்றி நவிலலுக்கு மன்னிக்கவும்.

      Delete
  3. இவரைப் பற்றி அறியேன். அறிமுகத்துக்கு நன்றி.
    ஈற்றுப் பதினாறு அடிகள் அற்புதம். தமிழ் விளையாடுகிறது தாயே உங்கள் தட்டச்சில்.

    ReplyDelete
    Replies
    1. பிழைகள் இருப்பின் சுட்டிக்காட்டுவது நட்புடைமை. உலகத்தமிழ் மாநாட்டின் தாய் என்று இவரைக் கூறலாம். இவர்தான் முதன் முதலில் நடத்தியவர். நன்றி அப்பாதுரை.

      Delete
  4. 'வண அடிகள்' என்றால் என்ன?

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக காடு என்னும் பொருள் அல்ல. ஆங்கிலத்தில் Reverant என்பதை Rev. என்று எழுதுகிறார்களே அது போல வணக்கத்திற்குரிய என்பதன் முன்னிரு எழுத்துகளை வண என்று பயன்படுத்தியுள்ளார்கள் என்று நினைக்கிறேன். இது ஊகம்தான். அவர் பெயரின் முன்னொட்டாக இது உள்ளது.

      Delete