Friday, November 9, 2012

கோடு....





மெல்ல முகம் பார்க்கும் 
சின்னக் குழந்தைகளின் 
பிஞ்சு விரல்களிடும் 
கோலம் எனும்
தண்ணீர்க் கோடு!!

கரையில்லாத அன்பைக்
காணாது கண்டுவிட்டால் 
விழியோரம் போட்டுவிடும் 
நெஞ்சத்தின் 
கண்ணீர்க் கோடு!!

பொங்கிவரும் காதலை 
பொய்முகம் காட்டி
மறைத்துவிடும் கன்னிக்கு 
நாணமெனும் 
பெருமைக் கோடு!! 

ஓயாது உழைத்தபின்னும் 
ஒட்டிய வயிறுகொண்ட
பாட்டாளி பரம்பரைக்கு 
பற்றாக் குறையென்னும்
வறுமைக் கோடு!!

சோர்வில்லா வீரனுக்கு 
சொந்தமண்ணாம் 
நாடுகாக்கும் சொப்பனமே 
வீரமென்னும் 
எல்லைக் கோடு!!

பொங்குதமிழ் கவிதைககு 
தொடைஎன்ற தளைஎன்ற
எதுகைமோணை இலக்கணமே 
முரண்என்னும் 
தொல்லைக் கோடு!! 

கட்டழகுப் பெட்டகத்தை
கட்டிலிலே முத்தமிட
மொட்டுவிடும்
முகையதுதான்
மழலைஎன்னும் 
மஞ்சக் கோடு !!

கட்டிலறை முத்துகளுள் 
ஒருமுத்து வரமென்றும் 
மறுமுத்து புறமென்றும் 
எறிவதுதான் 
பேதமென்னும்
வஞ்சக் கோடு!!

10 comments:

  1. கோட்டு கவிதை மிகவும் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. கோடுகளில் தெரிகிறது பல உண்மைகள்
    ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சிட்டுக்குருவி

      Delete
  3. கோடிட்ட இடங்களை நிரப்பியே
    வாழப் பழகிவிட்ட நமக்கு
    எதிர்வரும் கோடுகளை
    அருமையாகச் சொல்லி இருக்கீங்க சகோதரி...'

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மகேந்திரன்

      Delete

  4. கோடுகளைக் கொண்டே கவிதைக் கோலம் .அருமை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பாராட்டு எனக்கு ஒரு பெரிய அங்கீகாரம் ஐயா, நன்றி

      Delete
  5. சங்கடப்படுத்தும் கவிதை. வஞ்சக்கோடு வரிகள் பசுமரத்தாணி.

    ReplyDelete
    Replies
    1. இந்தத் தளத்திற்கு வந்து ஒரே மூச்சில் அத்தனை கவிதைகளுக்கும் (இவை கவிதைகள் இல்லை என்று எனக்குத் தெரியும்) கருத்துரை வழங்கியமைக்கு மிக்க நன்றி அப்பாதுரை.

      Delete