Sunday, March 14, 2010

தலையின் பயணம்...


எதையோ தேட
கண்ணில் பட்டது
அழுக்குப் பதிந்த
அச்சுப் பதியாத
ஐந்து ரூபாய்
அஞ்சல் தலை 

அலுவலக உறையில்!

பக்குவமான
அறுவை சிகிச்சை!
தண்ணீர் தொட்டு
தலையையும் உரையையும்
வெட்டி எடுக்க,
அழகாய் நடந்தது
தலையின் பிரசவம்!


அவசரமாக
எழுதி முடிந்தது
அலுவலகப் பணிக்கு
அப்ளிகேஷன்!


வெள்ளைத் தாளை
இரண்டாய் மடித்து
ஓரம் வெட்டி
பருக்கை சோற்றைப்
பதமாய் அப்பி
தயார் ஆனது
அஞ்சல் உறையும் !


வேலை கிடைத்த
நிம்மதி மூச்சுடன்
அடுத்த உறையில்
பயணம் தொடர்ந்த
அஞ்சல் தலைக்கு
முத்தம் பதிதது! 


அஞ்சல் செய்தால்
வேலை முடிந்தது
என்று எண்ணி
இறங்கி நடக்க
கண்ணில் பட்டன
எடுக்கும் நேரம்
எழுதப் படாத
அஞ்சல் பெட்டிகள்
வீட்டுக்கு வீடு! 


தேடி அலைந்து
நால்வரைக் கேட்டால்
அஞ்சல் பெட்டியா
அது அந்தக்காலம் 


கொரியர் என்றால்
தெருவுக்கு நான்கு
அடையாளங்கள்
சொல்ல முடியும்
என்று அலட்சியப்
புன்னகை வீசிசெல்ல 


அஞ்சல் சேவை
மறைந்தே விட்டதா
என்றே எண்ணி
நடந்தேன் நடந்தேன்!


இரண்டு கடையின்
இடையில் கண்டேன்
இடையும் மெலிந்து
தோலும் உரிந்த
சிவப்புச் சிலிண்டரை!


கண்டு பிடித்த
ஆனந்தத்தில்
கவருடன்
கையையும் நுழைத்து
அஞ்சல் செய்தேன்!

பொத்தென்ற
சத்தம் கேட்டு
நிம்மதியாக
நடக்க முனைந்தேன்!


தஞ்சம் அடைந்தது
கால்களில்
மீண்டும்

என் அஞ்சல்உறை!!!!!!!!



ஆதிரா..

2 comments:

  1. மிகவும் எளிய ஆனால் யாருமே கையாண்டிராத கருப்பொருளில் அழகான நெடுங்கவிதை..

    சற்றே நீளம் என்பதைத்தவிர எவ்வித குறையும் இல்லாத அழகுத்தமிழ்க்கவிதை...

    பாராட்டுக்கள் ஆதிரா...!

    கலை

    ReplyDelete
  2. மிக்க நன்றி கலை தங்கள் பாராட்டுக்கு...

    ReplyDelete