
சுங்கவரி பெற்றிடுவார் அவர்பிழைக்க எம்மினத்தார்!
இங்கிவரைச் சுமந்தவள்தான் தமிழ்மகளோ? என்செய்வோம்
தங்கிவிட்ட நெஞ்சமதின் தன்னலத்து வேரறுக்க?
ஆதிமொழி எம்மொழிதான் என்றுரைப்பார்! ஆலயத்தில்
வேதமொழி சொல்கின்ற வழக்கந்தான் மாறவில்லை!
பாதியிலே வந்தவளைப் பந்தியிலே உன்னைவிட்டு
வீதியிலே தாயைவிட்டு வேடிக்கைப் பார்கின்றார்!
செந்தணலில் குளிக்கின்றாள் எந்தாய் சந்தனத்தைப்
பூசுவதார்? தமிழர்களின் மணவிழாவில் தமிழ்இல்லை!
மணிவிழாவில் தமிழ்இல்லை! எம்மண்ணில் தவழ்கின்ற
மழலைகளின் பேசுமொழி தமிழ்என்றோ மறைந்ததையோ!
ஆட்சிமொழி தமிழ்என்பார் அங்கோர் சாட்சிக்கும்
தமிழில்லை! தெருவெங்கும் ஊர்ப்பலகை பேர்ப்பலகை
தமிழெழுத்து கண்கதில்லை! துமியளவும் வேற்றுமொழி
கலவாத தமிழ்நாட்டைக் கான்பது எந்நாளோ?
ஆன்மீகப் பாதையெல்லாம் அடைத்ததந்த வடக்குமொழி!
வளர்கல்விச் சாலையெல்லாம் மேற்குமொழி அரசாட்சி!
தெள்ளுதமிழ்க் கல்ல்வியதைத் திண்ணையிலே கற்றதெல்லாம்
பல்லுடைந்த பாட்டிசொன்ன பழங்கதையாய் போனதையோ!
உருப்படத்தான் தமிழில்லை! திரைப்படமும் தமிழ்மொழியில்
கொடுப்பதற்கு மனமின்றி யூத்தென்றும் நியூவென்றும்
காதலாகும் கனிரசத்தை டூயட்டென்றும் பெயரிடுவார்!
உள்நாட்டில் உணவருந்த மேல்நாட்டுத் திருவோடு!
அயல்ஆசை சுயநலத்தில் பயணம் செய்தால்
ஊர்கூடி செக்கிழுத்த கதையாகும் தமிழ்ப்பயணம்!
சுகம்பெறவே துறைதோறும் தமிழ்நீரைப் பாய்ச்சி
விட்டால் பயனடைவாள் அவளன்று தமிழரன்றோ!!!