சொல்லாத பொருளில்லை
உள்ளம்கொள்ளா மடமைகளைக்
கள்ளமின்றி எடுத்துரைத்தான்!
மீசைதுடிப் பதைக்கவிதை
ஓசையிலே காட்டுவித்தான்
ஆசையெல்லாம் கொட்டிவிட்டு
ஏசைகொண்டான் வாழும்நாளில்!
காக்கையைச் சாதியென்றும்
கடலைத்தன் கூட்டமென்றும்
ஓதிய காரணந்தான்
வீதியில் ஒதுக்கப்பட்டான்!
யாப்புக்கட்டுக்குள் சிறைப்பட்ட
மரெபென்ற கவிப்பெண்ணின்
விலங்கொடித்து வசனமென்னும்
சிறகேற்றிப் பறக்கவிட்டான்!
சுதந்தரப் பயிர்செழிக்க
நிதம்நிதம் உரமிட்டான்
கனிகுலுங்கும் வேளையிலே
காணாது சென்றுவிட்டான்!
இளங்கோகம்பனை வாசித்தான்
கண்ணனைப் பூசித்தான்
காலனையோ ஏசித்தான்
கன்னித்தமிழையே நேசித்தான்!
மீசைநரைக்கும் முன்மூச்சின்
ஓசையை நிறுத்திவிட்டான்
மீசையிலும் வெள்ளையனுக்கு
ஆசைவரக் கூடாதென்று!!!!
ஆதிரா..
மிக மிக அருமையான கவிதை ஆதிரா...
ReplyDeleteவார்த்தைகள் இல்லை பாராட்ட...
உங்கள் கவிதைக்கு என் எளிய பரிசாக என் கண்ணோட்டத்தில் பாரதியை சமர்ப்பிக்கிறேன்...
ஏற்றுக்கொள்வீர்களா...?
பாரதி!
அந்த ஆகாயத்தையே
வளைத்து குடிசையாக்கிவிடும்
வல்லமை கொண்டவன் நீ!
தமிழ்ப் புலவர்க்ள் எல்லோரும்
மன்னர்களின் மோவாய்க்கட்டையின்
நீள அகலத்தைப் புகழந்தபோது
நீ மட்டுமே
தாயகத்தின் தாரகமந்திரம் தந்து
தமிழன்னையின் சுப்ரபாதம் வாசித்தாய்!
புல்லாங்குழலால் அடுப்பூதிய
புல்லுருவிப்புலவர்களுகு மத்தியில்
நீ மட்டுமே அதில்
தமிழ் ராகங்கள் வாசித்தாய்!
வடமொழிக்கு வால் பிடித்த
வல்லவராயன்களுக்கு மத்தியில்
சொற்சமர் நடத்தி
தமிழன்னைக்கு மகுடம் ஏற்றிய
சொல்லவராயன் நீ!
அடுப்பூதிய பெண்களின்
இடுப்பொடிந்த நிலையை மாற்றி
தலை நிமிரச் செய்தவன் நீ!
மனிதர்களிலும் பறவைகளிலும்
விலங்குகளிலும் புற்களிலும்
வித்தியாசம் கண்டதில்லை நீ!
தேடிதேடிச் சமத்துவம் சமைத்து
பறிமாறிக்களைக்காத
பகுத்தறிவுப் பரிசாரகன் நீ!
உனது கவிக்கனிகளால்
பல சுதந்திரப் பறவைகள்
உயிர் ஜனித்தன!
முப்பத்தொன்பது வருடங்களை
முத்தமிழுக்களித்துவிட்டு
மீதிச் சதங்களைத்
தமதவைக்குச் சேர்த்துக்கொண்ட
இறைவன் ஒரு சுய நலக்காரனே!
கவிக்குக் கவிப்பரிசு வழங்கிய கவியே உன் கவியை, வாழ்த்தைத் தலை வணங்கி ஏற்றுக்கொள்கிறேன்.
ReplyDeleteபாரதிக்கு தந்த கவிதை
ReplyDeleteபடம்பிடித்து சொன்னதுபோல
இருந்தது உண்மை.
பாராட்டுக்கள் தோழியே.
முண்டாசு கவிக்கு ஒரு கவி மகுடம்
ReplyDeleteவருகை புரிந்தமைக்கும் அழகிய தமிழில் பாராட்டியமைக்கும் என் மனமார்ந்த நன்றி நண்பரே..
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மணி..
ReplyDeleteவாசித்து, பூசித்து,ஏசித்து , நேசித்ததை படித்ததும் சொக்கிவிட்டேன் ...வாழ்த்துக்கள் ஆதிரா...நன்றி சுட்டியதற்கு...
ReplyDeleteஅருமை. குறிப்பாக முத்தாய்ப்பு வரிகளாம், 'மீசையிலும் வெள்ளையனுக்கு ஆசை வரக் கூடாதென்று' வரி. .
ReplyDeleteஏசித்தான், (ஏசினான்) நிதம் நிதம் (நித்தம்) சந்த நயத்துக்கு பயன் பட்டாலும் அபபடி வார்த்தை வராது என்றே நினைக்கிறேன். நிதம் நிதம் வார்த்த்தையாவது நித்தம் நித்தம் நெல்லுச்சோறு மாதிரி (பாட்டுக்கு, சந்தத்துக்குப் பொருந்தி வர) வரலாம்! ஏசித்தான் இல்லையென்று நினைக்கிறேன். எனினும், சொல்ல வந்த கருத்து புரிகிறது. அதுதானே முக்கியம்...இல்லையா!
அன்பு பத்மநாபன்,
ReplyDeleteதங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.
அன்புள்ள ஸ்ரீராம்.
ReplyDeleteமுதல் வருகை. வருக! வருக! முதல் பதிவு. வெறும் பாராட்டு,வாழ்த்து என்று எழுதாமல் தங்களுக்கு ஒப்பாத கருத்துகளைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. இதுதான் ஆரோக்கியமான ஊக்கப்பரிசு.
நிதம்நிதம் என்னுன் சொல்லாட்சி உள்ளது. நிதம் - தினமும். (கோனார் தமிழ்க் கையகராதி ப. 401, பழனியப்பா பிரதர்ஸ்) நான் இங்கு பயன் படுத்தியது கண்டிப்பாகச் சந்தத்திற்காகவும்.
ஏசித்தான் பற்றி. இது ஒரு புதிய சொல்லாட்சியாக இருக்கக்கூடாதா என்ற ஆசைதான்.
தழுவி என்பதை நம் முன்னோர்கள் தழீஇ என்று எழுதுகின்றனர். சிலம்பு + அதிகாரம் = சிலம்பதிகாரம். ஆனால் சிலப்பதிகாரம் என்று எழுதியதை நாம் வ்லி மிகுந்து சிலப்பதிகாரம் ஆயிற்று என்று இலக்கணம் சுட்டிப் படிக்கிறோம். இது போல எண்ணற்ற சொல்லாட்சிகள் உள்ளன. வாய்ப்பு கிடைக்கும்போது தொகுத்துத் தருகிறேன்.
அவர்கள் சான்றோர்கள். நான் அப்படி இல்லை. இருந்தாலும் ஒரு புது சொல்லாக்கும் முயற்சிதான். தவறா?