மறத்தல் தகுமோ
****************************
****************************





அந்த ஞாயிறை (08/09/19) மறத்தல் தகுமோ! அது முறையோ! அது இயலுமோ!
வழக்கறிஞரும் நாடறிந்த நற்றமிழ்ப் பேச்சாளருமான திருமதி சுமதி அவர்கள் நிறுவியுள்ள S Foundation சார்பில் மறத்தல் தகுமோ என்னும் பெயரில் பேச்சுப் போட்டி மயிலாப்பூரில் உள்ள பி.எஸ்.மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முன்றாமாண்டில் அடியெடுத்து வைத்துள்ள இவ்வமைப்பு நாடு காக்கும் நற்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட இராணுவ வீரர்களின் கடமையையும் தியாகத்தையும் போற்றி அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் வண்ணம் தொடங்கப் பட்டது.
கலை அறிவியல், மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்காக ஆண்டுதோறும் நடைபெறும் விழாவில் இவ்வாண்டு “கார்கில் 20 ஆண்டுகள்” என்னும் தலைப்பில் பேச்சுப் போட்டி நடைபெற்றது. தமிழ் ஆங்கிலம் இருமொழிகளிலும் நடைபெற்ற இப்போட்டிகளில் தமிழில் 270 மாணவர்களும் 100 (என்று நினைக்கிறேன்) மாணவர்களும் கலந்து கார்கில் போரையும் போரில் வீரதீரச் செயல் புரிந்த இராணுவ வீரர்களைப் பற்றியும் உணர்ச்சியாகப் பேசினர்.
ஒவ்வொரு அறையிலும் சுமார் பதினைந்து மாணவர்கள் பேசினர். ஒவ்வொரு பதினைந்து பேருக்கும் ஒரு தமிழறிஞர் ஒர் இராணுவ அதிகாரி என்று இருவர் நடுவராக பணியாற்றி இரண்டு மாணவர்களை அரையிறுதிச் சுற்றுக்குத் தேர்ந்து எடுத்தோம். என் அறையில் கார்கிலில் 30 ஆண்டுகள் பணியாற்றிய அப்படிச் சொன்னால் தகாது. தொண்டாற்றிய திரு ஸ்ரீகாந்த் அவர்களும் நானும் நடுவராக இருந்தோம். நாங்கள் மூன்று பேரைத் தேர்ந்து எடுத்தோம். திரு ஸ்ரீகாந்த மாணவர்களோடு தம் அனுபவங்களையும் இறுதிச் சுற்றில் வெற்றி பெற சில தகவல்களையும் பகிர்ந்து கொண்டார். நானும் அவர்களை ஊக்கப் படுத்தும் நோக்கில் சிற்றுரை ஆற்றினேன்.
பேச்சாளர் மணிமேகலை சித்தார்த் உள்ளிட்ட தமிழறிஞர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வு வழக்கறிஞர் சுமதியின் கம்பீரக் குரலில் வாழ்த்தோடும் வந்தே மாதரத்தோடும் தொடங்கியது. போட்டியாளர்களுக்கு செல்வி சிம்மாஞ்சனா மற்றும் வழக்கறிஞர் பாலசீனிவாசன் இருவரின் மிகவும் தெளிவான அறிவுறுத்தல்கள், தன்னார்வத் தொண்டர்களாக பாரதி பெண்கள் கல்லூரி மாணவிகளின் அருந்தொண்டு என்று கட்டுக்கோப்பாக அரங்கேறியது கால் இறுதிச் சுற்றுப் பேச்சுப் போட்டி. அரையிறுதிச் சுற்றையும் செவி மடுத்து வர வேண்டும் என்று விருப்பம் இருந்த போதும் மாலை 4 மணிக்கு ஒரு நிகழ்ச்சி (கன்னிமாரா நூலகத்தில் நூல்கள் வெளியீட்டு விழா) இருந்ததால் நல்ல மதிய உணவோடு அரையிறுதிச் சுற்றுத் தொடங்கும் போது நான் விடை பெற்றேன்.
இரண்டு மகிழ்வு இந்நிகழ்வில். ஒன்று இராணுவத்தைப் போற்றும் விழாவை இதுவரை எவரும் முன்னெடுத்ததாகத் தெரியவில்லை. அது பெரும் மகிழ்வு. மற்றொன்று இளைய தலைமுறைகளுக்காக நடத்தும் இந்த நிகழ்வின் பொறுப்பை இளைய தலைமுறையின் (சிம்மாஞ்சனாவின்) கரங்களில் ஒப்படைத்தது.
எப்போதும் இலக்கியம், கவியரங்கம், நூல் வெளியீடு என்று ஒரே மாதிரியான நிகழ்வுகளுக்கு இடையில் மனத்தையும் உடலையும் கூன் விலக்கி பெருமையோடு நிமிரச் செய்தது இவ்விழா.
திருமதி சுமதி மற்றும் சிம்மாஞ்சனா இருவருக்கும்
வாழ்த்துகளும் அழைப்புக்கு நன்றியும்
வாழ்த்துகளும் அழைப்புக்கு நன்றியும்
No comments:
Post a Comment