ஆன்றோர்களே! சான்றோர்களே! உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துள் ஆசிர்வதிக்கப் படட்டும்

Thursday, August 5, 2010

நாற்காலி தெய்வம்...
மரம் என்று
சொல்வார்கள் இதனை
பணக்குலைகள் விளைகின்ற
மரமென்ப தாலே!
தேக்கு என்று
சொல்கின்ற உண்மை!
இதனுள் பணம் தேக்கும் மர்மங்கள்
மறைந்துள்ளதாலே!

ஆயிரமாய் அறுவடையை
அள்ளிக் குவிப்பதுதான்
அலுவலக ஆசனத்தின்
அரும்பணிகள் என்றால்!
அலட்சியமாய் இலட்சத்தை
சாகுபடி செய்வதுதான்
அமைச்சரவை நாற்காலிக்
கமைந்திட்ட  தொண்டு!

தெய்வம் என்று
போற்றிடுவார் சிலபேர்!
பணப் படையல்
தனைஇட்டும் இதையடைய
விரதங்கள் ஏற்றிடுவர் பலபேர்!

நிலையாக வீற்றிருக்க
உயிர்ப்பலிகள் கொடுத்தும்
பூசனைகள் சாற்றிடுவர்
அரசியலில் உளபேர்!

வெள்ளைநிற ஆடையுடன் அமர்வர்! 
கருப்புப் பணம் வைக்கின்ற
இடம் தேடி அலைவர்!

நாற்காலி ஆட்டம்
கண்டு விட்டால்
பணத்தாணி அரைந்து
சரிசெய்யத் துடிப்பர்!

நாற்காலி தெய்வத்தின் காட்சி
பண பக்தியுள்ள பக்தருக்கே
கிட்டும் அருளாட்சி!.

No comments:

Post a Comment