Tuesday, March 16, 2010

வஞ்சி(ச) மகள்...


வருந்தி அழைத்தாலும்
வழக்கிட்டுக் கேட்டாலும்
கன்னடத்து நஞ்சையதில்
தங்கிவிட்ட
வஞ்சி(ச)மகள் காவிரிதான்
என்நெஞ்சத்துக்
கவிமகளோ!
சிந்தித்துப் பார்த்தேன்
நிந்தித்தும் பார்த்துவிட்டேன்!
சந்தத்தில் வந்தவளோ
சரளமாக வருவதில்லை!!

திட்டிஅழைத்தாலும் நடுவர்மன்ற
தீர்ப்பென்ன சொன்னாலும்
தீரேன்உன் வேட்கையென
கொட்டி முழக்கமிடும்
கர்(நாடக)ப் பத்தினிபோல்
பழந்தமிழே நீயிருந்தால்
பட்டுடுத்திப் பார்த்தவள்நான்
கட்டழகிதான் உனக்கு
சல்வாரும் கம்மீசும்
கால்சட்டயாம் ஜீன்சோடு
குதிகாலில் ஹைஹீல்சும்
சேர்த்தழகு செய்வதெவன்????

கட்டுக்குள் அவளஅடங்கி
கதிகலங்க வேண்டாமே
க(ன்)னித்தமிழ் நிலங்கடந்து
காலாற நடைபயின்று
கடல் அடைய நாம் நினைத்தால்
அணைக்கட்டில் அடங்குவதே
ஆத்மசுகம் என்றுரைக்கும்
காவிரிபோல்
பைந்தமிழே!!
சங்கத்தில் நீ இருந்தால்
சாதனைகள் செய்வதெவன்??
சிறகுனக்கு செய்தளிப்பேன்
சிட்டாகநீ பறக்க
எதுகை மோனை முரணென்ற
தளை(டை)யில்லாத் தேரேற்றி
தொடுவானம் செலுத்திடுவேன்!

அளவின்றி அதிகமாக
அவள்மடிதான் சுரந்துவிட்டால்
அன்பின்றி அவிழ்த்துவிடும்
அரக்கர்களை அரவணைத்து
அமுதள்ளித் தருவதுவே
குடகுமலைக் கொடி(ய)அவளின்
குலப்பெருமை என்பதுபோல்
கன்னல்மொழி கவிப்பெண்ணே!
எழுதிக்குவிக்கின்ற கவிஞர்களே
உறவென்று இசைக்கின்றாய்
எழுகின்ற புதுக்கவிஎன்
இழுப்புக்கு எதிர்நின்றாய்!!

கொங்கைவடி சுவையமுதை
அங்குமிங்கும் காட்டிவிட்டு
பருகுமுன்னே பறந்துவிடும்
காவிரிதத பாவை(வி)யைப்போல்
புதுமைஎன்ற கவிமகளே நீ
உத்திகளால் எனைக்கவர்ந்தாய்
எண்ணுகின்ற போதெல்லாம்
புத்தியிலே வட்டமிட்டாய்
ஏடெடுத்து எழுதிவிட
நான் துணிந்தேன்
இரக்கமின்றி
வரமறுத்தாய்!!!!


ஆதிரா..

2 comments:

  1. அழுது அழைத்தாலும் அலுங்கிடா காவிரிக்கு உங்கள் அழகான கவிவரிகள் கவின்மிகு கரைகள்...!

    அன்புடன்
    கலை

    ReplyDelete
  2. வாழ்த்துக்கு மிக்க நன்றி கலை.

    ReplyDelete