Friday, January 25, 2013

மு.இளங்கண்ணனார் - இரங்கற்பா


திருக்குறளாய் வாழ்ந்திட்டார் வீதி யெங்கும்
            திறமான அறிவியலைத் தெளித்து விட்டார்
செறுக்கில்லா தன்னடக்கம் கொண்ட தாலே
            செம்மாந்து நிற்கின்றார் சிகர மாக
மறக்கின்ற பணியாசெய்தா? மக்க ளெல்லாம்
            மதிக்கின்ற கீதைக்குக் காதை செய்தார்
விரிக்கின்ற சூரியனாய் இலக்கி யத்தை
            விலாசமிட்டு வையமெங்கும் பரப்பி விட்டார்

தெள்ளுதமிழ் படித்துவந்தார் தேடித் தேடித்
            தேன்மலராய்க் கவிமலர்கள் பூத்து வந்தார்
சொல்லையிலே புரியாத புள்ளி யியலுக்
            ககராதி புதுத்தமிழில் ஆக்கித் தந்தார்
துள்ளலிடும் அருவிகளின் ஓட்டம் போல
            தூயகுறள் குழந்தைகளின் நெஞ்சில் வார்த்தார்
அல்லிமலர் சிரிப்பெடுத்து இதழில் வைத்தார்
            அனல்மூடித் தீய்ந்ததம்மா அறத்துப் பாலும்

பனைவெல்லத் தமிழுக்குப் பாகாய் மேலும்
            பாங்கான அறிவியலை இனிக்கத் தந்தார்
நனைந்தால்தான் உடல்நடுங்கும் ஐயா நாங்கள்
            நனையாமல் நடுங்குகின்றோம் கையற் றேங்கி
சுனைவற்றிப் போனபின்பு துடிக்கும் மீனாய்
            சுருண்டபடி கிடக்கின்றோம் நெஞ்சம் இற்று
மனைமக்கள் தவிக்கின்றோம் ஐயா நீங்கள்
            மறுபடியும் வருவீரோ தமிழுக் காக!



(இக்கவிதை 19.01.13 அன்று பன்ருட்டி ச. இராமச்சந்திரன். மாவீரர். பழ. நெடுமாறன் 
தலைமையில் நடந்த அறிவியல் தமிழறிஞர்.திருக்குறள் செல்வர். முனைவர். 
மு. இளங்கண்ணனார் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் பாடிய இரங்கற்பா)


No comments:

Post a Comment