Wednesday, March 13, 2013

பொசுக்கிடும் உறுதி யாக!




சாய்ந்ததோ தளிரின் வாழை
            சரிந்ததோ இளைய ஈழம்
ஓய்ந்ததோ உயிரின் ஓசை
            ஒடிந்ததோ ஆலின் விழுது
ஆய்ந்ததோ தந்தை வீரம்
            அகத்தினில் உளதோ என்று
பாய்ந்ததோ குண்டு மாரி
            பாலச் சந்திரன் மார்பில்

பூயிலை துளிர்க்கும் போதே
            பூகம்பம் கண்ட தம்மா
வாயினில் ரொட்டி தந்து
            வன்கொலை கொண்ட தம்மா
சேயினைச் சுட்டுக் கொன்ற
            செறுப்பினன் சிங்க ளத்து
நாயிடம் நட்பு கொண்ட
            நரியினம் நசிந்து போக!

மாண்டிடப் பிறந்தா யாநீ
            மன்னவன் தமிழீ ளத்தை
ஆண்டிடப் பிறந்தா யப்பா!
            ஆண்மகன் இல்லான், வீரம்
மாண்டிட்ட பேடி யைப்போல்
            மாய்த்தனன் மலரும் மொட்டை
தோண்டிய குழியில் இட்டு
            தொலைத்தனன் ஈழ வேரை

நீதியும் இல்லான் போரின்
            நியதியும் அறியான் பொல்லாச்
சாதியின் தலைவன் நீசன்
            சிங்கள ராஜ பட்சே
நாதியில் நாயாய், நட்ட
            நடுநிசிப் பேயாய், வெய்யோன்
வீதியில் நெளியும் புழுவாய்
            விதித்திட சாப மிட்டேன்

சொற்குற்றம் இழைத்த போது
            சொல்லினால் ஊரைச் சுட்ட
கற்பினள் வாழ்ந்த மண்ணின்
            கண்ணின்நீர் விடுக்கும் சாபம்
ர்குற்ற மற்ற பாலன்
            ஒருவனைச் சுட்ட உன்னை
போர்க்குற்ற வாளி ஆக்கி
            பொசுக்கிடும் உறுதி யாக!


(இந்தக் கவிதை 17/03/13 நாளிட்ட மாலை முரசு நாளிதழில் வெளியானது. நன்றி மாலை முரசு.)
  




12 comments:

  1. Replies
    1. மிக்க நன்றி சீனி. மனத்தில் ஆழத்தில் அழுத்தமாக வேதனை

      Delete
  2. உணர்சி பொங்கும் வரிகள்! ஒருநாள் நியாயம் கிடைக்கும்! பொறுத்திருப்போம்!

    ReplyDelete
    Replies
    1. பொறுத்திருப்போம். நன்றி சுரேஷ்

      Delete
  3. கண்ணகி மண்ணில் ஒலித்த கருஞ் சாபம் போல்
    இன்னொரு சாபத்தினை நான் இங்கு கண்டேன் !
    வார்த்தைத் தீ எடுத்து வடிவாக இட்ட சாபம் இது
    தோற்று விடாதடி என் தோழி :(இன்னும் கொஞ்சம்
    தான் காத்திருப்போம் கவலை வேண்டாம் .கவி
    தந்த உள்ளத்துக்கு என் நன்றிகள் பல கோடி ............

    ReplyDelete
    Replies
    1. ஆம் தோழி. இது இன்னொரு சுடு சாபம். உணர்ச்சியான கருத்திடல். நன்றி தோழி.

      Delete

  4. வணக்கம்!

    பொசுக்கிடும் உறுதி யாக!
    பொங்கிய கண்ணீா் வெல்லும்!
    நசிக்கிடும் கொடியோர் மாய
    நம்படை திரண்டே ஓங்கும்!
    பசித்திடும் வயிற்றோ[டு இங்குப்
    பயிரிடும் தமிழா் வாழ்வை
    அசைத்திட ஒருவன் உண்டோ?
    ஆதிரா! தமிழின் தோழி!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. எப்போதும் கவிதையால் கருத்திடும் உங்கள் உத்தியை மிகவும் ரசிக்கிறேன் கவிஞர். பாரதிதாசன்.

      Delete

  5. பாய்ந்ததோ குண்டு மாரி
    பாலச் சந்திரன் மார்பில்

    இந்த அடி
    பாய்ந்ததோ குண்டு மாரி
    பாலச்சந் திரன்தன் மார்பில்
    என்று வந்தால் யாப்பு இனிப்பாக இருக்கும்

    அல்லது

    பாய்ந்ததோ குண்டு! பால
    சந்திரன் மார்பில்! ஐயோ!

    என்றும் எழுதலாம்

    ReplyDelete
    Replies
    1. மாற்றிவிட்டால் போகிறது. தாங்கள் யாப்பு மன்னன் சொன்னால் தடையேது. மாற்றுகிறேன். அழகாக திருத்திச் சொன்னமைக்கு நன்றி.

      Delete
  6. வேதனை பீறிட்டு கிளம்புகிறது .
    கண்டபடி சாபம் இடுகிறது மனம் - காட்டிக் கொடுத்த கருங்காலிகளை .

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சிவா. ஆறவே இல்லை. வருகைக்கு நன்றி சிவா. நலமா?

      Delete