Sunday, March 14, 2010

கல்விச் செல்வம்.....

http://www.fotosearch.com/bthumb/OJO/OJO135/pe0033974.jpg


















வாழ்கின்ற
நாட்கள் வரையில்

வழித்துணை என்று எண்ணி
குவித்திடும் செல்வம் ஓர்நாள்
கள்வனால் கவரப் படலாம்

மங்கைதான் மகிழ்ந்து அணியும்
தங்கமும் வைரமும் ஓர்நாள்
நங்கையின் உடலை விட்டே
நீங்கியும் போகக் கூடும்!

சீற்றமே காற்று கொண்டால்
கட்டிய ஆடை கூட
ஒட்டிய உறவை விட்டே
ஓடிடும் அவலம் உண்டு!

நாளுடன் கோளும் பார்த்து
ஆழமாய் அடிக்கல் நாட்டி
கட்டிய மனையும் கூட்
கட்டழல் உண்ணப் போமாம்!

பெருமழை பெய்யும் நாளில்
பெருகிடும் வெள்ளம் தானே
பெற்றுள்ள பொருளை எல்லாம்
பேயென இழுத்து போமாம்!

அமிழ்தினும் இனிமை பயக்கும்
அவயத்து முந்து மகனும்
அரிவையின் காதல் கூடி
பிரிவையும் கொள்ளக் கூடும்!

மாறிடும் கருத்து உணர்வால்
மங்களம் என்னும் மனையும்
வின்மீனும் பகலும் போல
விலகிடும் நிலையும் உண்டு!

நவில்தரும் நூல்நயம் போல்
பிரியலர் கொண்ட நட்பும்
இருவினை சேரும் காலை
செருமுனை ஆகு மன்றோ!

மானுடப் பையுள் அடையும்
உயிர்வளி என்னும் காற்றும்
காலனின் பாசக் கயிற்றால்
கட்டுடல் விட்டுப் போகும்!

கள்வனால் கவர முடியா
ஒருமையில் கற்ற கல்வி
எழுமையும் பெருமை தருமே
முழுமையும் பெறுவீர் அதனை!

வெள்ளந்தான் அடித்துச் செல்லா
விழுமிய செல்வம் கல்வி
வேண்டிய பொருளை ஈந்தும்
ஈண்டுவீர் அதனை இன்றே!

மலையென பெற்ற செல்வம்
அலையென கரைந்த போதும்
நல்வழி காட்டும் கல்வி
செல்வழி பீடு சேர்க்கும்!

கொடையெனும் உயர்ந்த பண்பால்
கொடுத்திடும் கல்வி மட்டும்
பெறுபவர் அன்றி கொடுப்பார்
இருவர்க்கும் இன்பம் பயக்கும்!

எண்ணுடன் எழுத்தும் வாழ்வின்
கண்களாய் வண்ணம் கூட்டும்..
இன்னலைத் தீர்க்கும் செல்வம்
கன்னலாம் கல்வி சேர்ப்பீர்!!!!


ஆதிரா..

4 comments:

  1. அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. கல்வியின் சிறப்பை பெரும் புலவர்களும் கவிஞ்ர்களும் நாடெங்கிலும் பலவாறாகப்புகழ்ந்தே வந்துள்ளனர். அள்ளக்குறையாததும் கள்ளர்க்கிரையாகாததும் வெள்ள்ங்கொண்டேகாததையும் நாம் காலம் காலமாக வாசித்தே வந்திருக்கிறோம்.

    இன்றைய நாளில் இன்றைய தலைமுறைக்கு கல்வியின் சிறப்பை எளிமையாய் வ்ழங்கிட யாருமில்லை என்ற குறையை ஆதிரா தீர்த்துள்ளார்.

    மிக அருமை தோழி... நீ வாழி நின் சுற்றம் வாழிய..!

    கலை

    ReplyDelete
  3. தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி தமிழ்த்தோட்டம்.

    ReplyDelete
  4. என்னையும் என் சுற்றத்தையும் மனமாற வாழ்த்திய கவி நெஞ்சே நீ வாழி நெடிது.

    ReplyDelete